மாநாடு 29 October 2026
தமிழக அரசியல் களத்தில் இன்று காலை முதலே பரபரப்புக்கு பஞ்சமில்லை. திமுகவின் முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் இருப்பிடங்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.

நேருவின் சொந்த வீட்டோடு நின்றுவிடாமல், அவரது சகோதரர்களுக்கு சொந்தமான வீடுகளிலும் இந்த சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் இத்துடன் முடியவில்லை. நேருவைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த இரண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளன. அணைக்கட்டு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ நந்தகுமார் மற்றும் நாமக்கல் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோரின் வீடுகளில் தனித்தனி குழுக்களாக பிரிந்து அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த திடீர் சோதனைக்கு காரணம், நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்த நியமனங்கள் தான் என்று கூறப்படுகிறது. திமுக ஆட்சியில் கே.என்.நேரு அந்தத் துறையின் அமைச்சராக இருந்தபோது, வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக பணம் பெறப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த புகார் தொடர்பான வழக்கை பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி கொடுத்திருந்தது. இதனை எதிர்த்து கே.என்.நேரு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், கடந்த திங்கட்கிழமை வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாராளமாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடரலாம் என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையிலேயே இன்றைய அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே கடந்த மாதம் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக இதே போன்று கே.என்.நேருவின் வீட்டில் சோதனை நடந்த நிலையில், அடுத்த மாதமே மீண்டும் சோதனை நடப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள எம்.ஜி.நகரில் வசிக்கும் முன்னாள் எம்எல்ஏ ராமலிங்கத்தின் வீட்டிற்கு நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று காலை சென்றுள்ளனர். ராமலிங்கம் 2021 முதல் 2026 வரை நாமக்கல் தொகுதியின் எம்எல்ஏவாக பதவி வகித்தவர். அவருக்கு சொந்தமான எஸ்.எஸ்.கன்ஸ்ட்ரக்சன் உள்ளிட்ட நான்கு இடங்களில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை ஏழு மணியளவில் அதிகாரிகள் அங்கு சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்ததால், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரவழைத்த பின்னரே சோதனை தொடங்கப்பட்டுள்ளதாம்.
அதே போன்று வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள முன்னாள் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் வீட்டிலும், அவர் திமுக வேலூர் தெற்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார், வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவருடன் காட்பாடியைச் சேர்ந்த சேகர் என்பவரது வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
