Spread the love

மாநாடு 31 October 2026

தீபாவளி என்றாலே தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதியில் கூட்டம் அலைமோதும். அதிலும் தீபாவளிக்கு முதல் நாள் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத அளவுக்கு மக்கள் நெரிசல் அதிகம் இருக்கும். நடந்து செல்லவே நெருக்கடியாக இருக்கும் என்பது அனைவருக்குமே தெரியும்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள இதுபோன்ற மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் தீபாவளி பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை தீ விபத்தோ, வேறு அசம்பாவிதமோ நடந்தால் அங்கிருந்து பொதுமக்கள் தப்பிக்க மிகக் கடினமாக இருக்கும். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட உள்ளே நுழைய மிகவும் சிரமமான சூழல் உள்ள பகுதிகள் இவை. இப்படிப்பட்ட ஆபத்தான இடங்களில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சட்டம் என்ன சொல்கிறது?

பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசின் வெடிபொருள் விதிகள் 2008 (Explosives Rules 2008) தெளிவாக கூறுகிறது.

விதி 83(3)-ன் படி, தெரு குறுகலாக, நெரிசலாக இருந்தால் அந்த இடத்தில் பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்தால் அதை நிராகரிக்க வேண்டும்.

விதி 84-ன் படி, பட்டாசு கடைகளை மக்கள் அதிகம் கூடும் சந்தைப் பகுதிகள், நெரிசலான கடைவீதிகளில் அமைக்கக்கூடாது. மாவட்ட நிர்வாகம் அடையாளம் காட்டும் பாதுகாப்பான திறந்தவெளி மைதானத்தில் மட்டுமே அமைக்க வேண்டும். மேலும் ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் இடையே குறைந்தது 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது.

சென்னை உயர்நீதிமன்றமும் பல வழக்குகளில், நெரிசலான பகுதிகளில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சி தேவைதான் அதே நேரத்தில் மக்களின் பாதுகாப்பும் தேவை என்பதை மாவட்ட நிர்வாகம் அறியும் ! தஞ்சாவூரில் பட்டாசு கடைகளுக்கு முறையாக ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும் என்பதே மக்களின் மீது அக்கறை கொண்ட அனைவரின் விருப்பம்! என்ன நடக்கிறது பார்ப்போம்!

95400cookie-checkதஞ்சையில் சட்டத்தை பின்பற்றி தான் அனுமதியா பட்டாசு கடைகளுக்கு?

Leave a Reply

error: Content is protected !!