மாநாடு 18 October 2022
கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் ஒரு அங்கமான விமோசனம் இயக்கம் மூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக,
இன்று 18.10.2022 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை தொடர்வண்டி நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகள் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்திய பின் மது இல்லாத தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்விற்கு
லயன்ஸ் மாவட்டத் தலைவர் அம்மாபேட்டை திரு.குணசேகரன் தலைமை தாங்கினார்கள்.
திரு.கிருஷ்ணகுமார் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரையாற்றினார்கள்.
திரு. முரளி, தலைவர் அம்மாபேட்டை லயன்ஸ் சங்கம்,
ஓதுவார்.திரு.கண்ணையன்,
கும்பகோணம் திரு.ஐயப்பன் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் .
விழிப்புணர்வு
பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து கும்பகோணம், ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர், தவத்திரு.திருவடிக்குடில் சுவாமிகள் பேசினார்கள்.அனைவருக்கும் மது இல்லாத தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து தொடங்கிய சுவாமிகள், இந்தப் பிரச்சாரத்தின் மூலம் நல்ல பலன் கிடைத்து வருகிறது.தொடர் முயற்சியாக இதனை அனைவரும் ஒருங்கிணைந்து முன்னெடுப்பது அவசியம் என்றார்கள், மேலும் பேசுகையில் கொண்டாட்டம் என்பதன் வரைமுறையை இளைஞர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். உண்மையான கொண்டாட்டம் என்பது தர்மம்,சேவை மற்றும் ஒழுக்கம் சார்ந்தது.
இளைஞர்களுக்கு களிப்புணர்வுடன் பொறுப்புணர்வு அவசியம்.
மதுவிலக்கு குறித்து மாநில அரசு முடிவெடுக்க வேண்டும் என்றார்கள்.
லயன்ஸ் சங்கம் செயலர் திரு.வேலுமணி நன்றி கூறினார்கள்.
இந்நிகழ்வில் அம்மாபேட்டை பகுதி சார்ந்த சிவனடியார்கள்,
லயன்ஸ் சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் திரு.ஷேக் அப்துல் காதர், திரு.ஜோசப் உள்ளிட்டோரும்,
ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் அங்கத்தினர்களும் , நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் மகேந்திரன் நாம் தமிழர் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் இரா. மணிகண்டன் உள்ளிட்டவர்களும் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
அம்மாபேட்டை தொடர்வண்டி நிலையத்தில் துவங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு பரப்புரை பயணத்தில் கடை வீதிகளிலும், கடைகளிலும், பேருந்துகளிலும், கண்ணில் பட்ட அனைவரிடமும் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
மக்களுக்கு கொடுக்கப்பட்ட துண்டறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: தீபாவளி பண்டிகையில் மது அருந்துதலை தவிர்க்க வேண்டும் என்கின்ற நோக்கத்திலான ஒருமுறை தானே என்று குடித்தால் தலைமுறை மானத்தைக் கெடுப்பாய் என்பன போன்ற வாக்கியங்கள் அச்சிடப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
திருவடிக்குடில் சுவாமிகளிடம் இதைப் பற்றி நாம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: எப்போதுமே மக்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதே நமது நோக்கம் மது குடித்தால் ,மதி இழப்பார்கள். மதுவை ஒழிப்பதற்காக பல போராட்டங்களை நாம் முன்னெடுத்து இருக்கின்றோம், கும்பகோணத்தில் மகாமகம் நடந்த போது மது கடைகளை அகற்றிவிட்டு மகாமகம் நடத்துங்கள் அதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறி உண்ணா நோன்பு போராட்டத்திற்கு அனுமதி கோரி இருந்தோம் ,அனுமதி மறுக்கப்பட்ட போதும் மனிதத்தை காப்பதற்காக போராட்டத்தில் இறங்கினோம் அப்போது கைது செய்யப்பட்டோம், என்னைப் பொருத்தவரை மது கடைகளே இருக்கக் கூடாது , அரசுகளே மது கடைகளை நடத்தக்கூடாது,
மானிடர்கள் மதுவை அருந்தக்கூடாது என்பதுதான் எனது நோக்கம் இருப்பினும் எங்களது விழிப்புணர்வு பரப்புரை பயணம் வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதாகவே கருதுகிறோம், இந்த பரப்புரை பயணம் யாரும் விமர்சித்தாலும் கூட அந்த விமர்சனம் மூலமாகவாவது மது அருந்தக்கூடாது என்கின்ற விழிப்புணர்வு ஏற்பட்டாலும், குடிப்பவர்கள் தாங்கள் குடிப்பதை குறைத்துக் கொண்டால் கூட எங்களது நோக்கத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம், இப்போதெல்லாம் எங்களவர்கள் திருமண அழைப்பிதழில் கூட திருக்குறள் வாக்கியங்களை அச்சிடுகிறார்கள், அதேபோல மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் இது உலக நீதி, மதுபான கடை வாசல் மிதிக்க வேண்டாம் இது உணர வேண்டிய நீதி ,என்கின்ற வாக்கியத்தையும் அச்சிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள், ஆண்டுதோறும் நாங்கள் மது ஒழிப்பு விழிப்புணர்வு பரப்புரையை தொடர்ந்து செய்வோம் என்றார்கள்.
இவர்களின் சேவையை மாநாடு இதழ் வரவேற்று ,வணங்கி ,வாழ்த்துகிறது அதேவேளையில் ஆன்மீகவாதிகள் மது ஒழிப்புக்காக விழிப்புணர்வு நடத்திக் கொண்டிருக்கின்றார்கள், மக்களுக்காக சேவையாற்ற வந்ததாக கூறப்படும் அரசுகள் மது கடைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெட்கி தலைகுனிய வேண்டிய செயல், உடனடியாக தமிழக அரசு படிப்பகத்தைப் பெருக்கி அறிவை வளர்க்க வேண்டும். குடிப்பகத்தை இழுத்து மூடி மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.
ஆன்மீகவாதிகள் நினைப்பதை, அரசும் நினைத்தால் மது இல்லா தமிழகம் மறு நொடியே பிறக்கும், அரசு நினைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏 ஒட்டக்கூத்தர் ஜீவசமாதி அமைந்துள்ள தாராசுரம் 8680828922