மாநாடு 7 May 2022
திமுக மு க ஸ்டாலின் தலைமையில் தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றி பெற்றது கடந்த மே மாதம் 7ஆம் தேதி மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார் இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது அதனையொட்டி பல அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார் அவை பின்வருமாறு:
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கூடத்திலேயே காலைச் சிற்றுண்டி வழங்கப்படும். முதல் கட்டமாக ஊராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடமிருந்து இத்திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவுபடுத்தப்படும். அனைத்து பள்ளி வேலை நாள்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு முழுவதும் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும். முதற்கட்டமாக 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 மாநகராட்சி மற்றும் அரசு மேல் நிலை பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். கலை, இலக்கியம், இசை போன்றவற்றை கற்பதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படும்.
நகர்ப்புற மருத்துவமனைகளில் காலை 8மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4மணி முதல் 8 மணி வரையிலும் நோயாளிகளுக்கு மருத்துவ வசதி வழங்கப்படும். 2030க்குள் அனைவருக்கும் நல்வாழ்வு என்பதை தமிழ்நாடு எட்டும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் தலைமை மருத்துவமனைகளில் நெருக்கடியை குறைக்கும் நோக்கில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிப் பகுதிகளிலும் 63 நகராட்சிப் பகுதிகளிலும் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படும். மருத்துவ வசதி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ வசதியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தும் வழங்கப்படும்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படாத திட்டங்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளின் பேரில் செயல்படுத்தப்படும். இதற்கென்று 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.இந்த ஓராண்டு காலத்தில் செய்யக்கூடியதைவிட அதிகமாக செய்துவிட்டோம் என என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். இன்னும் வேகமாக செல்ல முடியாத அளவுக்கு தடையாக இருப்பவை நிதி நிலை நெருக்கடியும் மத்திய அரசின் சில நிலைப்பாடுகளும்தான்.
மற்றவர்களின் பலத்தை நம்பி அரசியல் செய்பவனல்ல நான். என்னுடைய பலத்தை நம்பியே அரசியல் செய்கிறேன். எனது பலம் எனது இலக்கில் இருக்கிறது. எனது இலக்கை எப்படியும் அடைவேன். என்னுடைய இலக்கிற்கு திராவிட மாடல் என்று பெயர் என்றார்.
