Spread the love

மாநாடு 20 July 2026

பேராவூரணியில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து: உணவகம், மெக்கானிக் ஷாப் உட்பட 4 கடைகள் எரிந்து நாசம் .

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையம் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், உணவகம், மெக்கானிக் ஷாப் மற்றும் பெட்டிக்கடைகள் என மொத்தம் நான்கு கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகின.

பேராவூரணி பேருந்து நிலையம் அருகே மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான ‘மணி மெஸ்’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில், உணவகத்தில் சமையல் பணிக்காக ஆயத்த வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது, எதிர்பாராத விதமாக உணவகத்தில் தீப்பற்றியது. கண் இமைக்கும் நேரத்தில் தீ மளமளவெனப் பரவி, அங்கிருந்த சமையல் எரிவாயு உருளை (Gas Cylinder) பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீப்பிழம்புகள் அருகில் இருந்த கடைகளுக்கும் வேகமாகப் பரவின. இதில், நாகப்பன் என்பவருக்குச் சொந்தமான டயர் பஞ்சர் மற்றும் மெக்கானிக் ஷாப், மேலும் சின்னையன் மற்றும் முத்துராமன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு பெட்டிக்கடைகள் என மொத்தம் நான்கு கடைகள் முற்றிலுமாகத் தீயில் எரிந்து கருகின.

தீ விபத்து ஏற்பட்டவுடன், உணவகத்தில் பணியில் இருந்த சமையலர் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறியதால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேராவூரணி மற்றும் அறந்தாங்கி தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாகப் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்வதில் தற்காலிகப் பாதிப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், தீயணைப்புப் பணிகளை விரைவுபடுத்தியதுடன், பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இத்தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

-பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன்

93600cookie-checkபேராவூரணியில் பயங்கர தீ விபத்து

Leave a Reply

error: Content is protected !!