மாநாடு 18 May 2025
மாணவர்களுக்கு கல்வியை மட்டுமல்ல, பண்பாட்டையும் போதித்தவர், கல்வி காவலர் துளசி அய்யா வாண்டையாரின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் புகழஞ்சலி நிகழ்ச்சி நேற்று தஞ்சாவூரில் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பூண்டி கிராமத்தில் டெல்டா மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்விக்காகவும் சமூகத்தின் பொது அறிவிற்காகவும் வீரையா வாண்டையார் மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களால் 1956 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது பூண்டி புஷ்பம் கல்லூரி. இவர்களது மறைவிற்கு பிறகு தந்தையர்களின் கல்விப் பணியை தொடர்ந்து எடுத்து நடத்தியவர் துளசி அய்யா வாண்டையார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூரை மையமாக வைத்து 10 மாவட்டங்களின் மாணவர்கள் பெரும்பாலாவர்கள் இந்த கல்லூரியில் படித்தவர்கள். கல்வி அறிவு கிடைக்காத நேரத்தில் பூண்டி புஷ்பம் கல்லூரியின் மூலம் தாழ்த்தப்பட்ட, அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த மாணவர்கள் அனைவரும் கல்லூரி கல்வியை பெற்றனர். அன்றைக்கு இருந்த சமூக நிலைமைகளில் பூண்டி புஷ்பம் கல்லூரியின் கல்விப் பணி என்பது வரலாற்றில் இடம் பெற வேண்டிய குறிப்பாகும்.
கல்லூரியில் படித்தவர்கள் சமூகத்தின் மிகப்பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்றால் துளசி அய்யா வாண்டையாரின் கல்வி பணியாகும்.மேலும் புகழ்பெற்ற மருத்துவர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், கணக்காயர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பூண்டி புஷ்பம் கல்லூரியில் படித்தவர்கள் தஞ்சையிலும், தமிழ்நாட்டிலும் மட்டுமல்லாது இந்தியாவிலும், உலக அரசியலும் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள். இத்தகைய சிறப்பான பெருமைகளுக்கு காரணமான துளசி ஐயா வாண்டையாரின் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி முன்னாள் மாணவர்கள் சார்பில் விழாக்குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்த அடிப்படையில் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவாளர் கு.வெ. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். முனைவர் உரு.ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்வில் தஞ்சாவூர் பெரிய கோவில் ராஜராஜ சோழன் சதய விழா குழுவின் தலைவரும், திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினருமானான களிமேடு து.செல்வம் கல்வியாளர்கள் பார்வையில் கல்விக் காவலர் எனும் நூலினை வெளியிட, அரியலூர் சட்டமன்ற உறுப்பினரும், மதிமுக மாவட்ட செயலாளருமான சின்னப்பா பெற்றுக் கொண்டார். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவ – மாணவியர்களுக்கு கல்விக் காவலர் துளசி அய்யா வாண்டையார் நினைவாக கல்வி உதவித் தொகையை முன்னாள் ஒரத்தநாடு சட்ட மன்ற உறுப்பினர் எம்.இராமச்சந்திரன் வழங்கினார். இதைத் தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், ஆடிட்டர் ஆர்.இரவிச்சந்திரன், மதிமுக தஞ்சை மாவட்ட செயலாளர் வி.தமிழ்ச்செல்வன், ஆகியோர் புகழஞ்சலி உரையாற்றினார்கள். முடிவில் முனைவர் வி.பாரி நன்றி கூறினார். முன்னதாக
கல்விக் காவலர் துளசி அய்யா வாண்டையார் திருஉருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்ட து. நினைவேந்தல் நிகழ்வுகளை ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியின் தாளாளர் வி.விடுதலை வேந்தன் தொகுத்து வழங்கினார்.
செய்தி – N.செந்தில் குமார்.