மாநாடு 27 July 2022
கடந்த 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விமல் ராஜ் பங்கேற்று விளையாடினார்.அப்போது கீழே விழுந்தார் கீழே விழுந்ததும் கீழகுப்பம் கிராம எதிர் அணியை சேர்ந்த வீரர் பிடிக்க முற்பட்ட போது இவரது மார்பில் அடிபட்டு சுயநினைவில்லாமல் கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு உடனே பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விமல்ராஜ் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த விமல்ராஜ்க்கு தாய், தந்தை இருவரும் (கண்பார்வையற்றவர்கள்) தங்கை உள்ளனர். இவர்களின் வாழ்வாதராமே விமல்ராஜை நம்பிதான் இருந்திருக்கிறது. ஆனால் அவர் கபடி விளையாடும் களத்திலேயே உயிரிழந்து விட்டதால் இவர்கள் குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து தங்களுக்கு நம்பிக்கையாக இருந்த ஒரே பிள்ளையை பறிகொடுத்து விட்டு நிற்கதியாக நிற்கிறது .விமல் ராஜின் குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும் என அப்பகுதி மக்களும் நண்பர்களும், சக விளையாட்டு வீரர்களும் கோரிக்கை வைத்து இருந்தார்கள்.
அது மட்டுமல்லாமல் பல போட்டிகளுக்கு அரசு பல்வகையான வசதிகளை செய்து கொடுத்து வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்து வருகிறது அதேபோல பாரம்பரியமிக்க ஏற்றத்தாழ்வற்ற கபடி போட்டிக்கு தயாராகி விளையாடி வரும் கபடி வீரர்களுக்கு மருத்துவம் உட்பட அனைத்து வசதிகளையும் அரசு முறைப்படுத்தி அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கிறார்கள்.
அதனையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த கபடி வீரர் விமல்ராஜ் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டு இருக்கிறார். இது தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டு இருக்கின்ற செய்தி குறிப்பு :கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வல்லம் மதுரா மானகுப்பம் கிராமம் தெற்கு தெருவில் உள்ள புளியதோப்பு மைதானத்தில் கடந்த 24-ம் தேதி மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இந்த கபடி போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ் என்ற இளைஞர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு வருத்தமடைகிறேன். உயிரிழந்தவரின் பெற்றோர்க்கும் அவரது சகோதரிக்கும் எனது ஆழந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்த விமல்ராஜ் குடும்பத்தினருக்கு ரூபாய் 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.