Spread the love

மாநாடு 29 October 2026

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.400 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் இன்று காலை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, அவரை வருகிற நவம்பர் 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி, பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், சங்கத்தின் மாநில பொருளாளரான முத்துக்குமார் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 26-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் தலைமறைவாக உள்ளார் என்றும், அவரை அன்பில் மகேஸ் பாதுகாத்து வருகிறார் என்றும், இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன், அன்பில் மகேஸின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அன்பில் மகேஸ் உடனடியாக கைது செய்யப்பட்டு தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் தரப்பில் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று வியாழக்கிழமை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

இதற்கிடையே தலைமறைவாக இருந்த முத்துக்குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்திருந்தது. இந்த பின்னணியில் தான் முத்துக்குமார் இன்று காலை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

95160cookie-checkரூ.400 கோடி மோசடி வழக்கு: முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண்

Leave a Reply

error: Content is protected !!