Spread the love

மாநாடு 05 November 2026

சென்னையில் கடந்த ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக சென்னை மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன், சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பொன்முடிக்கு எதிராக தனிநபர் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் மதரீதியான வெறுப்புணர்வை தூண்டுதல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடிக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரியிருந்தார். பின்னர் இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை ஜார்ஜ் டவுன் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சுந்தரபாலன் முன்பு நேற்று (04.11.2026) விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரரான உமா ஆனந்தன் நேரில் ஆஜராகி வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது பேச்சுக்காக பொன்முடி பொதுவெளியில் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும், அவரது வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு வழக்கை திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வீகச் செயல் என்பதால், யாருடைய வற்புறுத்தலும் இன்றி, எவ்வித சமரசமும் இல்லாமல் இந்த வழக்கை திரும்பப் பெறுவதாகவும், பொன்முடியை விடுவிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பொன்முடியை இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார். புகார்தாரரே வழக்கை வாபஸ் பெற்றதை அடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

95570cookie-checkபாஜக கவுன்சிலர் முடிவு, திமுக முன்னாள் அமைச்சர் விடுவிப்பு

Leave a Reply

error: Content is protected !!