மாநாடு 02 November 2016
திராவிட கொள்கையை உரக்க பேசும் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர் ஒருவரின் குடும்ப விழாவே இன்று அதே கொள்கையாளர்களுக்கு வலியை கொடுத்திருக்கிறது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தி திருமணம் நேற்று நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் நடந்து முடிந்தது.
வேலூர் எம்.பி கதிர் ஆனந்தின் மகள் செந்தாமரைக்கும் திரைப்பட தயாரிப்பாளர் திட்டக்குடி ரவியின் மகன் தீபக் ரவிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் வழக்கமான திமுகவின் தீவிர தொண்டர்கள் வீட்டில் நடைபெறும் சுயமரியாதை முறையில் இல்லை. மாறாக ஐயர்கள் வைத்து தீ வளர்த்து சமஸ்கிருத ஸ்லோகங்கள் ஒலிக்க தாலி கட்டி நடத்தப்பட்டது.
இதை பார்த்து கொதித்து போனவர் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் துரைமுருகன் படத்துடன் என் பெருமதிப்பிற்குரிய என்னிடம் பேரன்பு காட்டும் திமுக கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு இப்போதும் வலிக்கிறது என் இதயம் என பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த ஒற்றை வரி திமுகவிற்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. துரைமுருகன் ஏற்கனவே ஒரு மேடையில் சமஸ்கிருதம் செத்துப்போன மொழி என்று கடுமையாக விமர்சித்தவர். இந்த சூழலில் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே பேசிய ஒரு பழைய வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சுயமரியாதை திருமண மேடையில் பேசிய ஸ்டாலின் வைதீக திருமணங்களை கடுமையாக விமர்சித்திருந்தார். புரோகிதர் நடுவில் நெருப்பை மூட்டுவார் அதிலிருந்து வரும் புகை மணமக்களின் கண்களை தாக்கும் அவர்கள் அழுவார்கள் என்பது போல அவர் கிண்டலாக பேசியிருந்தார். இதுபோன்ற புகை போட்டு நடத்தும் திருமணங்களை நாங்கள் நடத்த மாட்டோம் சீர்திருத்த திருமணமே திராவிட திருமணம் என அவர் முழங்கியிருந்தார். தலைவரே இப்படி பேசிவிட்டு தனது பொதுச்செயலாளர் வீட்டு திருமணத்திலேயே அதே புகை போட்டு சமஸ்கிருத மந்திரம் ஓதும் முறைப்படி திருமணம் நடந்ததை பார்த்து ரசித்தது தான் இப்போது ஊருக்கு தான் உபதேசமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
