மாநாடு 21 March 2022
ஒரு நாட்டின் எதிர்காலம் பள்ளி அறையில் தான் ஆரம்பமாகிறது என்கிறான் ஒரு அறிஞன்.
ஆனால் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரசு பள்ளியில் நடந்த நிகழ்வு இந்த நாடு அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
ஆசிரியர், மாணவர் உறவு என்பது கருவறையில் சுமக்கும் தாய் மகன் உறவை விட மேன்மையானது. அப்படியாப்பட்ட உறவில் சமீபகாலமாக அதிக விரிசல்கள் உருவாவதை நாம் கண்டு வருகிறோம் இது நல்லதா என்று எண்ணி சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் ஒவ்வொருவரும் நேரம் ஒதுக்கி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வீட்டில் இருக்கும் வரைதான் ஒரு குழந்தை வீட்டிற்கு சொந்தம் வீட்டு வாசலை விட்டு வீதிக்கு வந்து விட்டாலே அந்த குழந்தை சமுதாயத்திற்கு நாட்டிற்கு சொந்தம் அப்படியாப்பட்ட குழந்தைகளை உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள், மாணவர்கள் அரிவாளோடு எங்களை வெட்ட வருகிறார்கள் என்று தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது சமூகத்தில் அக்கறை கொண்ட அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் அரசு பள்ளிகளில் நடந்திருப்பதாவது:
தேனி மாவட்டத்தில் தேவாரம், தேவதானப்பட்டி, G.கல்லுப்பட்டி பகுதிகளில் அரசு பள்ளி இயங்கி வருகிறது இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கத்தியோடு வகுப்பறைக்கு வருவதும் பெண் ஆசிரியர்களை கிண்டல் செய்வதும் அதைக் கண்டிக்கும் ஆசிரியர்களை அடிக்கடி மிரட்டுவதும் நண்பர்களோடு சேர்ந்துகொண்டு அரிவாளை காட்டி வெட்டி விடுவேன் என்று மிரட்டல் விடுவதுமாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்திருக்கிறது.
ஆசிரியைகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்ததன் பேரில் அவரும் மாணவர்களை கூப்பிட்டு கண்டித்த போதும் மாணவர்கள் திருந்த வில்லையாம். அதனையடுத்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முதுகலை பட்டதாரி சங்க ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு வேண்டும் என்ற முழக்கங்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .
அதனையடுத்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகனிடம் கோரிக்கை மனு அளித்தார்கள். அதில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மது குடித்துவிட்டு போதையோடு வருவதாகவும் கத்தியை காட்டி மிரட்டுவதாகவும் இதனால் எங்களுக்கு பள்ளிக்கு வரவே ஒருவித அச்சமாக இருப்பதாகவும் எனவே எங்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க பொருளாளர் அன்பழகன் கூறும்போது தேவதானப்பட்டி அரசு பள்ளியில் மாணவர்கள் ஆசிரியரை தாக்கும் சம்பவமும் நடந்ததாக மனவருத்தத்தோடு கூறுகிறார்.
இதைப் பற்றி முன்னாள் ஆசிரியர் ஒருவரிடம் கேட்டபோது முன்பெல்லாம் ஆசிரியர் மாணவர்கள உறவு என்பது புனிதமாக கருதப்பட்டது புனிதமாகவும் இருந்தது. பிள்ளை வீட்டில் அடங்கவில்லை என்றால் ஆசிரியரிடம் கொண்டுவந்து ஒப்படைத்து ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து நீங்கள்தான் என் பிள்ளையை இந்த சமூகத்தில் நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டுமென்று பெற்றோர்கள் விடுவார்கள்.அந்த குழந்தையை தன் குழந்தையாக எண்ணி ஆசிரியர்கள் நல்வழிப்படுத்தி சமூகத்தில் உயர்ந்த நிலையில் வரும்படி வார்ப்பார்கள்.
ஆனால் இன்று அது முழுவதுமாக மாறி கல்வி என்பது காசு கொடுத்து வாங்கும் பண்டம் போல ஆகிவிட்ட காரணத்தால், பணம் கட்டுகிறோம் படிக்க மட்டும் கற்றுக் கொடுங்கள் என்கிற போக்கு அதிகரித்து வருகிறது. இருந்தபோதும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.அந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் சமீபகாலமாக ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது என்பது ஒரு ஆறுதலான செய்தியாக இருந்தாலும் இவ்வாறு சில பள்ளிகளில் நடப்பதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாவிட்டால் அது அடுத்தடுத்த மாணவர்களுக்கும் தொற்றிவிடும் அபாயம் இருக்கிறது என்றார்.
சமூக ஆர்வலர்கள் கூறும்போது: சமூகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் பிரச்சனை என்றால் தீர்த்து விடலாம் ஆனால் ஒட்டுமொத்த சமூகமே பிரச்சனையாக மாறிவிட்டால் தடுப்பது என்பது முடியாத காரியமாக ஆகி விடும் என்பதை உணர்ந்து இந்த பிரச்சனைகள் ஏன் வருகிறது என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது கற்றுக் கொள்ள வந்தவர்கள் கத்தியோடு வருவதற்கு காரணமாக இருப்பது அரசே ஏற்று நடத்தும் மதுவும், மதுக்கடைகளும் தான் என்பது தெரிய வருகிறது.இந்த சமுதாயத்தில் பல குற்றங்களுக்கும், பாலியல் அத்து மீறல்களுக்கும், அடிப்படைக் காரணமாக இருப்பது மதுநோய் தான் என்பதை அறிவார்ந்த அனைவரும் அறிவோம்.
அப்படியிருக்கையில் தமிழகத்தின் தந்தையாக முதல்வர் பொறுப்பை ஏற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள் மது பாட்டிலுக்கு எப்படி 10 ரூபாய் உயர்த்தலாம் என்கிற போக்கை விட்டுவிட்டு மதுக்கடைகளை எப்படி மூடலாம் என்றாய்ந்து உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே மதியம் மதுக்கடைகள் திறந்தது போக இப்போதெல்லாம் காலையிலிருந்து இரவு வரை மதுக்கடைகளில் விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதன் காரணத்தால் பலரும் போதையில் பாதை மாறிப் போய் விடுகிறார்கள். இதற்கு மாணவர்களும் விதிவிலக்கு இல்லை என்பதை தான் இந்தப் பள்ளிகளில் நடக்கும் செயல்கள் நமக்கு எடுத்துரைக்கின்றது .
எனவே தமிழகத்தின் முதல்வர் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகளை விட்டு நிறைவேற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த கேடுகளுக்கெல்லாம் அடிப்படை காரணமாக இருக்கும் மதுக்கடைகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும்.
கொரோனா மட்டும் நோயல்ல கொடியது குடிநோயும் தான் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும் என்றார்கள்.
முதல்வர் ஸ்டாலின் மனது வைத்தால் மதுக்கடைகளை இழுத்து மூடலாம். குற்றங்களை தடுக்கலாம் மனது வைப்பாரா? குற்றங்களைத் தடுப்பாரா? பொருத்திருந்து பார்ப்போம்.