மாநாடு June 2026
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எஸ். ரமேஷ், கோயில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பக்தர்கள் நலன் மற்றும் ஆக்கிரமிப்பு சொத்து மீட்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் 250 சதுர அடி வீட்டில் வசித்து வந்த இவர், பொறியியல் பட்டதாரி. இவரது தந்தை கே. சீனிவாசன் மறைமலைநகரில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு கோயிலில் மாதம் ரூ.5,000 சம்பளத்தில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். தாயார் எஸ். சுமதி, மயிலாப்பூரில் சமையல் பணி செய்து வருகிறாராம். விஜய் மக்கள் இயக்கத்தில் இளம் வயது முதல் தொடர்பில் இருந்த ரமேஷ், முன்னதாக ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணியாற்றியவர். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த இளைஞருக்கு இந்து சமய அறநிலையத்துறை போன்ற முக்கிய துறையை ஒப்படைத்து வாய்ப்பளித்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் துணிச்சலான முடிவு, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. வேறு எந்த கட்சியிலும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தாலும், இத்தகைய எளிய பின்னணி கொண்ட ஒருவர் வெற்றி பெற்று அமைச்சராகும் வாய்ப்பு அரிது.
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எழுந்த சமூக விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், “மக்கள் முதலமைச்சரின் தலைமையைப் பார்த்து வாக்களித்தார்களே தவிர, சாதியைப் பார்த்து அல்ல. எங்கள் அரசு மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்காக உறுதியாக நிற்கிறது. சாதி, மதம், மொழி, பாலினம் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை. தனிநபர்களை அவர்களின் சமூக சேவை செய்யும் நோக்கத்தால் மட்டுமே மதிப்பிட வேண்டும், சாதியால் அல்ல” என்று திருச்சியில் நடந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1351-வது சதய விழாவில் தெரிவித்தார். மேலும், “பெரியார் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சித்தாந்தங்களை எங்கள் அரசு கண்டிப்பாக பின்பற்றுகிறது” என்றும் குறிப்பிட்டார்.
அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் முருகன் கோயிலில் முகக்கவசம் மற்றும் கருப்பு டி-சர்ட் அணிந்து சாதாரண பக்தர் போல மாறுவேடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கோயில் அர்ச்சகர் ஒருவர் சிறப்பு தரிசனத்திற்கு பணம் கேட்டது அம்பலமானது.
அர்ச்சகர் ஐயப்பன் ஐயரை கோயில் சடங்குகள் நடத்துவதில் இருந்து தடை செய்து இணை ஆணையர் உத்தரவிட்டார். பக்தர்களிடம் பணம் பெற்று தரிசனத்திற்கு அனுமதித்த இரண்டு பாதுகாவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், “பக்தர்களை சுரண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். சேவை என்ற பெயரில் சட்டவிரோதமாக பணம் வசூலிக்க வேண்டிய அவசியமில்லை என்றார். இந்த நடவடிக்கைக்கு திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து, பாரம்பரிய திருச்சுதந்திர அர்ச்சகர் சமூகத்தை அமைச்சர் அவமதித்ததாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், “தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட்டால், கோபம் மற்றும் பதற்றத்திற்கான காரணம் புரியவில்லை. திருச்செந்தூர் கோயிலில் மேலும் முறைகேடுகள் நடக்கின்றன, அவை விரைவில் வெளிச்சத்திற்கு வரும். அதற்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்.
கோயில்களுக்கு சொந்தமான சுமார் 13 லட்சம் ஏக்கர் ‘இனாம்’ நிலங்களை மீட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். இந்த நிலங்கள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புடையவை. தற்போது லட்சக்கணக்கான மக்கள் மற்றும் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பில் விவசாயம், குடியிருப்பு மற்றும் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. “கோயில் நிலங்களை கண்டறிய கடந்த ஆண்டுகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டாலும், கோயில்களுக்கு உரிமையான ‘இனாம்’ நிலங்களுக்கு போதுமான கவனம் செலுத்தப்படவில்லை. மாவட்ட வாரியாக ‘இனாம்’ நிலங்களின் விவரங்களை, நில அளவை பதிவுகள், மீட்பு முயற்சிகளின் தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை தொகுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பணிகள் நடைபெறுகிறது என்றார்.
அனைத்து கோயில்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே உடனடி முன்னுரிமை என்று கூறிய அமைச்சர், வாகன நிறுத்துமிடம், செல்போன் டெபாசிட் கவுண்டர்கள், காலணி நிலையங்கள், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் பிரசாதத்தின் தரம் ஆகியவற்றை பட்டியலிட்டார். “இவை அடிப்படை தேவைகளாக தோன்றினாலும், அவற்றின் முறையான செயல்பாட்டை உறுதி செய்வதில் கணிசமான முயற்சி தேவைப்படுகிறது. தற்போது, பல கோயில்களில் குடிநீர் வழங்கும் அலகுகள் செயல்படவில்லை” என்றும் சுட்டிக்காட்டினார். தினமும் கோடிக்கணக்கான பக்தர்கள் கோயில்களில் பிரசாதம் வாங்குவதால், அதன் தரத்தை உறுதி செய்ய அச்சிடப்பட்ட அல்லது QR குறியீடு அடிப்படையிலான காலாவதி தேதிகளை வழங்கும் நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுமந்த ‘வாகை’ மலரை தனது கட்சிக் கொடியில் இணைத்துள்ளதாகவும், அது உறுதியான வெற்றியின் அடையாளமாக பண்டைய ஆட்சியாளரின் பாரம்பரியத்தை பின்பற்றும் உறுதியை பிரதிபலிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
