Spread the love

மாநாடு 07 July 2026

நீங்கள் உண்மையிலேயே ஊழல் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதற்காக தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்கிறீர்களா? உங்களுக்கு அரசு அதிகாரிகள் அல்வா கொடுப்பதற்கு தோதுவாக 8ன் படி தனிநபர் தகவல் எனவே தகவல் தர வழியில்லை என்பதை தகவலாக தருகிறோம் என்று சால்ஜாப்பு சொல்கிறார்களா? முதலில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்ன சொல்கிறது? அதில் எந்த பிரிவுகளை எப்படி கையாள வேண்டும் என்பதை மிகவும் துல்லியமாக தெரிந்து வைத்துக் கொண்டால் துணிச்சல் தானாக வரும்.

இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் தகவல் அறியக் கூடிய உரிமை படைத்தவர்கள் இதை மறுக்க பொது அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை இந்த தீர்ப்பின் மூலம் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது , யாரிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவலை கேட்கக் கூடாது என்று தெரியுமா?

உங்க வீட்டுக்கு வெள்ளை அடிக்க வரும் பெயிண்டரிடம் போய், “ஐயா உங்க வீடு எங்க இருக்கு? வங்கியில் எவ்வளவு பணம் இருக்கு? கடன் வாங்கியிருக்கீங்களா?” என்று கேட்டால் அது அநாகரிகம். அது அவருடைய தனிநபர் விஷயம். நமக்கு அதை கேட்க உரிமை இல்லை. ஆனால் அதே கேள்வியை ஒரு அரசு அதிகாரியிடம் கேட்கலாமா? கேட்கலாம் என்கிறது சட்டம். ஏன் தெரியுமா? அந்த பெயிண்டருக்கு நீங்க உங்க சொந்த காசுல கூலி கொடுக்கிறீங்க. ஆனா அரசு அதிகாரிக்கு நாம எல்லாரும் சேர்ந்து கட்டுற வரிப்பணத்துலதான் மாசா மாசம் சம்பளம் போகுது.

நம்ம வீட்டு வரிக்காசு, பெட்ரோலுக்கு கட்டுற வரி, ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கினால் கூட அதில் இருக்கும் வரி, இப்படி நாம சிந்துற ஒவ்வொரு ரூபாயிலும் அவருக்கு சம்பளம் போகுது. அப்போ அவர் நேர்மையா இருக்காரா? வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்திருக்காரா? என்று கேட்கிறது எப்படி தனிநபர் விஷயமாகும்? அது நம் எல்லாருடைய பொது நலன் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா?

இந்த கேள்வியைத்தான் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், சங்கீதா என்ற இருவரும் கேட்டிருக்கிறார்கள். 2023-ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இரண்டு மனுக்கள் போட்டிருக்கிறார்கள். ஒன்று, நீர்த்தேக்க திட்டத்தில் வேலை பார்க்கும் உதவிப் பொறியாளர் ஒருவரின் வருமானத்துக்கு அதிகமான சொத்து பற்றி. இன்னொன்று, ஒரு பஞ்சாயத்து செயலாளரின் பணிப்பதிவேடு, அவர் எப்போது வேலைக்கு சேர்ந்தார், அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் எவ்வளவு சொத்து இருக்கு, எவ்வளவு கடன் இருக்கு என்ற முழு விவரம். ஆனால் என்ன நடந்தது? கிராம நிர்வாக அலுவலர் முதல் மாநில தகவல் ஆணையம் வரை எல்லாரும் ஒரே பதில்தான் சொன்னார்கள். “இது தனிநபர் தகவல். சட்டம் பிரிவு 8-ன்படி தர முடியாது” என்று ஒரே வரியில் கதவை சாத்திவிட்டார்கள். முதல் மேல்முறையீடு, இரண்டாம் மேல்முறையீடு என்று எங்கு போனாலும் இதே பதில்தான். காரணம் கூட சொல்லவில்லை.

வேறு வழியில்லாமல் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார்கள். வழக்கு நீதிபதி C.V.கார்த்திகேயன் முன்பு வந்தது. 20.12.2024 அன்று அவர் போட்ட உத்தரவு இனி RTI மனு போடும் ஒவ்வொரு சாமானியனுக்கும் ஒரு திறவுகோல்.

நீதிபதி என்ன சொல்கிறார்? ரொம்ப தெளிவாக சொல்கிறார். “ஆமாம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 8(j) 2023-ல் திருத்தப்பட்டது உண்மைதான். தனிநபர் தகவல்களை பாதுகாக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் யாருக்கு? உங்களுக்கும் எனக்கும் போன்ற சாதாரண குடிமக்களுக்குத்தான் அந்த பாதுகாப்பு. ஒரு அரசு ஊழியர் பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் பொது ஊழியர். அவருடைய சொத்து, கடன் விவரங்கள் மக்கள் பார்வைக்கு வர வேண்டியவைதான். அதை ரகசியம் என்று மூடி மறைக்க முடியாது.”

அதே நேரத்தில் நீதிபதி இன்னொரு நியாயத்தையும் சொல்கிறார். “எல்லாத்தையும் கேட்கலாம் என்று அர்த்தம் இல்லை. ஒரு அதிகாரியின் பணியில் சேர்ந்த தேதி, பதவி உயர்வு வாங்கிய தேதி, எங்கெல்லாம் மாறுதல் ஆனார், என்ன வேலை பார்க்கிறார், ஊதிய உயர்வு, விடுப்பு எடுத்த விவரம், தண்டனை வாங்கியிருக்கிறாரா என்ற பணிப்பதிவேட்டில் இருக்கும் தகவல்கள் அவருடைய வாழ்க்கையை பாதிக்காது. அதை தாராளமாக தரலாம். ஆனால் அவருடைய மாத சம்பளம் எவ்வளவு, வங்கி கணக்கு எண் என்ன, அவர் குடும்பத்தினர் பெயரில் என்ன சொத்து இருக்கிறது என்று மூக்கை நுழைப்பது தனிநபர் விஷயம். அதற்கு ஒரு எல்லை உண்டு.”

இதில் மிக முக்கியமான சவுக்கடி எங்கே இருக்கிறது தெரியுமா? அதிகாரிகள் செய்யும் தவறை நீதிபதி போட்டு உடைக்கிறார். “தகவல் கேட்டா உடனே ‘பிரிவு 8-ன்படி தர முடியாது’ என்று ஒரே வரியில் ஒட்டுமொத்தமாக மறுக்கிறீர்களே, அது தப்பு. அப்படி செய்யக்கூடாது. Service Register-ஐ எடுத்து ஒவ்வொரு பக்கமாக படித்துப் பாருங்கள். இதை தரலாம், இது தனிநபர் விஷயம் தரக்கூடாது என்று பிரித்து ஆராய வேண்டும். எதை மறுக்கிறீர்களோ அதற்கு ‘இந்த காரணத்தால் மறுக்கிறேன்’ என்று எழுத்துப்பூர்வமாக காரணம் சொல்லியே ஆக வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு ‘எல்லாமே ரகசியம்’ என்று சொல்ல முடியாது” என்று கறாராக சொல்லியிருக்கிறார்.

இந்த தீர்ப்பு சொல்லும் செய்தி ஒன்றே ஒன்றுதான். அரசாங்க சம்பளம் வாங்கும் ஒவ்வொரு அதிகாரியும் மக்களுக்கு கணக்கு காட்ட கடமைப்பட்டவர்கள். அவர்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. “இது என்னுடைய பர்சனல்” என்று சொல்லி தப்பிக்க முடியாது. அதே நேரத்தில், தகவல் கேட்பவர்களும் எல்லை மீறாமல், எது பொது நலன், எது தனிநபர் அந்தரங்கம் என்று பிரித்து கேட்க பழக வேண்டும். அதிகாரிகளும், “மேலிடத்து உத்தரவு” என்று கண்மூடித்தனமாக மறுக்காமல் சட்டத்தை படித்து, காரணம் சொல்லி பதில் தர வேண்டும்.

வரி கட்டும் சாமானியனின் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு கேட்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையை இந்த தீர்ப்பு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது .

இனி RTI போடும்போது “தனிநபர் தகவல்” என்று சொல்லி உங்கள் மனுவை தூக்கி எறிந்தால், இந்த தீர்ப்பை தூக்கிக் காட்டுங்கள். W.P.No. 33854 of 2024,

Source: மாற்றத்தை நோக்கி

92890cookie-checkRTIல் தனிநபர் தகவல் என்று மறுக்கக்கூடாது, உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Leave a Reply

error: Content is protected !!