மாநாடு 18 மே 2023
மருத்துவம் பார்க்கும் இடத்தை விட மருத்துவத்தை சரியான நேரத்தில் சரியாக நோயாளிகளுக்கு பார்ப்பது தான் முக்கியம் என்று மருத்துவத்தை நன்கு அறிந்த அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்ட விபத்துக்குள்ளான நோயாளிகளை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தால் கூட நேரத்திற்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆட்களும் பற்றாக்குறையாக தான் இருக்கிறார்கள். படுத்து முதலுதவி செய்வதற்கு கூட போதுமான படுக்கைகள் இங்கு இல்லாத சூழலில் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்காகின்றார்கள். நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்களும், செவிலியர்களும் கூட துன்பப்படுகிறார்கள். அதேபோல உடல் பரிசோதனைக்கு எங்கு செல்ல வேண்டும் என்று படித்த நமக்கே தெரியாத சூழல்தான் இன்றும் இருக்கிறது .
இதையெல்லாம் போக்கும் விதமாக குறைகளை சுட்டி காட்டி ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு முன்பாகவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அங்கு உள்ள குறைகளை ஒளிப்பதிவு செய்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மேல்மட்ட பொறுப்பில் இருக்கும் மருத்துவர்களை சந்தித்து மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளையும் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் பற்றாக்குறை உட்பட அனைத்து பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி பேசியதற்கு மருத்துவர்கள் இவை அனைத்தும் சரி செய்யப்படும் என்று நம்மிடம் பேசியது இன்றும் மாநாடு youtube சேனலில் இருக்கிறது. மேலும் இதே செய்தியை விரிவாக மாநாடு மின்னிதழிலும் புகைப்படத்துடன் வெளியிட்டோம். ஆனால் இதுவரை எதையுமே சரி செய்யாத சூழல்தான் அங்கு நிலவுகிறது என்று மாநாடு செய்தி குழுமத்திற்கு தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டே இருந்தது .
அதனைத் தொடர்ந்து நாம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சில நாட்களுக்கு முன்பு சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடையும் விதமாக அனைத்து குறைகளும் அப்படியே இருக்கிறது என்பதை அறிய முடிந்தது. அதனை ஆதாரத்தோடு இந்த மாத அரசியல் மாநாடு இதழில் விரிவாக வெளியிட்டோம்
அதனைப் படித்த அனைவரும் இவை அனைத்தும் உண்மையே என்று நமக்கு தெரிவித்தார்கள். மாநாடு செய்தி குழுமத்தில் வெளியிடப்படும் எந்த செய்தியும் ஆதாரமில்லாமல் ஆய்வு செய்யாமல் வெளியிடுவதில்லை என்பது நமது இதழை பின் தொடரும் அனைவருக்கும் நன்கு தெரியும்.
இந்நிலையில் எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று சேர்க்கப்பட்டேன் .
அப்போது மக்களின் துன்பத்தை அனுபவித்து நன்கு உணர்ந்தேன். முதலுதவி மேற்கொள்ள ஊசி போட்டுவிட்டு ட்ரிப்ஸ் ஏற்ற படுப்பதற்கு படுக்கைகள் கூட இல்லை. ஒரே படுக்கையில் வேறு ஒரு நோயாளியின் பக்கத்தில் என்னை படுக்க வைத்து ட்ரிப்ஸ் போட்டார்கள்.
ஏற்கனவே சிகிச்சையில் இருப்பவர்களுக்கே படுக்கைகள் பற்றாக்குறையாக இருந்தது ,மேலும் அதிகமான நோயாளிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தார்கள் அவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க முடியாமல் அங்குள்ளவர்கள் பட்ட பாடு பெரும்பாடாக இருந்தது.
இதையெல்லாம் விட முக்கியமாக ஒரு நிகழ்வு நடந்தது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்கு கூட முடியாத நிலை தான் நிலவியது ஏனெனில் ஏறக்குறைய 4 நேரமாக மின்தடை ஏற்பட்டிருந்தது.
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்பது தஞ்சாவூர் மக்களுக்கு மட்டுமானது அல்ல இதில் சிகிச்சை பெறுவதற்காக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த திருவாரூர் , நாகப்பட்டினம், மயிலாடுதுறை ,அரியலூர் ,பெரம்பலூர் போன்ற பல்வேறு மாவட்ட மக்களும் இங்கு சிகிச்சை மேற்கொள்ள வருகிறார்கள். இவ்வாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உட்காருவதற்கு பல இடங்களிலும் இருக்கைகள் இல்லை,
கிராமத்தில் இருந்து வரும் மக்கள் எங்கு எப்படி செல்ல வேண்டும் என்று வழி தெரியாமல் தவிக்கும் விதத்தில் தான் இப்போதும் இருக்கிறது தகுந்த இடத்திற்கு போவதற்கு வழிகாட்டி பெயர் பலகைகள் கூட இல்லை .
இதனால் சிகிச்சை மேற்கொள்ள வருபவர்கள் தகுந்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காத போது தனியார் மருத்துவமனைக்கு தானே நாடி ஓடி செல்லக்கூடிய சூழலுக்கு அரசு மருத்துவமனையே உந்தி தள்ளுகிறது என்பது தான் உண்மை.
எனக்கே பல மணி நேரம் சிகிச்சை மேற்கொள்ளாமல் இங்கும் அங்கும் அலையவிட்டதில் எனக்கு மேலும் உடல்நிலை மோசமாகி மிகவும் வலியோடு துடிக்க ஆரம்பித்ததை பார்த்த எனது நண்பர்கள் மிகுந்த கோபம் கொண்டு வாருங்கள் வெளியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று என்னை அழைத்தார்கள்.
இவ்வளவுக்கும் என்னை நன்கு தெரிந்த பல நண்பர்கள் இந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றார்கள் அவர்கள் முயற்சித்துமே எனக்கு சிகிச்சை கிடைக்க பல மணி நேரம் ஆகியது. சாமானிய மக்களுக்கு எந்த நிலை என்பதை இங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் நன்கு உணர முடியும்.
உண்மை நிலை இப்படி இருக்க ஆஹா ஓஹோ என்று மேல்மட்டத்தில் பொறுப்பில் இருப்பவர்கள். பொறுப்பாக மக்களுக்கு தேவையானதை அரசிடும் கேட்டு வாங்கி மக்களுக்கு சேவை அளிப்பதை விட்டுவிட்டு அமைச்சர்கள் , மாவட்ட ஆட்சியர் போன்றவர்கள் வரும்போது போது மட்டும் மருத்துவமனை மிகச் சிறப்பாக இருப்பது போல அவர்களிடம் காட்டிவிட்டு இவர்களுக்கு தேவையானதை பெற்றுக் கொள்கிறார்கள்.
இந்தப் போக்கு எந்த அரசு ஆட்சி அமைத்தாலும் அந்த அரசுக்கு கெட்ட பெயரை மட்டுமே கொடுக்கும். ஒரு போதும் இது போன்ற ஒரு சிலரின் பொறுப்பற்ற செயலால் மக்கள் துன்பப்படுவதையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மானம் போவதையும் சுகாதாரத்துறை அமைச்சரை தவிர வேறு யாரும் தடுக்க முடியாது .
இத்துறையில் மட்டுமல்லாமல் பல துறைகளிலும் பல இடங்களிலும் இதுபோன்ற இருக்கின்ற அவலங்களை ஆதாரங்களோடு அரசியல் மாநாடு இதழில் எவ்வித சமரசமும் இன்றி வெளியிட்டு வருகிறோம்.
அதனால் மக்களின் பேராதரவு நமது இதழுக்கு தொடர்ந்து பெருகி வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் என்னை அலைபேசியில் மிரட்டி பார்த்தார்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் அரசியல் மாநாடு இதழில் தொடர்ந்து மக்களுக்கான செய்திகளை வெளியிட்டு வருகிறோம் என்றவுடன் .
காவல் நிலையத்தில் இந்த பத்திரிக்கையை விசாரணை செய்ய வேண்டும் என்று அவர்களின் பெயரைக் கூட குறிப்பிடாமல் அனைத்து பத்திரிக்கையாளர் நல சங்கம் தஞ்சாவூர் என்கின்ற முகவரியிட்டு தபால் அனுப்பி இருந்தார்கள்.
தஞ்சாவூரில் இந்த பெயரில் சங்கமே இல்லை என்று தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து எனக்கு அழைப்பானை வந்தது. 15-5-2023 அன்று நேரில் சென்று எனது தரப்பு விளக்கத்தை முழுவதுமாக தெரிவித்து விட்டு வந்தோம். காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தவர்கள் தரப்பிலிருந்து யாருமே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு புகார் என் மீது வந்திருக்கிறது என்பதை அறிந்த பத்திரிக்கை துறை நண்பர்கள் , தமிழர் முற்போக்கு பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில தலைவர் ரெங்கராசு , ஈகிள் ரவுண்ட்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் நம்பியப்பன் உட்பட என் மீதும், இம்மண்மீதும் அக்கறை கொண்டவர்கள் தொடர்ந்து என்னிடம் தொடர்பு கொண்டு நிலையை விசாரித்துக் கொண்டே இருந்தார்கள்.
அதன்படி 15 ஆம் தேதி காவல் நிலையத்திற்கு செல்லும்போது என்னோடு சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சுந்தர், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளர் பெரியார், நாம் தமிழர் கட்சியின் தஞ்சை மண்டல செயலாளர் மு. கந்தசாமி, நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநிலத் துணைத் தலைவர் வழக்கறிஞர் வே. முத்துமாரியம்மன், நாம் தமிழர் கட்சியின் பாபநாசம் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ப.ரஜீஷ் குமார் , சமூக ஆர்வலர் வழக்கறிஞர் பிரகாஷ், வழக்கறிஞர் சரவணன், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியும் நாம் தமிழர் கட்சியின் தஞ்சை மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன் , நசரேத் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட செயலாளர், அன்பரசன் நாம் தமிழர் கட்சியின் தஞ்சாவூர் நடுவன் மாவட்ட செயலாளர், ரமேஷ்குமார் நாம் தமிழர் கட்சியின் தஞ்சாவூர் தொகுதி தலைவர், சசிக்குமார் நாம் தமிழர் கட்சியின் தஞ்சாவூர் நகர செயலாளர், ஞானசேகர் நாம் தமிழர் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் இத்ரீஸ், நாம் தமிழர் கட்சியின் தஞ்சாவூர் தொகுதி பொருளாளர், சேக்தாவூது நாம் தமிழர் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளர், கஜேந்திரன் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி ஒரத்தநாடு செயலாளர், தம்பி சிவா, அரசியல் மாநாடு தஞ்சாவூர் செய்தியாளர்கள் அபினேஷ், ரமணன் உள்ளிட்டவர்கள் என் மீது கொண்ட நேசத்தால் என்னுடன் காவல் நிலையத்திற்கு வந்தார்கள். வழக்கறிஞர் ஜோதிவேல் அண்ணன் பணி நிமித்தமாக வெளியூரில் இருந்தாலும் என்னோடு தொடர்பிலேயே இருந்தார். வழக்கறிஞர் நல்லதுரை அண்ணன் மற்றும் வழக்கறிஞர் அஷ்ரப் அலி அண்ணன் , ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் ஐயா மாணிக்கவாசகம் உள்ளிட்டவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள். அது மட்டுமல்லாமல் சென்னை , திருச்சி கோவை போன்ற மாவட்டங்களில் இருந்தும் ஊடக நண்பர்களும், பல்வேறு கட்சி முக்கிய பிரமுகர்களும் தொடர்ந்து என்னை தொடர்பு கொண்டார்கள். அவர்கள் அனைவருக்கும் இதன் வாயிலாக நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையாக இருந்து ஒவ்வொரு நேரமும் உண்மையான செய்திகளை உலகுக்கு கொண்டு வருவேன் என்று இந்த நேரத்திலும் உறுதி கூறுகிறேன். என்னை அறிந்த அனைவருக்குமே நன்கு தெரியும் எந்தவித உருட்டல், மிரட்டலுக்கும், அடிபணிய மாட்டேன் என்று …
இந்த நேரத்தில் பெயரையும் முகத்தையும் கூட காட்ட துணிவு இல்லாத மொட்டை புகார் கடிதம் போட்ட வீரர்களுக்கு நான் சொல்வதெல்லாம் நான் இதை செய்தி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற முக்கிய காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்களில் 90 விழுக்காடு ஊடகங்களில் செய்தியை வெளியிட முடியும் இது அறியாமல் அரசியல் மாநாடு இதழை முடக்கி விடலாம் என்று நினைப்பது மூடத்தனம்.
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்து உடனடியாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் அனைத்து அவலங்களையும் சரி செய்ய வேண்டும். செய்வாரா அமைச்சர் பொறுத்திருந்து பார்ப்போம்.
தொடர்ந்து உண்மை செய்திகளை அச்சமின்றி ஆதாரத்தோடு அரசியல் மாநாடு இதழில் வெளியிடுவேன் மீண்டும் ஒரு முறை அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும் , ஊடக நண்பர்களுக்கும், எனது நாம் தமிழர் கட்சியின் உறவுகளுக்கும், எப்போதும் பேரன்பு கொண்டு என்னை நேசித்து வழிநடத்தும் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெயரைக் கூட குறிப்பிடாமல் அனைத்து பத்திரிக்கையாளர் நல சங்கம் தஞ்சாவூர் என்கின்ற பெயரில் வந்த ஆதாரமற்ற புகாரின் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் காவல் நிலையத்தில் கேட்டு இருக்கின்றேன் மொட்டை புகார் மனு கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை…