மாநாடு 29 July 2022
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வந்தார் பாரத பிரதமர் அவருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அதன் பிறகு ஆளுநர் மாளிகைக்கு சென்ற பிரதமர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களை சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடத்தினார்,அதன் பிறகு பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது ஊடகவியலாளர்கள் திமுகவோடு தேர்தலில் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்வியை முன் வைத்தார்கள்.
பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை பதில் அளிக்கும் போது தமிழ்நாட்டில் சமீபத்தில் தேர்தல்கள் எதுவும் இல்லை அதனால் இப்போது நடந்த ஆலோசனையில் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை, அதேசமயம் பாஜக எங்களது கொள்கையிலிருந்து ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது, ஏற்கனவே பிரதமர் தமிழ்நாடு வந்திருந்த போதும் இதுபோன்றே திமுகவின் தலைவர் ஸ்டாலின் நடந்திருக்க வேண்டும் .ஆனால் அப்போது அவர் நடந்து கொண்ட விதம் குறித்து அப்போது விமர்சித்து இருந்தேன் ,ஆனால் இப்போது நடந்து கொண்ட விதத்தை எண்ணி தமிழக முதல்வரை பாராட்டுகிறேன், எதிர்க்கட்சி என்பதற்காக எப்போதுமே எதிர்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று இல்லை என்றார் அண்ணாமலை. மேலும் கூறுகையில் கடந்த 5000 ஆண்டுகளாக இருந்த கலாச்சார நிகழ்வுகளை இன்று நிகழ்த்தி காட்டி உலகம் முழுவதும் உள்ள மக்களை அறிய செய்த தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் வெகுவாக பாராட்டுகிறேன். ஆனால் அதற்காக இது கூட்டணி என்று எண்ணிக் கொள்ள தேவை இல்லை என்றார்.
இந்த முறை தான் முதலமைச்சர் ஸ்டாலின் முதல்வரை போல நடந்து கொண்டிருக்கிறார், இதற்கு முன்பு கட்சியின் தலைவரை போல நடந்து கொண்டார். அப்போது அதை பாஜக சார்பில் நான் விமர்சித்தேன், இப்போது முதல்வர் நடந்து கொண்ட விதத்தை மகிழ்ந்து பாராட்டுகிறேன், விரைவில் தமிழ்நாட்டில் மக்களின் அன்பை பெற்று பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்றார் பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை.