மாநாடு 19 June 2026
எவருக்காகவும், எதற்காகவும், இவருக்கு, அவருக்கென்று எதிர்பார்த்து நில்லாமல் இவ்வுலகம் சுழன்று கொண்டே இருக்கிறது.
இதில் வேடிக்கை பார்த்துக்கொண்டு, வியக்கியாணம் பேசிக்கொண்டு இருப்பவர்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களால் இவ்வுலகுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படுவதில்லை அதற்காக இயற்கையும், இவர்கள் யாரையும் புறக்கணிப்பதும் இல்லை , உலகம் சுழன்று கொண்டே தான் இருக்கும்.
அதிலும் தீமையைக் கண்டு வெறும் பார்வையாளர்களாக பயணிப்பவர்களாக இருப்பவர்களால் பாருக்கு பயனேதும் ஏற்படுவதில்லை. அவர்களைப் போன்ற சிலரால் உலகு உருக்குலைகிறது. மாறாக உலகை உணர்ந்து, இயற்கையை நேசித்து மண்ணுக்காக பயணிப்பவர்களால் மட்டுமே உலகு உருப்பெறுகிறது .
இவ்வாறாக இயற்கையை நேசித்த பெண்ணாகவும் , இன்னல்களோடு தன்னை நம்பி தன்னிடம் வந்த பல ஏழை பாழைகளுக்கும் தாயைப் போல பாசம் காட்டி அரவணைத்து அவர்களின் இன்னல்களை தீர்த்தவர் முன்னாள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம். இவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தபோது நிறைவேற்றிய பெருவுடையார் திருக்கோயில் அகழி தூர்வாரி சீரமைத்த பணிகளைப் பற்றியும், அதில் உறுதுணையாக நின்றவர்களையும் நினைவில் நிறுத்தி கீழ்கண்டவாறு பண்போடு பதிவிட்டு இருக்கிறார் . அதன் முழு பதிவும் பின் வருமாறு ;

*பெருவுடையாரின் அருள்நிழலில் ஒரு நிறைவான விடைபெறல்…*
தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றிய காலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் மக்கள் நலப் பணிகளையும் முன்னெடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவற்றில், பணிமாறுதலுக்கு முன்பாக மனதிற்கு ஆழ்ந்த நிறைவை அளித்த பணிகளில் ஒன்றாக, உலகப் பாரம்பரியச் சின்னமான தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலைச் சுற்றியுள்ள அகழி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளின் சீரமைப்புப் பணிகள் அமைந்தன.
மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில், பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் வழங்கப்பட்ட இயந்திரங்களின் உதவியுடன், பேரூராட்சிகள் துறை, நகராட்சிகள் நிர்வாகத் துறை, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் முழுமையான ஒத்துழைப்பால் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த தஞ்சைப் பெரியகோயிலின் அகழி, கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு முழுமையாகத் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டது. அதேபோன்று, மராட்டா வாயில் மற்றும் கோயிலின் பாதுகாப்புச் சுற்றுச்சுவர் மேல் பகுதிகளில் முப்பது முதல் நாற்பது ஆண்டுகள் வயதுடையது என, பல தசாப்தங்களாக வளர்ந்திருந்த மரங்கள் மற்றும் தாவரங்கள் அகற்றப்பட்டு, தொன்மைச் சின்னத்தின் இயல்பான கம்பீரமும் கட்டிடக் கலை அழகும் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டன. இதன் மூலம், வெளிப்புறத்திலிருந்தே தஞ்சைப் பெருவுடையார் கோயில் விமானத்தின் பிரமாண்டத்தையும் பேரழகையும் காணும் சூழல் உருவாக்கப்பட்டது.

இப்பணிகள் வெறும் துப்புரவுப் பணிகளாக அல்லாது, பாரம்பரியச் சின்னத்தின் மரியாதையையும் வரலாற்றுப் பெருமையையும் மீட்டெடுக்கும் முயற்சியாகவே அமைந்தன. இதற்காக இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை (ASI), இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) மற்றும் பல்வேறு அரசுத் துறைகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியிருந்தது.
இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து, வழிகாட்டி ஒத்துழைப்பு வழங்கிய தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. முரசொலி சண்முகசுந்திரம் அவர்களையும், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. விஜய சரவணன் அவர்களையும், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. எஸ். தியாகராஜன் அவர்களையும், மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமத்தின் திரு. எஸ். முத்துக்குமார் அவர்களையும், அவர்களின் பங்களிப்பை பாராட்டி நன்றியுடன் நினைவுகூர கடைமை பட்டிருக்கிறேன்.

குறிப்பாக, எனது பணிமாறுதல் ஆணை வெளியான பின்னரும், வெறும் 48 மணி நேரத்திற்குள், தஞ்சாவூர் மாவட்டத்தின் 19 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் அவர்களது தூய்மைப் பணியாளர்கள் பெரும் அர்ப்பணிப்புடன் இப்பணியில் ஈடுபட்டு, அதை விரைவாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றியமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தை ஒட்டியுள்ள பாதுகாப்புச் சுற்றுச்சுவரை இரவிலும் மின்னி அழகுற ஒளிரச் செய்ய நிரந்தர மின்விளக்குகள் அமைப்பதற்கான நிர்வாக அனுமதிகளையும் பெற்று, அதற்கான நடவடிக்கைகளையும் நிறைவு செய்ததில் தனிப்பட்ட மகிழ்ச்சி அடைகிறேன்.

இது மட்டுமன்றி, தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் வளாகத்திலும் அதனை ஒட்டியுள்ள பாரம்பரியப் பகுதிகளிலும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறைக்கும் தமிழ்நாடு அரசிற்கும் விரிவான பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்றுப் பொக்கிஷத்தின் பெருமை மேலும் பல தலைமுறைகளுக்கும் பாதுகாக்கப்பட்டு, உலக அரங்கில் இன்னும் சிறப்புடன் திகழ வேண்டும் என்பதே அந்த முயற்சிகளின் நோக்கமாகும்.
இப்பணியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களித்த அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் நல்லுள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பணி முழுமையடைந்த தருணத்தில், கருமேகங்கள் சூழ்ந்த வானின் கீழ் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை நனைத்த மென்மையான மழைத்துளிகள், “பெருவுடையாரே எனக்கு ஒரு நிறைவான விடையளித்தார்” என்ற உணர்வை என் மனதில் ஏற்படுத்தின. அந்த மனநிறைவுடனும் நன்றியுணர்வுடனும், எனது பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்றது என் நிர்வாகப் பயணத்தின் மிகவும் நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக அமைந்தது.
தஞ்சை எனக்கு ஒரு பணியிடமாக மட்டுமல்ல; பண்பாட்டின் பெருமையையும், பாரம்பரியத்தின் ஆழத்தையும், மக்களின் அன்பையும் வாழ்க்கைப் பாடமாக கற்றுத் தந்த சிறந்த பல்கலைக்கழகம்.

பின்குறிப்பு:
இப்பணிகள் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், எனது நெருங்கிய நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “பணிமாறுதல் ஆணை வந்துவிட்ட நிலையில், ஏன் இவ்வளவு முனைப்புடன் இந்தப் பணியை மேற்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு நான் அளித்த பதில்:
தஞ்சாவூரில் எனக்கு முன்பு பல சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பணியாற்றியுள்ளனர். ஏனோ பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்தப் பணியை நிறைவேற்றும் வாய்ப்பை பெருவுடையார் எனக்கு வழங்கியிருப்பதை ஒரு அரிய பாக்கியமாகவே நான் கருதுகிறேன்.
பணிமாறுதல் என்பது நிர்வாக வாழ்வில் இயல்பான ஒன்றாக இருக்கலாம். ஆனால், இந்தப் பணியை முழுமையாக்கிய பிறகே அந்தப் பணிமாறுதல் நிகழ்ந்தது என்பதை நான் ஒரு சாதாரண நிகழ்வாக பார்க்காமல், பெருவுடையாரின் அருளால் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பாகவே பார்க்கிறேன்.
அந்த உணர்வுதான், இன்று தஞ்சையிலிருந்து விடைபெறும் தருணத்திலும் என் மனதை நிறைவடையச் செய்கிறது.
தஞ்சை மண்ணிற்கும், தஞ்சை மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
“பெருவுடையாரின் நிழலில் பணியாற்றிய காலம், என் நிர்வாகப் பயணத்தின் மறக்க முடியாத அத்தியாயமாக என்றும் என் நினைவில் நிலைத்திருக்கும்.”
– பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சித்தலைவர் (முன்னாள்), தஞ்சாவூர்.
இயக்குநர், பேரூராட்சிகள் துறை
