Spread the love

மாநாடு 22 July 2026

நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் போக்குவரத்து கழகங்களுக்குதனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்! தஞ்சையில் நடைபெற்ற கும்பகோணம் ஏ ஐ டி யு சி 42 வது பேரவை கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்படும் ஏ ஐ டி யு சி தொழிற் சங்கத்தின் 42 வது பேரவை கூட்டம் தஞ்சாவூர் கீழ ராஜவீதி மாவட்ட கூட்டரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. பேரவை கூட்டத்திற்கு மத்திய சங்கத் தலைவர் என்.சேகர் தலைமை வகித்தார். கௌரவ தலைவர் கே.சுந்தர பாண்டியன் முன்னிலை வகித்தார். 42வது பேரவை கொடியை ஏ ஐ டி யு சி மாநிலச் செயலாளர் ஆர். தில்லைவனம் ஏற்றி வைத்து சிறப்பித்தார்.

தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் பேரவையை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆர். ஆறுமுகம் பேரவையை நிறைவு செய்து உரையாற்றினார் கும்பகோணம் சங்க பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச் செல்வன் நடைபெற்ற பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தார்.

பொருளாளர் சி.ராஜ மன்னன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். பேரவையை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோ.சக்திவேல், போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவர் துரை. மதிவாணன், ஏஐடியுசி. மாவட்ட தலைவர் வெ.சேவையா, பொருளாளர் தி.கோவிந்த ராஜன், உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் தி.திருநாவுக்கரசு, மின்வாரிய சங்கத் துணைத் தலைவர் பொன் . தங்கவேல், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ் வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

தமிழக முதல்வர் கடந்த மாதம் அரசு போக்குவரத்து கழகங்கள் சம்பந்தமாக செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆய்வினை மேற்கொண்டுள்ளார். ஏ ஐ டி சி சார்பாக அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாத்திடவும், சாதாரண அடித்தட்டு மக்களுக்கு பயண சேவையை மேம்படுத்தி விடவும் பல்வேறு ஆலோசனைகளை முன் வைத்துள்ளோம்.

சட்டப் பேரவையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாதாரண மக்களின் பயண தேவையை நிறைவு செய்யும் வகையில் சேவைகளை மேம்படுத்தவும், சேவை நோக்கத்தில் செயல்படும் போக்குவரத்து கழங்களின் நிதி பற்றாக்குறையை ஈடு செய்யவும் போக்குவரத்து கழகங்களுக்கு என்று தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,

அன்றாடம் வரவுக்கும் செலவுக்கும் ஏற்படுகின்ற இடைவெளியையும், அரசின் சமூக நல திட்டங்களை நிறைவேற்றுகின்ற போக்குவரத்து கழகங்களுக்கு அவ்வப்போது அதனை ஈடு கட்டும் நிதி வழங்கிட வேண்டும், போக்குவரத்து தொழிலாளர் களுக்கு 15வது ஊதிய ஒப்பந்த கோரிக்கையில் உயர்த்தப் பட்டுள்ள சம்பள நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும், அதேபோல் 20 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு மற்றும் ஈஎல் சரண்டர் தொகையை வழங்க வேண்டும்,

போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்தம் , கான்ட்ராக்ட், அவுட் சோர்சிங் உள்ளிட்ட தனியார் லாபம் பெறும் நடவடிக்கைகள் முற்றிலும் கைவிடப்பட வேண்டும்,விழா காலங்கள், பண்டிகை காலங்கள், கோடை காலங்களில் தனியார் ஒப்பந்த பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க கூடாது, நாளுக்கு தான் உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பயணிகளின் தேவையினை கருத்தில் கொண்டு கூடுதலான பேருந்துகளை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்,

பேருந்துகளை பராமரித்திட தரமான உதிரி பாகங்கள் பற்றாக்குறை இன்றி கொள்முதல் செய்து தங்கு தடையின்றி வழங்க வேண்டும், 13000,தொழில்நுட்ப பணியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பிடவும், பராமரிப்பின் தரம் மேம்படவேண்டும், வார ஓய்வு, சொந்த விடுப்புகள், கூடுதல் பணி வாங்கும் நடைமுறை கைவிட ஓட்டுநர், நடத்துனர், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 30 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும்,

ஓய்வு பெற்றவர் களுக்கு கடந்த ஏப்ரல் 26 முதல் பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்பு தொகை வழங்கப் படவில்லை. உடன் வழங்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்பின்படி அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை, அவ்வப்போது உயர்கின்ற அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெற்றவர் களுக்கு வழங்க வேண்டும், ஒப்பந்தத்தின் பலன்களும் வழங்கப்பட வேண்டும்,

அரசு காப்பீட்டு தொகை பிரிமியம் செலுத்தி பணியில் உள்ள தொழிலாளர்களுக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும் வழிகாட்டுதல் மருத்துவ காப்பீடு திட்ட பயன்கள் கிடைக்கும் வகையில் செயல்படுத்திட வேண்டும், தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் சிபிஎஸ் ஓய்வூதிய திட்டம், டாப்ஸ் ஓய்வூதிய திட்டங்களை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக அரசுக்கு முன்வைக்கப் பட்டது..

முன்னதாக மத்திய சங்கத் துணைத் தலைவர் டி. சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைச் செயலாளர் என். ஆர்.செல்வராஜ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். முடிவில் மத்திய சங்க துணைச் செயலாளர் என்.ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார்.

93860cookie-checkதஞ்சையில் நடைபெற்ற கும்பகோணம் ஏ ஐ டி யு சி 42 வது பேரவை கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை

Leave a Reply

error: Content is protected !!