Spread the love

மாநாடு 28 May 2026

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இதுவரை எழுதப்பட்ட அத்தனை இலக்கணங்களையும் ஒரே தேர்தலில் அடித்து உடைத்திருக்கிறது தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி. திமுக, அதிமுக என்கிற திராவிடக் கட்சிகளால் மட்டுமே தமிழ்நாட்டை ஆள முடியும், சாதிப் பின்புலம் உள்ள கட்சிகளின் துணை வேண்டும், கூட்டணி பலம் இல்லாமல் வெல்ல முடியாது, பணம் கொடுத்தால்தான் மக்கள் வாக்களிப்பார்கள், தொகுதியில் எந்த சாதி பெரும்பான்மையோ அந்த சாதி வேட்பாளரை நிறுத்தினால்தான் வெற்றி என்று இத்தனை ஆண்டுகளாக அரசியல் ஆய்வாளர்களாலும், ஆளும் வர்க்கத்தாலும் கட்டமைக்கப்பட்ட அத்தனை பிம்பங்களும், அத்தனை அரசியல் அரிச்சுவடிகளும் இப்ப தவிடுபொடியாகி இருக்கின்றன. இந்த உடைப்பு தமிழக அரசியல் வரலாற்றில் வரவேற்கத்தக்க மிகப்பெரிய திருப்புமுனை.

இந்தத் தேர்தலின் மிக முக்கியமான வெற்றி, எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த வேட்பாளர்களும் சட்டமன்றத்துக்குள் நுழைந்திருப்பதுதான். பண பலம் இல்லை, பரம்பரை அரசியல் பின்புலம் இல்லை, சாதி பலம் என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. விஜய் மீதான நம்பிக்கை மட்டுமே இவர்களின் மூலதனம். உதாரணமாக, தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் விஜய் சரவணன், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வாகை சூடியிருக்கும் வினோத் ரவி போன்றவர்கள் இந்த மாற்றத்தின் அடையாளங்கள். இதுவரை வெல்ல வாய்ப்புள்ள வேட்பாளர் என்ற பெயரில் பணக்காரர்களுக்கும், குறிப்பிட்ட சாதியினருக்கும் மட்டுமே சீட்டு கொடுத்து வந்த அரசியல் கலாச்சாரத்தை, தவெக முற்றிலுமாக மாற்றிக் காட்டியிருக்கிறது. இந்த மாற்றத்தை மக்களின் சார்பாக மனதார வரவேற்க வேண்டும், வாழ்த்த வேண்டும்.

இந்த வெற்றியை ‘அரசியல் மாநாடு’ இதழ் 2023 ஜூலை மாதமே கணித்திருந்தது என்பதை இங்கே நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். அப்போது தமிழக அரசியல் களத்தில் இப்போது போலவே அப்போதும் பல அரசியல்வாதிகள் நடித்துக் கொண்டிருந்த சூழலில், மக்களின் மனக்குரலாக ‘அரசியல்வாதிகள் நடிக்கிறார்கள் நீ வா விஜய் அண்ணா’ என்கிற தலைப்பில் அட்டைப்படம் வெளியிட்டு, செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம். அன்று நாம் விதைத்த நம்பிக்கை, இன்று மக்கள் தீர்ப்பால் அறுவடையாகி இருக்கிறது. அந்த வரலாற்று சிறப்புமிக்க அட்டைப்படத்தை மக்களின் பார்வைக்காக இங்கே மீண்டும் பதிவு செய்கிறோம்.

தவெகவின் இந்த வெற்றி, ஊடகவியலாளர்கள் என்கிற போர்வையில் இயங்கி வந்த சிலரின் முகத்திரையையும் கிழித்தெறிந்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக ஆளும் கட்சியான திமுக என்ன செய்தாலும், அதற்கு ஊதுகுழலாக இருந்து கொண்டு, இதுதான் நடக்கும், இவர்களைத் தவிர யாரும் வெல்ல முடியாது என்று ஆருடம் சொல்லி வந்த ஒரு கூட்டத்தின் ஆருடங்கள் அத்தனையும் பொய்யாகிப் போயிருக்கின்றன. அதிலும், பத்திரிகையாளர்கள் என்கிற பெயரில் இயங்கிக்கொண்டு, ஊடகம், பத்திரிகை அறம் என்றால் என்னவென்றே அறியாமல் செயல்பட்டவர்களின் நிலைதான் பரிதாபம்.

தங்கள் வீட்டுக்கு பக்கத்தில் சாக்கடை நாற்றம் அடித்தால் கூட கண்டுகொள்ளாத, கண்டிக்காத, மக்களிடம் எடுத்துச் சொல்லாத இவர்கள், தேர்தல் நேரத்தில் கருத்துக்கணிப்பு என்கிற பெயரில் காசுக்காக கருத்து திணிப்பு செய்து வெளியிட்டனர். அந்தப் போலி கருத்துக்கணிப்புகள் அத்தனையும் மக்கள் தீர்ப்பால் தூக்கி எறியப்பட்டிருக்கின்றன. தேர்தலுக்கு முன் வெளியான 90 சதவீத கருத்துக்கணிப்புகள் தவெகவின் வெற்றியை கணிக்கத் தவறின. மக்கள், ஊடகங்களை விட தெளிவாக இருக்கிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது.

இந்த வெற்றி இன்னொரு முக்கியமான உண்மையையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக சமூக ஆர்வலர்கள், சமூகப் போராளிகள், சமூக இயக்கங்கள், மக்களுக்காக போராடுவதாக சொல்லிக்கொள்ளும் பலரும் ஆஃப்லைன் மோடில் ஆப்சென்ட் ஆகிப் போயிருந்தனர்.

உண்மை என்னவென்றால், யாரும் இவர்களின் குரல்வளையை நெரிக்கவில்லை. இவர்களாகவே போராட வராமல் ஒதுங்கிக்கொண்டனர். ‘நாம் போராடினால் ஆளுங்கட்சியினர் ஏதாவது நினைத்துக்கொள்வார்களோ’ என்கிற பயமும், ‘யாரையும் எதுவும் சொல்லக் கூடாது, நமக்கு ஆனது ஆகட்டும்’ என்கிற போக்கும்தான் இவர்களின் குறிக்கோளாக மாறிப்போனது. மக்கள் பிரச்சனைக்காக வீதியில் இறங்கி போராட வேண்டிய இவர்களின் போராட்ட குணம் மழுங்கடிக்கப்பட்டதற்கு இந்த மனநிலையும் காரணம். விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் இந்த வெற்றி, அந்தத் தயக்கத்தில் இருந்து ஒரு விடுதலையை கொடுத்திருக்கிறது. இனி மக்களுக்காக பேசவும், போராடவும் வீறு கொண்டு வீதியில் இறங்கி போராடுவார்கள் பாருங்கள்.

இதே காலகட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவின் செயல்பாடும் கேள்விக்குறியாகவே இருந்தது. கடந்த திமுக ஆட்சியில், அதிமுக மாவட்ட, நகர அளவிலான உள்ளூர் பிரச்சனைகளை கையில் எடுத்து போராடியது என்பது அரிதாகவே இருந்தது. மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை மட்டும் மேலோட்டமாக பேசுவது, அறிக்கை விடுவது, பெயரளவுக்கு ஒரு சில போராட்டங்களை நடத்துவது என்கிற அளவில்தான் அதன் எதிர்க்கட்சி அரசியல் இருந்தது. மக்களின் அன்றாடப் பிரச்சனைகளான குடிநீர், சாலை, மின்சாரம், உள்ளூர் ஊழல் என எதையும் தீவிரமாக களத்தில் நின்று கேள்வி கேட்கவில்லை. ஒரு உண்மையான எதிர்க்கட்சியாக அது செயல்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. அந்த வெற்றிடத்தைத்தான் இன்று தவெக நிரப்பியிருக்கிறது.

அதே நேரத்தில், ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் இங்கே பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த வெற்றி விஜய்க்கு மிக எளிமையாக கிடைத்துவிட்டது என்பதுதான் உண்மை. மக்களின் பெரும் எதிர்பார்ப்பும், மாற்றத்துக்கான வேட்கையும், திராவிடக் கட்சிகள் மீதான கடும் அதிருப்தியும் சேர்ந்து இந்த வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறது. ஆனால், கிடைத்த இந்த வெற்றியைத் தக்க வைத்துக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அது மிகவும் கடினமானது.

அதற்கு சரியான திட்டமிடல் அவசியம். ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பணியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள், மகளிர், விவசாயிகள் என ஒவ்வொரு தரப்பின் நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தவெகவுக்கு இருக்கிறது. அப்படி செய்தால் மட்டுமே, மக்கள் உங்கள் மேல் வைத்த நம்பிக்கைக்கு அர்த்தம் இருக்கும். இல்லையென்றால், மக்கள் மாற்றத்தைத் தேடும் பயணத்தில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடுவார்கள் என்பதை தமிழக வெற்றி கழகம் உணர வேண்டும்.

ஆட்சியைப் பிடிப்பதை விட, ஆட்சியைத் தக்க வைப்பதும், மக்கள் நம்பிக்கையைக் காப்பதும்தான் உண்மையான சவால். இன்று கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை வரலாறு திரும்பக் கொடுக்காது.

இத்தனை ஆண்டுகால அரசியல் காரணிகளையும், பழைய பாடங்களையும் உடைத்தெறிந்து, ஒரு புதிய அரசியல் பாதையை தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உட்பட வெற்றி பெற்ற அனைவரையும் , மாநாடு செய்தி குழுமம் மக்களின் சார்பாக மனமாரப் பாராட்டுகிறது. உங்களின் மக்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம். இந்த வெற்றி தமிழ்நாட்டு அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். அந்த அத்தியாயம் மக்களுக்கானதாக, மக்களின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை இந்தத் தேர்தல் மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தியிருக்கிறது.

91140cookie-checkபழைய கணக்கை கிழித்த தவெக

Leave a Reply

error: Content is protected !!