Spread the love

மாநாடு June 2025

பல அரசு அலுவலகங்களிலும் இன்று வரை லஞ்சம் வாங்கப்படுவது கசப்பான உண்மையாகவே தொடர்கிறது. லஞ்சம் வாங்க வேண்டும் என்பதற்காகவே சில அதிகாரிகளும், சில அரசு அலுவலர்களும் நேரடியாக “லஞ்சம் கொடுங்கள்” என்று கேட்காமல், “அந்த சான்றிதழ் வேண்டும், இந்த ஆவணம் வேண்டும்” என்று பொதுமக்களை நாள் கணக்கில், மாதக்கணக்கில் அலையவிடுவதை நாம் பலரும் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். அதுபோன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது நாமக்கல்லில் நடந்துள்ளது.

நாமக்கல், சிலுவம்பட்டியைச் சேர்ந்த பூபதி என்பவர், கட்டியுள்ள புதிய வீட்டிற்கு வரி விதிக்க நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அங்கு வருவாய் உதவியாளராக பணியாற்றும் உதயகுமார், வரி விதிக்க ₹25,000 லஞ்சம் கோரியதாகவும், பேரத்திற்குப் பின் ₹15,000 என முடிவாகி முதல் தவணையாக ₹7,000 பெறப்பட்டதாகவும் தகவல். லஞ்சம் கொடுக்க விரும்பாத பூபதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தலின்படி, ஜூன் 2, 2026 அன்று ரசாயனம் தடவிய ₹8,000 நோட்டுகள் உதயகுமாரிடம் வழங்கப்பட்டதாக தெரிகிறது. அந்தப் பணத்தை உதயகுமார், என்.கொசவம்பட்டியைச் சேர்ந்த தற்காலிக தூய்மைப் பணியாளர் கலா என்பவரிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீஸார் இருவரையும் கைது செய்துள்ளனர். ₹8,000 பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் நாமக்கல் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம் வாங்குபவர்களை காப்பாற்ற யாருமே முன் வரக்கூடாது. “துறை ரீதியான நடவடிக்கை” என்ற பெயரில் சாதாரண நடவடிக்கை எடுத்துவிட்டு, சில மாதங்களில் மீண்டும் பணியில் சேர்த்துவிடுவதால் தான் இந்த அவலம் மீண்டும் மீண்டும் தொடர்கிறது. உண்மையிலேயே ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றால் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும்.

ஊழல் தடுப்புச் சட்டம் 1988-இன் படி, அரசுப் பணியாளர் லஞ்சம் கேட்டால் குற்றம். இதற்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனையும் அபராதமும் உண்டு. லஞ்சம் வாங்க உதவி செய்பவருக்கும் 5 ஆண்டுகள் வரை சிறைதண்டனை உண்டு. வீட்டுக்கு வரி கட்டக்கூட லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருக்கக்கூடாது. ஊழலை ஒழிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமை.

92240cookie-checkகை நீட்டிய அதிகாரி கைது, பரபரப்பு

Leave a Reply

error: Content is protected !!