Spread the love

மாநாடு 28 May 2026

தஞ்சாவூர் !

தமிழரின் பெருமையை பறைசாற்றும் பெருவுடையார் கோயில் இருக்கும் மண். சோழர்கள் ஆண்ட தலைநகரம். ஆனால் இன்று அந்த தஞ்சையை சுற்றி வரும் பைபாஸ் சாலைகளின் நிலைமையை பார்த்தால், “வளர்ச்சி” என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

கண்ணால் கண்ட காட்சி – 01.05.2026

நாகப்பட்டினம் சாலை, கும்பகோணம் சாலை, பட்டுக்கோட்டை இணைப்பு சாலை என தஞ்சையை இணைக்கும் அனைத்து பைபாஸ் சாலைகளின் ஓரங்களும் இன்று குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன. ‘மாநாடு நியூஸ் மீடியா’ கள ஆய்வில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே சாலையின் பாதி அகலத்திற்கு குப்பை. அழுகிய மெத்தை, பிளாஸ்டிக் குப்பைகள், உணவு கழிவுகள். கும்பகோணம் பிரிவு சாலையின் சிக்னல் அருகே, பச்சை போர்டுக்கு கீழேயே மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகள். இது ஒரு நாள் கதை இல்லை. மாதக்கணக்கில், வருடக்கணக்கில் தொடரும் அவலம்.

இங்கு கொட்டப்படுவது வெறும் வீட்டு குப்பை மட்டுமல்ல. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், ஊசிகள், ரத்தம் தோய்ந்த பஞ்சுகள், மருந்து பாட்டில்கள், கிளவுஸ்கள் என மருத்துவக் கழிவுகளும் பகிரங்கமாக கொட்டப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். இந்தக் குப்பைகள் அடிக்கடி திறந்தவெளியில் எரிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. எழும் கரும்புகையில் டயாக்சின், ஃபியூரான் போன்ற கொடிய நச்சு வாயுக்கள் கலந்திருக்கும். இதை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் வரை வரலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த பிரச்சினையின் மையப்புள்ளியே “எல்லை” தான். பாதிக்கப்பட்ட பைபாஸ் சாலைகளில் பெரும்பாலான பகுதிகள் தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்கு வெளியே வருகின்றன. சில பகுதிகள் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டவை. சில பகுதிகள் நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளவை.

இந்த “எல்லை குழப்பத்தை” பயன்படுத்தியே குப்பை கொட்டும் கும்பல் தப்பித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். “இது எங்க லிமிட் இல்ல” என்று ஒரு துறையும், “எங்களுக்கு ஆள் பற்றாக்குறை” என்று இன்னொரு துறையும் கைவிரிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். “ரோட்டை மட்டும் தான் பார்ப்போம், ஓரத்தை பார்க்க மாட்டோம்” என்று நெடுஞ்சாலைத் துறை ஒதுங்கிக் கொள்வதாகவும் புகார் உள்ளது. இந்த மூன்று துறைகளின் பொறுப்பு தட்டிக்கழிப்பில், மக்களின் உயிர் பணயம் வைக்கப்படுகிறது.

எல்லை பிரச்சினை இருந்தாலும், ஒரு துறைக்கு எல்லை இல்லை. அதுதான் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB).

Bio-Medical Waste Management Rules, 2016 விதி 4(i) தெளிவாக சொல்கிறது: “மருத்துவக் கழிவுகளை உற்பத்தி செய்வோர், சேகரிப்போர், கொண்டு செல்வோர், அகற்றுவோர் அனைவரையும் கண்காணிக்க வேண்டிய முழு பொறுப்பும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தையே சாரும்.”

அதேபோல், Solid Waste Management Rules, 2016 விதி 15 சொல்கிறது: “திறந்தவெளியில் குப்பை எரிப்பதை தடுக்க வேண்டியதும், மீறுவோர் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 15-ன் கீழ் 5 ஆண்டு சிறை, 1 லட்சம் அபராதம் விதிக்க வேண்டியதும் TNPCB-யின் கடமை.”

தஞ்சை பைபாஸில் தினமும் சட்டம் எரிக்கப்படுகிறது. ஆனால் TNPCB தஞ்சாவூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் என்ன நடவடிக்கை எடுத்தது

இதுபோன்ற அலட்சியம் தஞ்சைக்கு மட்டும் சொந்தமில்லை.

1. சென்னை – 2019: பெருங்குடி குப்பை கிடங்கு

திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறியதற்காக, தேசிய பசுமை தீர்ப்பாயம் NGT, சென்னை மாநகராட்சிக்கு ₹1 கோடி சுற்றுச்சூழல் இழப்பீடு விதித்து 28.08.2019 அன்று தீர்ப்பளித்தது. தொடர் மீறலுக்கு நாள் ஒன்றுக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டது.

2. ஈரோடு – 2021: காவிரி ஆற்று மாசு

சாயப்பட்டறை கழிவுகளை முறையாக சுத்திகரிக்காமல் காவிரியில் வெளியேற்றிய வழக்கில், NGT தென்மண்டல அமர்வு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு மொத்தம் ₹25.39 கோடி அபராதம் விதித்து 17.02.2021 அன்று தீர்ப்பளித்தது.

3. கோவை – 2022 & 2024: வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்து

வெள்ளலூர் குப்பை கிடங்கில் 2022 மற்றும் 2024 ஆண்டுகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, நச்சுப் புகை கோவை மாநகரை சூழ்ந்தது. தீயை அணைக்க IAF ஹெலிகாப்டர், 300 தீயணைப்பு வீரர்கள், 14 தீயணைப்பு வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. இதையடுத்து NGT தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, கோவை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த சம்பவங்கள் நமக்கு சொல்லும் பாடம் ஒன்றுதான். “இன்று அலட்சியம், நாளை பேரழிவு.”

உடனடி தீர்வுக்கான 5 அம்ச கோரிக்கை:

1. கூட்டு நடவடிக்கை குழு:

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊராட்சி ஒன்றியம், நெடுஞ்சாலைத் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், காவல்துறை அடங்கிய குழு அமைத்து, 48 மணி நேரத்தில் பைபாஸ் சாலை ஓரங்களில் உள்ள குப்பையை முழுமையாக அகற்றி, அறிவியல்பூர்வமாக அப்புறப்படுத்த வேண்டும்.

2. 24 மணி நேர CCTV கண்காணிப்பு:

நாகை சாலை பிரிவு, கும்பகோணம் பிரிவு, பட்டுக்கோட்டை பிரிவு, முள்ளிவாய்க்கால் முற்றம் உள்ளிட்ட 8 முக்கிய இடங்களில் உயர் தெளிவுத்திறன் கொண்ட CCTV கேமராக்கள் பொருத்தி, கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.

3. TNPCB அதிரடி ஆய்வு மற்றும் வெளிப்படை அறிக்கை:

Bio-Medical Waste Management Rules, 2016 விதி 4(i)-ன் படி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆய்வகங்களில் மருத்துவக் கழிவு மேலாண்மைக்கான ஒப்பந்தம் மற்றும் பதிவேடுகளை TNPCB ஆய்வு செய்து, 15 நாட்களுக்குள் பொதுவெளியில் அறிக்கை வெளியிட வேண்டும்.

4. சட்டப்படி கடும் நடவடிக்கை:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 15 மற்றும் Solid Waste Management Rules, 2016 விதி 15-ன் படி, குப்பை கொட்டும் லாரிகளை பறிமுதல் செய்து, ஓட்டுநர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து, உரிமையாளருக்கு ₹1 லட்சம் வரை அபராதம் விதிக்க வேண்டும். மருத்துவக் கழிவு கொட்டினால் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்.

5. மக்கள் பங்கேற்புடன் கண்காணிப்பு:

குப்பை கொட்டுவதை படம் பிடித்து அனுப்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிவிக்க வேண்டும். துல்லியமான தகவல் கொடுத்து குற்றவாளிகளை பிடிக்க உதவுவோருக்கு, வசூலிக்கப்படும் அபராதத் தொகையில் 10% சன்மானமாக வழங்க வேண்டும்.

அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21 “சுத்தமான சுற்றுச்சூழலில் வாழ்வது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை” என்கிறது. அந்த உரிமையை பாதுகாக்க சத்தியப்பிரமாணம் எடுத்த அதிகாரிகளே, தஞ்சை பைபாஸில் இன்று அந்த உரிமை குப்பையோடு குப்பையாக கிடக்கிறது.

மாவட்ட ஆட்சியரே, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளே, நெடுஞ்சாலைத் துறையினரே, T

NPCB பொறியாளரே… மக்களின் குரல் உங்களுக்கு கேட்கிறதா?

91030cookie-checkவளர்ச்சி சாலையா? வியாதி சாலையா? தஞ்சை சாலைகளின் மறுபக்கம்

Leave a Reply

error: Content is protected !!