Spread the love
  • *சீமான் கண்டனம்*

  • குடியரசு தின அணிவகுப்பில் ‘கப்பலோட்டிய தமிழர்’ பாட்டன் வ.உ.சி., வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் ஆகியோரது உருவப்படங்கள் தாங்கிய அணிவகுப்புக்கு இடமில்லையெனும் பாஜக அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாட்டு விடுதலைக்காக, சுதேசிக்கப்பல் விட்டு, வெள்ளையர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி, அதற்குப் பரிசாக இரட்டை ஆயுள் தண்டனையைப் பெற்று, கொடும் சிறைவாசத்தை அனுபவித்து, தனது வாழ்வையே இழந்த தியாகச்சீலர் பாட்டன் வ.உ.சி.யையும், தாய் நிலத்தின் விடுதலைக்காக வெள்ளையர்களை எதிர்த்துச் சண்டையிட்டு, இழந்த நிலத்தை மீட்டெடுத்தப் பெரும்பாட்டி வேலுநாச்சியாரையும் புறக்கணிக்கும் பாஜக அரசின் செயல் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் அவமதிக்கும் கொடுங்கோன்மையாகும். எந்தவொரு தேசிய இனத்தின் மக்களும் செய்திடாத அளவுக்கு இந்நாட்டின் விடுதலைக்காக அளப்பெரும் ஈகங்களைச் செய்து, வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி, உயிரை விலையாகக் கொடுத்த தமிழ்ப்பேரினத்தைச் சார்ந்த முன்னோர்களைப் புறந்தள்ளுவது மன்னிக்கவே முடியாதப் பச்சைத்துரோகமாகும்.

நாடறியாது எனக்கூறி, எமது முன்னோர்களுக்குக் குடியரசு தின அணிவகுப்பில் இடமளிக்கப்படாதென்றால், அண்ணல் காந்தியடிகளையும், புரட்சியாளர் அம்பேத்கரையும்தான் தாண்டி எவருக்கு இடமளிக்க முடியும்? நாடறியப்படாதவர்களை அங்கீகரிக்க முடியாதென்றால், எதற்காக 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வல்லபாய் பட்டேலுக்குச் சிலை வைத்தார்கள்? குஜராத்தில் பிறந்த காந்தியைத்தானே நாடறியும்! அவருக்குத்தானே அவ்வளவு பெரிய சிலை வைத்திருக்க வேண்டும்! அதற்கு மாறாக, வல்லபாய் பட்டேலுக்கு எதற்குச் சிலை வைத்தார்கள்? ஈகங்கள் செய்து அறியப்படாத தலைவர் பெருமக்களை அடையாளப்படுத்தி, வரலாற்றை மீட்டெடுத்து அங்கீகரிக்க வேண்டியதுதானே ஓர் அரசின் பொறுப்பும், கடமையும்! அதனைச் செய்யாது, தட்டிக்கழித்துவிட்டு முழுவதுமாக அவர்களை மறைத்து இருட்டடிப்பு செய்வது எந்தவிதத்தில் நியாயம்?

நாட்டின் விடுதலைக்காக எவ்விதப் பங்களிப்பையும் செய்யாது வெள்ளையர்களிடம் அடிபணிந்தப் பின்புலத்தில் தோன்றிய பாஜக, இந்நாட்டின் மீட்சிக்காக செக்கிழுத்து, சிறைப்பட்டு, வதைபட்டு, பொருளியல் வாழ்வை இழந்து, தனதுயிரையே ஈகம்செய்திட்ட தமிழ்த்தேசிய இனத்தைச் சார்ந்த முன்னோர்களை, விடுதலைப்போராட்ட வீரர்களை அடையாளப்படுத்த மறுப்பது தமிழர் விரோதப்போக்கின் உச்சமாகும். இதனை வன்மையாக எதிர்க்கிறேன்! இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்!

இதுமட்டுமல்லாது, கேரளாவைச் சேர்ந்த நாராயணகுரு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோஸ் என இந்நாட்டின் முதன்மைத் தலைவர் பெருமக்களையும் புறக்கணிப்பு செய்திருப்பது எதேச்சதிகாரப்போக்கும், அதிகாரத்திமிரும் கொண்டு பாஜக செய்யும் கொடும் அநீதியாகும். இவ்வாறு, தமிழர்களுக்கும், இன்ன பிற தேசிய இனங்களுக்குமெதிராக மோடி அரசு செய்யும் தொடர் அட்டூழியங்களுக்கு எதிர்விளைவாக, வரவிருக்கும் ஐந்து மாநிலச் சட்டமன்றத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள் என அறுதியிட்டுக் கூறுகிறேன்

6980cookie-checkசீமான் கண்டனம் தியாகத்தலைவர்களை புறக்கணிப்பதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!