Spread the love

மாநாடு 2026 July

மக்கள் நாட்டில் தங்களுக்கென்று தனியாக வீடு கட்டிக் கொள்வது போல ஒவ்வொருவரும் தனியாக ஒரு பள்ளிக்கூடம் கட்டி தங்களது பிள்ளைகளை மட்டும் அங்கு படிக்க வைக்க முடியாது என்பதற்காகத் தான் அரசு பள்ளிக்கூடம் நடத்துகிறது. அதில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் கொடுக்கப்படுகிறது. கல்வி என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதால், அரசே அதற்கான கட்டமைப்பை உருவாக்கி நடத்துகிறது. மக்கள் தனியாக தங்களுக்கென்று மருத்துவமனை கட்டி மருத்துவம் பார்க்க முடியாது என்பதால் தான் அரசு மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் கொடுக்கும் சம்பளம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து எடுத்து கொடுத்து மக்களுக்காகவே நடத்தப்படுகிறது. இதே போல தான் சாலை அமைப்பு பணியும். ஒவ்வொரு குடிமகனும் தனக்கென்று தனிச் சாலை போட முடியாது என்பதால், அரசு வரிப்பணத்தில் நெடுஞ்சாலைகள், ஊர்ச்சாலைகள் அமைத்து பராமரிக்கிறது. நீதிமன்றங்கள் மற்றும் காவல் நிலையங்களும் இதற்காகத் தான் இருக்கின்றன. நீதி என்பது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றங்களும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மக்களைக் காக்க குற்றம் ஏற்படுவதற்கு முன் தடுப்பதற்காக காவல் துறையும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளில் பணியாற்றும் நீதிபதிகள், காவலர்கள் அனைவருக்கும் மக்களின் வரிப்பணத்தில் இருந்தே சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் இன்று மக்களைக் காக்க வேண்டிய கடமையில் உள்ள சில காவலர்கள் காவல் காப்பது யாரை? மக்களுக்காக உழைப்பவர்களையா? மக்கள் விரோதத்தில் ஈடுபடுபவர்களையா? என்னும் அளவுக்கு நாள்தோறும் பல நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டு இருக்கின்றன. அதிகார துஷ்பிரயோகம், காவல் நிலைய மரணங்கள், பொய் வழக்குகள், பணம் பறித்தல் என சாமானியன் சட்டத்தின் பெயராலேயே அச்சுறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. பாதிக்கப்படுபவன் ஏழையாக இருந்தால் அவனுக்கு நீதி எட்டாக்கனியாகவே இருக்கிறது. ஒரு புகார் கொடுக்க காவல் நிலைய வாசலில் காத்து கிடக்கும் நிலையும், FIR பதிய மறுக்கும் போக்கும் இன்றும் தொடர்கிறது. இதிலிருந்தெல்லாம் சாமானியர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டம், தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள், இந்திய குற்றவியல் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் போன்றவைகளை அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. சட்டம் தெரியாதவன் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியாது. உங்கள் உரிமை என்ன, காவல்துறையின் கடமை என்ன, கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பாதுகாப்புகள் என்ன என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் யாரையும் அடிக்கவோ, துன்புறுத்தவோ சட்டத்தில் இடமில்லை. உச்சநீதிமன்றத்தின் டி.கே.பாசு வழக்கு தீர்ப்பு கைது நடைமுறைகளை தெளிவாக வரையறுத்துள்ளது. அதை மீறுவது சட்டவிரோதம். மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் மக்களுக்கு எதிராக திரும்பும்போது, அதை கேள்வி கேட்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் எந்த ஒரு அரசு ஊழியரும் மக்களின் எஜமானன் அல்ல, சேவகனே. இந்த அடிப்படை புரிதல் வரும்போது தான் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும். அச்சம் தவிர்த்து சட்டத்தை கையில் எடுங்கள். உங்கள் உரிமைக்காக குரல் கொடுங்கள். சட்டம் அனைவருக்கும் சமம். அதிகாரம் என்பது சேவை செய்யவே தவிர, ஆள்வதற்கு அல்ல. சட்டத்தின் துணையோடு சமூக விரோதிகளின் கொட்டத்தை அடக்கும் மாநாடு நான் என்றும் உங்களோடு.

92940cookie-checkஉங்களோடு நான் July 2026

Leave a Reply

error: Content is protected !!