மாநாடு 5 April 2025
ஈரோடு மாவட்டம் பவானி அருகே நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். பவானி அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி செல்லப்பகவுண்டன்வலசு என்ற கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் தனது விவசாய நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய முடிவு செய்து மேம்பத்தி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் ஒலகடம் பகுதியை சேர்ந்த 30 வயதாகும் பிரகாஷ் என்பவரை சந்தித்துள்ளார்
கதிர்வேலிடம் விஏஓ பிரகாஷ் பட்டா மாறுதல் செய்ய 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு விவசாயி கதிர்வேல் மறுத்துவிட்டாராம்.
அதன்பிறகு 3000 ரூபாய் கொடுத்தால் தான் பட்டா மாறுதல் செய்து தர முடியும் என்று விஏஓ பிரகாஷ் தெரிவித்தாராம்.
ஆனால் விஏஓ கேட்டதாக கூறப்படும் லஞ்சத்தை கொடுக்க விருப்பமில்லாத கதிர்வேல் இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையிடம் நடந்தவற்றைக் கூறி புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து கதிர்வேலிடம் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் ரசாயனம் தடவிய 3000 ரூபாய் கொடுத்து அதை கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.
அதன்படி அவர் அந்த பணத்துடன் நேற்று பவானி அருகே உள்ள மேம்பத்தி கிராம நிர்வாக அலுவலகம் சென்று கிராம நிர்வாக அலுவலர் பிரகாசிடம் கொடுத்தாராம். அதற்கு அவர் பணத்தை அவரது அருகில் நின்று கொண்டிருந்த செல்லப்பகவுண்டன்வலசை சேர்ந்த இடைத்தரகர் அருள்ராஜா என்பவரிடம் கொடுக்க சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் கதிர்வேல் அவரிடம் பணத்தை கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையிலான காவலர்கள் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் மற்றும் இடைத்தரகர் அருள்ராஜா ஆகியோரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.