மாநாடு 3 May 2022
காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள் ஆனால் ஊதாரி காதலுக்கு மனசாட்சியும் இல்லை என்பதை காட்டும் விதமாக கோவை அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் 5 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. தாங்கள் உல்லாசமாக ஊர்சுற்ற வழிப்பறியில் ஈடுபட்டிருந்த இளம் காதல் ஜோடியை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் காளியம்மாள். இவர் கடந்த 28ஆம் தேதி நரசிபுரம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளம் ஜோடி மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் பேச்சுக் கொடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டி காளியம்மாள் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்து விட்டு தப்பியுள்ளனர்.
இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டது வழக்குப்பதிவு செய்த காவலர்கள் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் காளியம்மாளின் தங்கச் செயினை பறிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கண்டுபிடித்துள்ளனர். வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு அதன் உரிமையாளரான சோமையம்பாளையத்தை சார்ந்த பிரசாத் 20 மற்றும் சுங்கம் பகுதியை சார்ந்த இளம் பெண் தேஜஸ்வினி 20 ஆகியோரை பிடித்து விசாரித்ததில் இருவரும் பேரூர் பச்சாபாளையம் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மூன்றாவது ஆண்டு படித்து வருவதாகவும் காதலர்களான இருவரும் தொழிலதிபர்களின் வாரிசுகள் என்பது தெரியவந்திருக்கிறது . இருவரும் உல்லாசமாக ஊர் சுற்ற சில மாதங்களுக்கு முன்னர் காதலரான பிரசாத் தனது வீட்டில் இருந்த 30 சவரன் நகையை திருடி இருப்பதும் நகைகள் திருடு போனது தொடர்பாக காவல் துறை விசாரித்த போது தங்களது மகன் பிரசாத் தான் திருடன் என தெரிந்ததால் அவரது பெற்றோர் புகாரை திரும்பப் பெற்றிருப்பதும் காவலர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏராளமான பணத்தை பிரசாத் இழுந்துள்ளார், நகை பறிப்பில் ஈடுபட முடிவு செய்த பிரசாத் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பெண்கள் உடன் இருந்தாள் காவலர்கள் அதிகம் சோதனை செய்வதில்லை என்பதற்காக உடந்தையாக காதலியை பயன்படுத்தி நகை பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் 5 சவரன் தங்கச் செயினை கைப்பற்றி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தொழிலதிபர்களின் குழந்தைகளே ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு தவறான வழிகளுக்கு செல்லும் வேளையில் சாமானியர்களின் குழந்தைகள் நிலை என்ன ஆகும் என்பதை அரசும் அதிகாரிகளும் உணர்ந்து ஆன்லைன் விளையாட்டை ஆன்லைன் விளையாட்டின் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் வருவதை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும் அரசும் அதிகாரிகளும் அவசரகதியில் செய்வார்களா?
