மாநாடு 30 April 2022
இயல்பாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மனிதன் தனது பேராசைக்காக இயற்கையை அழிக்க தொடங்கினான். பணம் கொடுத்தால் அனைத்தையும் பெற்று விட முடியும் என்று எண்ணினான். அதன் விளைவாக செயற்கையாக அனைத்தையும் உருவாக்கினான். ஆனால் பல நேரங்களில் மனிதனுக்கு நீ பெற்ற பிள்ளை இயற்கையாக வாழ வேண்டுமென்றால் கூட இயற்கையாகிய என்னை அழிப்பதை நிறுத்தி காத்தால் மட்டுமே இயற்கையாக வாழ முடியும் என்பதை பலமுறை இயற்கை உணர்த்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக ஆண்டு தோறும் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் அதேபோல மழையின் கோர தாண்டவமும் அதிகரித்திருப்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து வருகிறோம்.பருவநிலை மாற்றம் என்பது அவ்வளவு நல்லது இல்லை என்பதை ஏனோ நாம் உணர மறுக்கிறோம். இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று வீசும் என எச்சரித்துள்ளது. குறிப்பாக வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை வெயிலின் தாக்கத்திற்கு தயாராக இருப்பதை குறிக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மே 14 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பநிலை இயல்பை விட சில புள்ளிகள் அதிகமாக உள்ளது. இதற்கு சமமாக தமிழ்நாட்டிலும் வெயிலின் தாக்கம் எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு மிகவும் கடுமையாக இருக்கிறது இன்னும் நான்கு நாட்களில் அக்னி நட்சத்திரம் தொடங்கப் போகிறது அப்போது வெயிலின் தாக்கம் இன்னமும் அதிகமாக இருக்கும் குழந்தைகள் இதை தாங்க முடியாது.
இதை சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கூறும் வேளையில் இன்னமும் கூட தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளுக்கு கூட முழுவதும் விடுமுறையை விடாமல் சனிக்கிழமை மட்டும் விடுமுறை என்று சொல்லி பள்ளியை நடத்துவதென்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. எப்படிப் பார்த்தாலும் எட்டாம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக தான் அறிவிக்கப்படுவார்கள் இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தொடக்க பள்ளிக்கு விடுமுறை விட வேண்டும் என்பதே பெற்றோர்களின் பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது. தமிழக அரசு தாயுள்ளம் கொண்டு சிந்திக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.
