Spread the love

மாநாடு 28 May 2026

அன்பே உனக்காக நிலவை அள்ளி வரவா ? உயிரே உனக்காக நட்சத்திரங்களால் நகை செய்து தரவா?” என்றெல்லாம் கதைகளிலும் திரைப்படங்களிலும் வசனங்கள் கேட்டிருக்கிறோம்.

அவற்றை சிலபொழுது ரசித்திருந்தால்கூட அதீத கற்பனை என்பதால் கடந்தே சென்றிருக்கிறோம். இல்லையா..?

தன் மனைவி மீதிருந்த காதலின், அன்பின் மிகுதியால் சாதாரண மனிதன் ஒரு மலையையே தகர்த்தெறிந்தான் என்றால் நம்பமுடிகிறதா..?

அந்த மனிதனின் பெயர் தஸ்ரத் மான்ஜி (Dashrath Manjhi பிகார் மாநிலத்தில் கெஹ்லவுர் என்ற கிராமத்தில் ஒரு பரம ஏழை குடும்பத்தில் அவன் பிறந்தபோது இந்தியா பிரிட்டிஷ் ஆட்சி யின்கீழ் இருந்தது. 1934 ஜனவரி மாதம் 14ஆம் தேதி அவன் பிறந்தான் .ஒருவேளை உணவுக்குக்கூட வழியில்லாத குடிசையில் வளர்ந்த தஸ்ரத் பதின்பருவம் துவங்கும் முன்பே அருகிலுள்ள

தன்பாத் நகரின் நிலக்கரி சுரங்கத்தில் கூலிப்பணிக்கு சென்றான்.

சுமார் 17 ஆண்டுகள் கடும் உழைப்புக்குப்பின் கையில் கொஞ்சம் காசு சேர்த்துக் கொண்டு சொந்த கிராமத்துக்கு திரும்பியவர் பல்குனி தேவி என்ற பெண்ணை கரம்பிடித்தார். 

கணவனும் மனைவியும் விவசாயக் கூலிகளாக உள்ளூரிலேயே தம் வாழ்க்கையை தொடர்ந்தனர்.

தட்டையான விவசாய நிலத்தை சுற்றிலும் ராஜகிரி என்ற தொடர் மலைகள் சூழ்ந்த மலைப்பாங்கான நிலப்பகுதி அது. ஒரு கிராமத்திலிருந்து அடுத்த கிராமத்துக்கு செல்லவே மலைகள் வழியாக தட்டுத்தடுமாறி கடக்கவேண்டும். பலஇடங்களில் 300 முதல் 500 அடி ஆழம் வரையிலான கரடுமுரடான பள்ளங்கள் அச்சனுத்தும். பலவேளைகளில் கால்நடைகளையும், சிலபொழுது மனிதர்களையும் காவுவாங்கும் இந்தபள்ளத்தாக்குகள். நடக்கையில் சறுக்கினால் காயங்கள் ஏற்படாமல் தப்புவது சாத்தியமற்றது.

இந்த அபாயகரமான பாதையை தவிர்க்க ஒரே வழி மலைமீது ஏறாமல் சுற்றிச்செல்லவேண்டும். அருகிலிருக்கும் மருத்துவமனை 55 கி.மீ தூரம். பேருந்தோ ரயிலோ போகாத இந்த கிராமத்தில் அப்படி செல்வதும் நடைமுறை சாத்தியமற்றது.

இந்நிலையில்தான் ஒருநாள் கணவனுக்கு மதியஉணவு கொண்டுவந்த பல்குனி காலிடறி ஒரு பள்ளத்தில் விழ, அவரின் அலறல் மலைப்பகுதியையே அதிரவைத்தது. மனைவியின் அலறல் கேட்டு பதறித் துடித்து ஓடிச்சென்ற தஸ்ரத் தனது மனைவியை கைகளில் ஏந்தியபோது, உடலில் பல இடங்களில் எலும்புகள் உடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உதவி வேண்டி ஓலமிட்ட தஸ்ரத்தின் குரல் மலையில் பட்டு எதிரொலித்ததே தவிர உதவிமட்டும் வரவே இல்லை.

பள்ளத்தாக்கிலிருந்து ஏறிவரவே பலமணிநேரம் ஆகும். அதற்கும்மேல் 55 கி.மீ காளைவண்டி பயணம். சாத்தியப்படுமா…?

தன் மனைவி மெல்லமெல்ல துடிதுடித்து தன் கரங்களிலேயே உயிர் விட்டதை கண்ட தஸ்ரத் அக்கணமே முடிவெடுத்தார். “இந்தமலையில் இடறி விழுந்து இழக்கும் கடைசி உயிர் என் பல்குனியினுடைய உயிராகத்தான் இருக்கவேண்டும்”

மனைவியின் இறுதிக்கிரியைகள் முடித்து வீட்டுக்கு வந்த தஸ்ரத்துக்கு சொந்தமாக இருந்ததெல்லாம் இரண்டு எருமை மாடுகளும் ஒரு ஓட்டை குடிசை வீடும் மட்டுமே.

எந்தத் தயக்கமும் இல்லாமல் தன் எருமை மாடுகளை விற்று அந்தபணத்தில் சுத்தி, உளி, கடப்பாறை போன்ற சில உபகரணங்கள் வாங்கினார். தனி மனிதனாக மலையை ஒரு ஓரத்திலிருந்து உடைக்கத்துவங்கினார் தஸ்ரத்

“பொண்டாட்டி செத்ததுல பித்துப்புடிச்சுப் போயிருச்ச தஸ்தருக்கு” என்று ஒட்டுமொத்த கிராமமும் எள்ளி நகையாடியது. “ஒரு கேனப்பய கையாலேயே மலைய மறிக்கிறானாம்பா…” என்று பக்கத்து கிராமங்களில்கூட பேசத்துவங்கினர்.

எதைப்பற்றியும் கவலைப்படவில்லை தஸ்ரத் தனி மனிதனாய் 22 ஆண்டுகள் தொடர்ந்து உழைத்து அந்தமலைத் தொடருக்கு குறுக்கே 110 மீட்டர் நீளத்தில், 7.7 மீட்டர் ஆழத்தில் 10 மீட்டர் அகலத்தில் ஒரு பாதையை உருவாக்கினார்.

55 கி.மீ சுற்றிச்செல்ல இருந்த தூரம் வெறும் 1.6 கி.மீ ஆயிற்று. இனி மருத்துவமனை நடந்து கடக்கும் தூரம்தான். இனி பல்குனிகள் காப்பற்றப்படுவார்கள்.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட தஸ்ரத் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சிலர் சந்தித்து ஆறுதல்கூறச் சென்றனர். 

அப்போது அவர்களிடம் தஸ்ரத் “உங்கள் காதலுக்காக நீங்கள் உச்சபட்சமாக என்னசெய்வீர்கள்…? என்று கேட்டார். வந்தவர்கள் தயங்கி நிற்க, தஸ்தரோ, “நான் மலையை உடைத்தெறிந்தேன்…” என்று சொல்லி சிரிக்கிறார்.

தோல்விகளும், இழப்புகளும், சோகங்களும் உங்களை சூழும்போது உங்களுக்கும் இந்த இரு options-ம் இருக்கின்றன.

முடங்கிப்போய் வாளாவிருக்கலாம்; அல்லது மலையை உடைக்க சுத்தியை கையிலெடுக்கலாம்..!

நாம் எதை தேர்வுசெய்கிறோம் என்பதில் இருக்கிறது நம் எதிர்காலம்.

உளியையும் சுத்தியலையும் கையில் எடுப்போம்; நம் எதிர்காலத்தை நாமே செதுக்குவோம்.

_ முனைவர் ஃபாசில்ஃப்ரிமேன் அலி 

91400cookie-checkமழையை சாய்த்த சாமானியன்

Leave a Reply

error: Content is protected !!