மாநாடு June 2026
மாநாடு செய்தி எதிரொலி:
திமுகவில் கிடந்தது, தவெகவில் நடந்தது!
தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்றில் குறிப்பாக பள்ளியக்கரகாரம் வெண்ணாறு பாலம் பகுதியில் பல ஆண்டுகளாக தனித்தீவு போல காட்சியளித்தது ஆற்றில் இருந்த மண் மேடுகள் . இது அகலமான ஆறு , ஆனால் சிறு வாய்க்கால் போல சுருங்கிப்போனது. இதனால் கடைமடை வரை முழு நீரும் சென்று சேராமல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த திமுக ஆட்சியில், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்களை தூர்வாருவதற்காக 459 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை சமீபத்தில் தேர்தல் பரப்புரையின் போது கூட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த உடன் இதே பகுதியை முதல்வர் ஆய்வு செய்ய நேரடியாக வந்து பார்வையிட்டார். “டெல்டாவில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது” என செய்தியாளர்களிடம் பலமுறை அமைச்சர்களால் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பிலும் “90 விழுக்காடு பணிகள் முடிந்தது” என்றார்கள்.
ஆனால், களத்தில் நிலைமை வேறாக இருந்தது. கடந்த ஆட்சியில் 459 கோடி ஒதுக்கீட்டில் பள்ளியக்கரகாரம் வெண்ணாற்று பாலத்திற்கு அருகில் இருந்த மேடுகள் கூட அகற்றப்படவே இல்லை. ஆறு வாய்க்காலாகவே நீடித்தது. இந்த அவலத்தை 2021-ம் ஆண்டு முதல் 2026 மே மாதம் வரை ஒவ்வொரு ஆண்டும் ‘மாநாடு செய்தி குழுமத்தில்’ யூடியூப் சேனலிலும், பல சமயம் செய்திகளிலும் புகைப்பட ஆதாரங்களுடன் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தது. “நெல்லுக்கு இறைக்காத 459 கோடி புல்லுக்கு போனது யாரால்?” என 2026 மே மாத அரசியல் மாநாடு இதழில் நாம் கேள்வி எழுப்பி செய்தி வெளியிட்டோம்.
இவ்வளவும் தெரிந்திருந்தும் கடந்த திமுக ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில் பல விவசாய சங்கங்கள் , விவசாய சங்கங்களின் தலைவர்கள் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்றவர்கள் கூட இதைப்பற்றி முதல்வரிடம் நேரடியாக சுட்டிக்காட்டி, சரிசெய்யக் கோரவில்லை என்பது கசப்பான உண்மை.
யாருமே எதிர்பாக்காத நேரத்தில் 2026-ல் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைத்து ஒரு மாதம் கூட நிறைவடையவில்லை. 2026 மே மாத ‘அரசியல் மாநாடு’ இதழில் இதே பிரச்சினையை அட்டை படத்தில் போட்டு மீண்டும் தவெகவிற்கு சுட்டிக்காட்டினோம். நமது ஜூன் மாத அரசியல் மாநாடு இதழ் வெளிவருவதற்குள், 1 மாதத்திற்குள் பள்ளியக்கரகார வெண்ணாறு பாலத்தின் அருகே அதிசயம் நடந்தது.
வெண்ணாற்றில் இருந்த மேடுகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டு, ஆற்றின் தளம் சமப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது மேட்டூர் தண்ணீர் திறந்துவிடப்பட்டால், ஆற்று நீர் அதன் முழு அகலத்தில் தடையின்றி ஓட தயாராகி கொண்டிருக்கிறது. இதுபோல, மேல்மட்டம் முதல் கடைமடை வரை அனைத்து இடங்களிலும் தூர்வாரும் பணிகள் முழுமையாகவும், சிறப்பாகவும் நடைபெற்றால் மட்டுமே ஆற்று நீர் கடைமடை வரை சென்று சேரும் என்பதே நிதர்சனம்.
கடந்த திமுக ஆட்சியில் இருந்த அதே அதிகாரிகள் தான் இந்த ஆட்சியிலும் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இப்பணிகளுக்காக ஒதுக்கீடு செய்தது , மொத்த டெல்டாவுக்கும் சேர்த்து 459 கோடி நிதி அப்போதே ஒதுக்கப்பட்டது. முதல்வர் பார்வையிட்டார். அப்படியிருந்தும் , கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வேலை, இப்போது 1 மாதத்தில் முடிந்தது எப்படி? இதற்கு காரணம் யார்? ஆட்சியாளர்களின் துரித உத்தரவா? அல்லது அதிகாரிகளின் செயல்பாட்டில் வந்த மாற்றமா? இந்தக் கேள்விக்கான பதிலை சமூகத்தின் மீது அக்கறை உள்ள அனைவருமே கூறட்டும்.
நீண்டகால பிரச்சனைக்கு ஒரு மாதத்தில் தீர்வு கண்ட தமிழக வெற்றிக் கழக அரசுக்கும், அதன் தலைவர் விஜய்க்கும் ‘அரசியல் மாநாடு’ தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
அதே நேரத்தில், இந்த அரசு உடனடியாக செய்ய வேண்டிய முக்கியமான பணி ஒன்று உள்ளது. கடந்த ஆட்சியில் தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்ட 459 கோடி ரூபாய் நிதி முறையாக செலவிடப்பட்டதா? எந்தெந்த இடங்களில் பணிகள் நடந்தன, எங்கெல்லாம் நடக்கவில்லை? இதில் யாரால், எங்கே தவறு நடந்திருக்கிறது என்பதை முழுமையாக ஆய்வு செய்து, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் வரிப்பணம் வீணாகாது.
நம்ம கிராமத்துப் பக்கம் ஒரு பழமொழி உண்டு: “ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும்” என்று. ஆனால் கடந்த ஆட்சியில், ஆற்றை தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியில் அளவில்லாமல் போட்டுவிட்டார்களா? அல்லது கணக்கில் மட்டும் எழுதி கரைத்துவிட்டார்களா? என்பதை இந்த அரசு ஆய்வு செய்து மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும்.
459 கோடி நிதி வெண்ணாறுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டதல்ல. அது மொத்த காவிரி டெல்டாவுக்குமான நிதி. எனவே, இந்தப் பணி இத்தோடு நின்றுவிடக் கூடாது. டெல்டா முழுவதும் உள்ள அனைத்து ஆறுகளையும், நீர்நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் முழுமையாக தூர்வார வேண்டும். ஏதோ ஒரு இடத்தில் மட்டும் சீரமைப்பு செய்துவிட்டு, வேறு பல இடங்களில் ‘ஏனோ தானோ’ என கணக்கு மட்டும் எழுதிவிட்டு பணிகளை பார்க்காமல் விட்டுவிடக் கூடாது.
அப்படி எங்காவது நடந்தால், அதனையும் ‘மாநாடு’ செய்திக் குழுமம் தயவு தாட்சண்யமின்றி வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்பதை இதன் மூலம் அழுத்தமாக தெரிவித்துக்கொள்கிறோம்.
