மாநாடு 29 April 2022
தஞ்சாவூரில் பல ஆண்டுகளாக அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டுப்பட்ட கடைகளும், கட்டிடங்களும் தஞ்சாவூர் மாநகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்ற சரவணகுமாரின் நேர்மையான சீரிய முயற்சியால் மீட்டெடுக்கப்பட்டது. இதன் காரணமாக தஞ்சாவூர் மாநகராட்சி ஊழியர்களுக்கு கூட சம்பளம் போட முடியாமல் இருந்த மாநகராட்சி நிர்வாகம் தற்போது சம்பளம் போட்டது மட்டுமல்லாமல் கையிருப்பாக தொகையும் வைத்திருப்பதாக தெரிகிறது.மேலும் தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் பர்மாவிலிருந்து வந்த அகதிகளுக்காக அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் விதத்தில் ஏறக்குறைய 1980ஆம் ஆண்டு வாக்கில் கடைகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டது.
எழில்மிகு நகரமாக மாற்ற தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட ஊர்களில் தஞ்சாவூரும் ஒன்று அதன்படி எழில் மிகு நகர சாலை விரிவாக்கத்திற்காக அரசு நிலங்களை மீட்கும் பணியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஈடுப்பட்டிருந்தது.
அதன்படி அண்ணா சாலை பர்மா பஜார் என்று அழைக்கப்பட்ட பகுதியில் இருந்த கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது, இதனைத் தொடர்ந்து விஜயா திரையரங்கம் சாலையிலுள்ள பர்மா அகதிகளுக்காக கொடுக்கப்பட்ட கடைகளில் பெரும்பாலான கடைகள் அரசுக்கு சேர வேண்டிய வாடகை மற்றும் வரி பாக்கி லட்சக்கணக்கில் இருப்பதாக அதை ஒரு காலக் கெடு கொடுத்து அதற்குள் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது அதில் சில கடை உரிமையாளர்கள் நிலுவையில் பாதி தொகையை கட்டி விட்டதாகவும், வேறு சிலர் முழு தொகையையும் கட்டிவிட்டதாகவும் ,மீதமிருந்த ஏறக்குறைய முப்பது கடைக்காரர்கள் தொகையை கட்டவில்லை என்றும் அதை உடனடியாக கட்டவில்லை என்றால் கடைகள் சீல் வைக்கப்படும் என்றும் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டது.


அதன்படி நிலுவைத் தொகையை கட்டாத கடைகளை ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி காலை பர்மா பஜாருக்கு காவலர்கள் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் என பலரும் ஆய்வு செய்து எந்தெந்த கடைகளில் நிலுவை உள்ளது என்று அறிவிப்பு செய்து அந்த கடைகளை இழுத்து பூட்டி சீல் வைத்தனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சீல் வைக்கப்பட்ட கடைகள் மாநகராட்சி பகுதியில் இருந்தாலும்கூட புதுப்பட்டினம் பஞ்சாயத்தை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக சீல் வைக்கப்பட்ட கடைகளில் பல கடைகளுக்கு வெளியே எப்போதும் போல ஏற்கனவே அங்கு கடை வைத்திருந்தவர்கள் இப்போதும் வெளிப்படையாக தங்களது தொழில்களை அதே இடத்தில் செய்து வருகிறார்கள் .

இது இப்படி இருக்க மாநகராட்சி ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றியப் பிறகும் கூட பல இடங்களில் வெயிலுக்காக படுதா மற்றும் நெகிழி விரிப்புகள் போடப்பட்டு மீண்டும் நவீன முறையில் ஆக்கிரமிப்பு செய்வதை காண முடிகிறது. இது மாநகராட்சி ஊழியர்கள் பலருக்கும் தெரியும் என்றும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக அவர்களுக்கு சேர வேண்டியதை செய்து கொண்டிருப்பதாகவும் அதனால்தான் அவர்களும் அமைதியாக இருப்பதாக தெரிய வருகிறது. இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் இருப்பதை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரைநூற்றாண்டு ஆக்கிரமிப்புகளை ஒரு ஆண்டில் மீட்டெடுத்த ஆணையர் சரவணகுமாரின் கவனத்திற்கு கொண்டு சென்றால் போதும் மாநகராட்சியில் உள்ள களைகளையும் அகற்றி சுத்தம் செய்வார் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.
