மாநாடு June 2026
மதுரை மாநகராட்சியில் 2025 பிப்ரவரி 3-ம் தேதி முதல் பெண் ஆணையராகப் பொறுப்பேற்ற சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ், கடும் நிதி நெருக்கடி, தேங்கிக் கிடந்த நிர்வாகச் சிக்கல்கள், மக்களின் அதிருப்தி என பல பிரச்சினைகளுக்கு மத்தியில் பணியைத் தொடங்கினார். 2021 முதல் 2025 வரை நான்கே ஆண்டுகளில் ஐந்து ஆணையர்கள் மாற்றப்பட்டிருந்த நிலையில், அரசியல் நெருக்கடி மற்றும் அதிகாரிகளின் ஒத்துழையாமையைக் கடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் களத்தில் நின்று பணியாற்றினார்.
அவர் முதலில் கையில் எடுத்தது பல ஆண்டுகளாக புகார் அளவிலேயே இருந்த சொத்துவரி முறைகேடு. ஒவ்வொரு மண்டலமாக நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, வரி வசூல் கணக்குகளை முழுமையாகத் தணிக்கை செய்ய உத்தரவிட்டார். அதன் முடிவில் உதவி ஆணையர் முதல் பில் கலெக்டர்கள் வரை 28 பேர் முறைகேட்டில் தொடர்புடையவர்கள் என உறுதியானது. எந்தத் தயக்கமும் இல்லாமல் ஒரே உத்தரவில் 28 பேரையும் பணியிடை நீக்கம் செய்து, மேல் விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கவும் பரிந்துரை செய்தார். இந்த நடவடிக்கையின் தாக்கம் அதிகாரிகளோடு நிற்காமல் அரசியல் மட்டத்திற்குச் சென்றது. ஆளுங்கட்சி மேயர் மற்றும் ஐந்து மண்டலத் தலைவர்கள் பொறுப்பைத் தக்கவைக்க முடியாத சூழல் உருவானது.
வருவாயை மீட்கும் வேலையையும் உடனே தொடங்கினார். ஆண்டுக்கணக்கில் குடியிருப்பு வரி மட்டுமே செலுத்தி வந்த சுமார் 200 திருமண மண்டபங்களைக் கண்டறிந்து வணிக வரி வரம்புக்குள் கொண்டு வந்தார். அதனால் மாநகராட்சியின் சொத்துவரி வருவாய் 10 முதல் 13 சதவீதம் வரை உயர்ந்ததாம். நிர்வாகம் தெருவில் இருக்கிறது என்பதை நிரூபிக்க, தினமும் காலை 6.30 மணிக்கு முன்னறிவிப்பு இல்லாமல் ஏதாவது ஒரு வார்டுக்குச் சென்று தூய்மை, குடிநீர் என அனைத்தையும் நேரில் பார்வையிடுவாராம். 2025, 2026 சித்திரைத் திருவிழாக்களின்போது 24 மணி நேரமும் தூய்மைப் பணி தொடர்ந்து நடந்தது.
மக்கள் பயன்பெற புதிய குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, சொத்துவரி திருத்தம் என ஒவ்வொரு சேவைக்கும் சிறப்பு முகாம்களை நடத்தினார். இடைத்தரகர்கள் தொல்லை இல்லாமல், லஞ்சம் இல்லாமல் ஒரு வாரத்திற்குள் மக்கள் இணைப்பு ஆணையைப் பெற்றார்களாம். மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தி, அடித்தட்டு மாணவர்களை ஹைதராபாத் ‘டி ஒர்க்ஸ்’ மற்றும் பெங்களூரு இஸ்ரோ மையங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றார். முல்லைப்பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், வண்டியூர் கண்மாய் சுற்றுலாப் பூங்கா, ராஜாஜி பூங்கா சீரமைப்பு போன்ற கிடப்பில் கிடந்த திட்டங்களையும் விரைந்து முடிக்க முடுக்கிவிட்டார்.
இப்படி கட்சி பாரபட்சம் இல்லாமல் முறைகேட்டின் மீது நடவடிக்கை எடுத்து, வருவாயைப் பெருக்கி, மக்கள் நலப் பணிகளில் அர்ப்பணித்துக்கொண்ட ஆணையர் சித்ரா, இப்போது சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாகத்தில் துணிச்சலும் நேர்மையும் இருந்தால், அரசியல் அதிகாரத்தையும் கேள்வி கேட்க முடியும் என்பதற்கு இவரது பணிக்காலம் ஒரு சிறந்த சான்றாக அமைந்துள்ளது.
