மாநாடு 31 July 2022
தஞ்சாவூர் மாநகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பொது இடங்களில் விளம்பர பதாகைகள் வைப்பதற்கும், பொது சுவரில் விளம்பரம் செய்வதற்கும் தடை செய்யப்பட்டிருந்தது ,அப்படியே ஏதாவது பதாகைகள் வைக்க வேண்டும் என்றால் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று தான் வைக்க வேண்டும் என்று இருந்தது, அதற்கும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது நெகிழி பதாகை வைப்பதற்கு அனுமதியே கிடையாது என்று கூறப்படுகிறது,
இந்நிலையில் ஜூலை 14ஆம் தேதி தஞ்சை மேயர் சண்.ராமநாதனின் பிறந்தநாள் விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது, அதற்காக திமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் தஞ்சாவூர் மாநகரத்தில் அமர்க்கள படுத்தும் விதமாக சுவரொட்டிகளை மாநகரத்தில் உள்ள அரசு மருத்துவமனை சுவர்கள், பழைய நீதிமன்ற சாலை சுவர்கள், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சுவர்கள் என பெரும்பாலான பொது சுவர்களில் பிறந்தநாள் சுவரொட்டிகளை ஒட்டி இருந்தார்கள்,
ஆங்காங்கே நெகிழி பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தது, அவரது பிறந்த நாள் விழா தஞ்சாவூர் திமுகவின் முன்னோடிகளே ஆச்சரியப்படும் அளவுக்கு பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது, அன்று நாள் முழுவதும், மேயர் பிறந்த நாள் விழாவை அவரது அலைபேசி மூலம் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டு வந்தது,
சண்.ராமநாதனின் பிறந்த நாளின் பெரும் பகுதி அவரது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானங்கள் வழங்குவதிலும் ,ரத்த தானங்கள் வழங்குவதிலுமே நிறைவு பெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட திமுகவில் சின்னவர் என்று ஆதரவாளர்களால் அழைக்கப்படும் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தின் சகோதரர் ராஜ்குமாரின் பிறந்தநாள் ஆகஸ்ட் 1ஆம் தேதி நாளை வருகிறது, அதற்காக அவரது ஆதரவாளர்கள் பல பகுதிகளில் நெகிழி பதாகைகளும், பொது சுவர்களில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவரொட்டிகளும் பல இடங்களில் ஒட்டி இருக்கிறார்கள். அப்படி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் சிவகங்கை பூங்கா சுவர்களிலும், திலகத்திடல் உள்ளிட்ட சுவர்களிலும் ஒட்டப்பட்டு இருக்கிறது,
சிவகங்கை பூங்கா சுவர் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது அதில் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்று எழுதி வைத்திருக்கும் இடத்தை சுற்றியும் அதற்கு கீழேயுமே வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டி இருக்கிறார்கள் இது சரியான முன்மாதிரியான செயலா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள், இதைப் பற்றி ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம் அவர்கள் கூறும் போது தஞ்சை மாநகர மேயர் பிறந்த நாளுக்காக தஞ்சாவூர் முழுவதிலும் அனைத்து சுவர்களிலும் சுவரொட்டிகளை ஒட்டினார்களே அது சரியா? இருந்த போதும் இந்த செயல் எங்கள் சின்னவருக்கு தெரியாது அவருக்கு தெரிந்திருந்தால் தடுத்திருப்பார், இது போன்ற செயல்களை ஒருபோதும் எங்கள் சின்னவர் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றார்கள், இதனைப் பொறுத்தவரை மாநகரத்தின் முதல்வராக இருக்கின்ற மாநகரில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய மாநகர மேயர் பிறந்தநாளில் மீண்டும் தஞ்சாவூர் மாநகரில் ஆரம்பிக்கப்பட்ட போஸ்டர், பிளக்ஸ் விளம்பர கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம். விருப்பத்தை நிறைவேற்றுவார்களா பொறுப்புள்ள சம்பந்தப்பட்டவர்கள்.