Spread the love

மாநாடு 16 July 2026

உலகப் புகழ்பெற்ற யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான தஞ்சாவூர் பெரியகோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், வாகன நிறுத்துமிட பற்றாக்குறை, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் விரிவான கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆர். பிரகாஷ், B.Sc., M.L. தலைமையில் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் நேரில் வழங்கினர். மனுவில் சுற்றுலா மேம்பாடு, பாரம்பரிய பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் பொதுமக்கள் நலன் ஆகிய அம்சங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் பெரியகோவில் உலகின் முக்கியமான பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள், மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தினமும் இப்பகுதிக்கு வருகை தருகின்றனர். ஆனால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் திட்டமிட்ட போக்குவரத்து வசதிகளும் போதுமான அளவில் இல்லாததால் கடும் சிரமம் ஏற்படுவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெரியகோவில் அருகே போதுமான வாகன நிறுத்துமிடம் இல்லாததால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலைகளிலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தினசரி கடும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பெரியகோவிலிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் ஒருங்கிணைந்த நவீன சுற்றுலா மையம் அமைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், குடிநீர் வசதி, கழிப்பறைகள், ஓய்வறைகள், அரசு உணவகம், புத்தகக் கடைகள், தஞ்சாவூர் கைவினைப் பொருட்கள் விற்பனை மையம், சுற்றுலா தகவல் மையம், புதிய சுற்றுலா காவல் நிலையம், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரியகோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள காலியாக இருக்கும் அரசு நிலங்கள், பழைய நீதிமன்ற வளாகம், மாநகராட்சி வளாகம் மற்றும் பிற அரசு அலுவலகங்களின் பயன்பாடற்ற இடங்களை ஒருங்கிணைத்து நிரந்தர வாகன நிறுத்துமிடங்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை சட்டப்படி அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும், பெரியகோவில் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் அறிவியல் அடிப்படையிலான போக்குவரத்து திட்டம் தயாரிக்க வேண்டும். தேவையான இடங்களில் சிக்னல்கள் அமைத்தல், சாலை அகலப்படுத்துதல், ஒருவழிப்பாதை மாற்றங்கள், வாகன இயக்கத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையரும், மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து ஆய்வு செய்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

93070cookie-checkதஞ்சாவூர் பெரியகோவில் போக்குவரத்து நெரிசல் ,நிரந்தர தீர்வுக்கான மனு

Leave a Reply

error: Content is protected !!