சனீஸ்வரர் கோயில்
500 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடுமேய்க்கும் சிறுவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட யந்திர சனீஸ்வரர் கோயில்.
நவகிரகங்களில்,ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனிபகவான்.நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நடுநிலையுடன் பலன்களைத்தருபவர் என்று கருதப்படுவதால் அவருக்கு நீதிமான் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. ஜோதிடர்கள் ஆயுள்காரகன் என்ற சிறப்பு பெயரும் சனீஸ்வர பகவானுக்கு இருக்கிறது என்கிறார்கள்.
பொதுவாகச் சனிபகவானை,விக்கிரக வடிவத்தில் பல கோயில்களில் தரிசித்திருப்போம்.ஆனால், யந்திர வடிவத்தில் சனீஸ்வர பகவான் அருள்புரியும் கோயில் வேலூர் மாவட்டம் ஆரணியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலிருக்கும் ஏரிக்குப்பம் என்ற ஊரில் அமைந்திருக்கிறது.
உயரமான கல்லில்,யந்திர வடிவத்தில் அமைந்திருக்கும் இந்த சனீஸ்வரர், சித்தர்களால் வடிவமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.ஐந்தரை அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட கல்லில் கிழக்கு நோக்கிக் காட்சிதருகிறார் யந்திர வடிவ சனீஸ்வரர்.பீஜாட்சர மந்திரங்கள் பொறிக்கப்பட்ட யந்திரத்தின் மேல் இடப்புறம் சூரியனும்,வலப்புறம் சந்திரனும் இரண்டுக்கும் நடுவில் சனீஸ்வர பகவானின் வாகனமான காகமும் காணப்படுகின்றன.
அதற்குக் கீழே அறுகோண வடிவத்தில் மந்திர அட்சரங்கள் கொண்ட யந்திரம் ஒன்று வரையப்பட்டிருக்கிறது. அடுத்து லட்சுமி கடாட்ச யந்திரமும், நீர் நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் காணப்படுகிறது. அறுகோண யந்திரத்திலுள்ள மந்திர அட்சரங்கள் இடவலமாகப் பொறிக்கப்பட்டிருக்கின்றன. கண்ணாடியை முன்னால் வைத்துப்பார்த்தால் தான் அந்த மந்திர அட்சரங்களை நம்மால் வாசிக்க முடியும். அவ்வளவு நுணுக்கமாக இந்த யந்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.
திருநள்ளாரில் அமைந்துள்ள சனீஸ்வர பகவான் போலவே இங்கும் யந்திர சனீஸ்வரர் கிழக்கு நோக்கியே காட்சி தருகிறார். ஏழரைச்சனி, அட்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, கண்டகச்சனி ஆகியவற்றால் பாதிக்கப்படும் அன்பர்களின் துன்பங்களை யந்திர வடிவ சனீஸ்வரர் போக்குவதாகப் பக்தர்கள் சொல்கிறார்கள்.
யந்திர சனீஸ்வரர் கோயில் ஏற்பட்டதன் பின்னணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.
கி.பி.1535-ம் வருடம் நாயக்க மன்னரின் படைத்தளபதி வையாபுரி, குதிரை மீதேறி இந்த ஊரின் வழியாக சென்று கொண்டிருந்தாராம். அப்போது குதிரையிலிருந்து விழுந்த வையாபுரிக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாம்.வையாபுரியின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்திலிருந்த மக்கள் அந்த இடத்துக்கு வந்துவிட்டார்களாம். அப்போது அவர்களில் ஒரு பெண்ணுக்கு அருள் வந்து, “இந்த இடத்தில் சனிபகவானுக்கு ஒரு கோயில் கட்டி வழிபட்டால், வையாபுரியின் கால் சரியாகிவிடும்” என்று கூறினாராம்.
வையாபுரியும் சனீஸ்வர பகவானுக்குக்கோயில் கட்டுவதாக வேண்டிக்கொண்டார். வேறெங்கும் இல்லாத வகையில் மிகச்சிறப்பான முறையில் சனீஸ்வரருக்கு ஆலயம் கட்ட நினைத்த வையாபுரி, சித்தர்கள் மற்றும் வேத விற்பன்னர்களுடன் ஆலோசித்து, மந்திர அட்சரங்களால் ஆன யந்திர சனீஸ்வரரை வடிவமைத்து, கோயில் கட்டி, பிரதிஷ்டை செய்தாராம். தொடர்ந்து பூஜைகள் நடைபெறவும் வழிவகை செய்தாராம் வையாபுரியின் உடல் நலம் மீண்டதாக தெரிகிறது.
காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் வழிபடப்படாமல் புதர் மண்டிப்போன கோயில் சில வருடங்களுக்கு முன்னர் தான் ஆடு மேய்க்கும் சிறுவர்களால் கண்டறியப்பட்டது. பின்னர் தொல்லியல் துறையினர் இந்த இடத்துக்கு வந்து ஆய்வு செய்தபோதுதான், நாயக்க மன்னரின் படைத்தளபதி வையாபுரியின் வரலாறு தெரிய வந்திருக்கிறது. பிறகு, ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கோயிலைப் புதுப்பித்து நித்திய பூஜைகளுக்கு வழிசெய்தனர்.
சித்தர்களாலும் வேத விற்பன்னர்களாலும் சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட யந்திர சனீஸ்வரரை வழிபட்டால், சகல தோஷங்களும் வியாதிகளும் விலகும் என்பது மக்கள் நம்பிக்கை.
வாரம்தோறும் சனிக்கிழமைகளில் ஏரிக்குப்பம் கிராமம் திருவிழாக்கோலம் பூண்டுவிடுகிறது. பல்வேறு ஊர்களிலிருந்து, வரும் பக்தர்கள் ஏரிக்குப்பம் சனீஸ்வர பகவானை வணங்கி அவரது அருள் பெற்று தோஷம் நீங்கிச் செல்கிறார்கள்.
Location:https://goo.gl/maps/xkwzYQfTEzr8n62P9