மாநாடு 26 February 2022
இப்போது சாஸ்த்ரா பல்கலைக்கழக கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது:
இந்த விவகாரத்தில் 3 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.இந்தச்சூழலில் தற்போதைய அரசு நில சீர்த்திருத்த இயக்குநர் ஜெய்ந்தி ஐஏஎஸ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்திருந்தது.அந்தக்குழு சாஸ்த்ரா பல்கலைக்கழக கட்டடங்களை ஆய்வு செய்து வரும் மார்ச் 24ஆம் தேதிக்குள் இந்தக் கட்டடங்களை இடித்து தமிழ்நாடு அரசிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.அந்தப் பரிந்துரை தொடர்பான நோட்டீஸை தற்போது தமிழ்நாடு அரசு சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் ஒட்டியுள்ளது.
இந்த பிரச்சனை தொடர்பாக 2018ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் சாஸ்த்ரா ஆக்கிரமித்து இருக்கின்ற நிலங்களை உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அறிக்கை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் விதிமுறைகளை மீறி அரசின் சிறைத்துறைக்கு சொந்தமான இடங்களை அரசு அதிகாரிகளின் துணையோடு ஆக்கிரமித்த கல்லூரி வளாக கட்டிடங்களை கட்டி இருந்தது அதை இடிப்பதற்கு 2018 ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் விபரம் வருமாறு :
தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலம் 58.17 ஏக்கரை மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் ஆட்சிக் காலத்தில், தஞ்சாவூரில் திறந்தவெளி சிறைச்சாலை அமைப்பதற்காக 58.17 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அரசு புறம்போக்கு நிலமான இந்த இடத்தை விசிபி என்ற கல்வி அறக்கட்டளை சாஸ்த்ரா கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்து கட்டடம் கட்டிவந்தது.
தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷன், சிறைச்சாலை கட்டுவதற்கான செலவை மதிப்பீடு செய்து அதற்கான பணியைத் தொடங்கும்போது இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலை கட்ட வேண்டிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைச்சாலைத் துறை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதியிருந்தது.
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் செயலாளர் மற்றும் தாளாளர், பல்கலைக்கழக வளாகத்துடன் ஒட்டியுள்ள நிலத்தை தங்களுக்குத் தருமாறும், அதற்குப் பதிலாகப் புதுக்கோட்டை மாவட்டத்தில் தட்சன்குறிச்சியில் உள்ள 70.56 ஏக்கர் நிலத்தை எடுத்துக்கொள்ளுமாறும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். எனினும் இந்தக் கோரிக்கையை அரசு 1996ஆம் ஆண்டு நிராகரித்தது.
இதையடுத்து, சிறைச்சாலைத் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டிய சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அங்கிருந்து வெளியேற மாவட்ட அதிகாரிகள் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்த வெளியேற்ற நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி சாஸ்த்ரா பல்கலை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கைத் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 2017 ஆகஸ்ட் 11ஆம் தேதி தீர்ப்பளித்தனர்.
அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்திற்கு ஈடாக ரூ.10 கோடியைப்பெற்றுக்கொண்டு அந்த நிலத்தை அவர்களிடமே ஒப்படைக்கலாம் என்று நீதிபதி நூட்டி ராமமோகன ராவ் தீர்ப்பு வழங்கினார். ஆனால் மற்றொரு நீதிபதியான எஸ்.எம்.சுப்பிரமணியம், பல கோடி மதிப்புள்ள அரசு சொத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களிடமே திரும்பி ஒப்படைப்பது என்பது தவறான முன்னுதாரணமாகிவிடும்.எனவே, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை 4 வாரங்களுக்குள் அரசு மீட்க வேண்டும், ஆக்கிரமிப்புக்குத் துணைபோன அதிகாரிகள், ஊழியர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பையடுத்து, இந்த வழக்கின் இறுதி முடிவுக்காக 3ஆவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.