மாநாடு 30 October 2026
தமிழகத்தில் சமூக நீதியை உறுதி செய்யும் வகையில், அடுத்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நடந்த இந்த கூட்டத்தில், வெளிநாடு சென்றுள்ள கனிம வளத்துறை அமைச்சர் பிரபு மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் மட்டும் கலந்து கொள்ளவில்லை.
கூட்டம் முடிந்த பின் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். அதன்படி, 8 புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கவும், தாழம்பூர் நிலப்பிரச்னைக்கு தீர்வு காணவும், மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு போடவும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்புக்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்றும், இந்த கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கும் என்றும் அவர் கூறினார். இதில் மக்களின் பொருளாதார நிலை குறித்தும், ஜாதிவாரி விவரங்களும் சேகரிக்கப்படும்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தாழம்பூரில் சுமார் 800 ஏக்கர் நிலங்களுக்கு உரிமையாளர்கள் யார் என்றே தெரியாத சூழல் உள்ளது. அந்த இடத்தில் 3000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருவதோடு, 15-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன. முந்தைய ஆட்சிகளில் இந்த நிலங்களில் பல முறைகேடுகள் நடந்து, அப்பாவி மக்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மதம் மாறிய இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து 3 நாட்களில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும், மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட அமைச்சர்கள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் விஜய் அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்ட கட்சிகள் காரணம் சொல்லி தட்டிக் கழித்து வந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முன்வந்து ஒப்புதல் அளித்துள்ள தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பல்வேறு மக்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இதனை வரவேற்று விரைவில் நிறைவேற்றி தர வேண்டும் என்று வாழ்த்தி வலியுறுத்தியுள்ளார்.
