மாநாடு 26 April 2022
ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பது முதுமொழி ஆனால் தஞ்சாவூரில் 2012ஆம் ஆண்டு அண்ணா திமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த ஆர். வைத்தியலிங்கம் அவர்களால் மாமன்னன் ராசராசன் நடைபாதை என்கிற பெயரில் பணிகள் துவக்கி வைக்கப்பட்டு தஞ்சாவூர் பெரிய கோவில் பக்கத்தில் இருக்கும் கல்லணை கால்வாயில் கரைகளின் இரு புறங்களையும் சுத்தம் செய்து பெரிய கோவிலில் இருந்து இர்வின் பாலம் வழியாக மூப்பனார் சாலை வரை செப்பனிட்டு நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்றது.
அதன்படி நடை பாதை அமைக்கப்பட்டது நடைப்பயிற்சிக்கு வருபவர்கள் இளைப்பாறுவதற்காக 22 சாய்வு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது, பொழுது சாய்ந்த மாலை நேரங்களில் நடந்து செல்பவர்களுக்கு வெளிச்சம் தரும் வகையில் 43 இடங்களில் அலங்கார மின் விளக்குகள், புல் தரைகள் அமைக்கப்பட்டிருந்தது, இருபுறமும் கம்பித் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக இருந்தது, இந்த பணிகளுக்காக நடைபாதையில் வண்ண ஓடுகள் அமைப்பது முதல் மின் விளக்குகள் பொருத்த வரை அனைத்து பணிகளுக்கும் சேர்த்து 2 கோடி 35 லட்ச ரூபாய் செலவிடப்பட்டது.

இர்வின் ஆற்றுப் பாலம் இடிக்கப்பட்டு வேலை நடந்து கொண்டிருப்பதால் அந்த நடைபாதையின் தற்போதைய நிலை என்னவென்று பார்ப்பதற்காக சென்றிருந்தோம். அந்தப் பாதையை தற்போது பயன்படுத்த முடியாத அளவிற்கு செடிகொடிகள் வளர்ந்திருந்தன அதுமட்டுமல்லாமல் பாதையின் பாதுகாப்பிற்காக ஆற்றோரங்களில் போடப்பட்டிருந்த இரும்பு தடுப்புக் கம்பிகளில் பெரும்பாலானவை திருடர்களால் திருடப்பட்டிருந்தது ,சாய்வு நாற்காலிகள் இத்தனை இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் இருக்கிறது,



மின் விளக்குகள் இருந்ததற்கான அடையாளமாக ஒரு சில இடங்களில் விளக்கு எரியும் கம்பி மட்டும் ஒடிந்து இருக்கிறது,
மேலும் நடைபாதை போடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தூண்களில் இரண்டு தூண்கள் மிகவும் பழுதடைந்து இருக்கின்றது அதில் ஒரு தூண் தரைக்கும்


நடைபாதைக்கும் இடையில் துண்டாகி நிற்கின்றது இதன் காரணமாக அந்த இடத்தில் நடைபாதை தொங்கு பாலம் போல் காட்சியளிக்கின்றது, இதனையும் சரி செய்து வைத்தால் மட்டுமே மக்கள் வரிப்பணத்தில் 2 கோடி 35 லட்ச ரூபாய் செலவு பண்ணியதற்கு நடைபாதையாவது மிச்சமிருக்கும். காலை நேரங்களில் நடை பழகுபவர்கள் அதை பயன்படுத்த முடியும். இதனை உடனே விரைந்து சீர் செய்ய வேண்டும் காலம் தாழ்த்தினால் ஆற்றில் தண்ணீர் வந்துவிடும் அதன் பிறகு இந்த வேலையை செய்ய முடியாது.இதனை உணர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் சீரமைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது. தஞ்சாவூரில் பல தெருக்கள் நடந்து செல்லவே முடியாத அளவிற்கு பழுதாகி உள்ளது மக்களால் பயன்படுத்தப்படும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இனியாவது மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படுகின்ற வேலைகளை சரியாக முறையாக திட்டமிட்டு செய்தால் மட்டுமே அது மக்களை முழுமையாக சென்றடையும் என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.
2 கோடி 35 லட்ச ரூபாய் ஆற்றில் போட்ட பணம் பழுது நீக்கி சரி செய்ய படுகிறதா அல்லது கடலில் போட்ட பெருங்காயமாக கரைந்து விடுகிறதா என்பதையும் நமது மாநாடு இதழின் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.
