Spread the love

மாநாடு 28 May 2026

தஞ்சாவூரில் கடந்த 10.04.2026 அன்று நடந்த தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “திராவிட மாடல் ஆட்சியில் 2021 முதல் காவிரி டெல்டா பகுதிகளில் கடைமடை வரைக்கும் நீர் சென்று சேர்வதற்கு தூர்வாரும் பணிகளுக்காக 459 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது” என்று பெருமையாக குறிப்பிட்டார்.

2022ஆம் ஆண்டு 65 கோடியே 11 லட்சம், 2023ஆம் ஆண்டு 80 கோடி, 2024-2025ஆம் ஆண்டில் 110 கோடி என ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாகவே நிதி ஒதுக்கி, போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் களத்தில் நிலைமை என்ன? 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது காவிரி டெல்டா பகுதிகளில் ஆறுகளும் வாய்க்கால்களும் எப்படி தூர்ந்து, புதர் மண்டி, மணல் திட்டுகளாக கிடந்ததோ, அதே நிலைதான் 2026இல் இன்று வரை பல இடங்களில் நீடிக்கிறது.

இதற்கு நமது ‘அரசியல் மாநாடு’ இதழ் 2023 ஜூலை மாதம் வெளியிட்ட கள ஆய்வே சாட்சி. அப்போது வெண்ணாறு, வெட்டாறு ஆகிய ஆறுகளில் நாம் நேரடியாக எடுத்த புகைப்படங்களில், ஆறுகள் தூர்வாரப்படாமல் அப்படியே கிடந்தது பதிவு செய்யப்பட்டது.

இந்த இரண்டு ஆறுகள் மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களில் உள்ள பல ஆறுகளும், வடிகால் வாய்க்கால்களும் இப்படித்தான் இன்றும் இருப்பதாக அந்த பகுதி விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். 2021 மே மாதம் முதல்வராக பொறுப்பேற்ற உடனே, ஜூன் 11ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் நேரடியாக கள ஆய்வு செய்தார்.

அப்போதே 62 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கி, தஞ்சைக்கு 20 கோடி, திருச்சிக்கு 6 கோடி என பிரித்து கொடுத்து, விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நீர்வழிப் பாதைகளை தூர் எடுக்க உத்தரவிட்டார். அந்த முதல் ஆண்டு நேரடி கண்காணிப்பு இருந்ததால் ஓரளவு பணிகள் நடந்தன. ஆனால் அதற்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. 

அதிகாரிகள் தரப்பில் இருந்து “தூர்வாரப்பட்டது” என்று குறிப்பிட்டு காட்டப்படும் இடங்களை மட்டும் பார்வையிட்டு திரும்பும் நிலை உருவானது. தூர்வாரப்படாத ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் வாய்க்கால்கள் கண்டுகொள்ளப்படவில்லை.

காகிதத்தில் 90 விழுக்காடு பணிகள் முடிந்ததாக கணக்கு காட்டப்பட்டது. ஆனால் கடைமடை விவசாயிக்கு தண்ணீர் போய்ச் சேரவில்லை. இதைத்தான் 2023இல் நமது இதழில் “அதிகாரிகள் சொல்வதை அப்படியே முதல்வரும் சொல்லுகிறார். இந்த நிலை நீடித்தால் கட்சிக்கு நல்லதல்ல” என எச்சரித்திருந்தோம். 

நம்மைப் போன்ற சில ஊடகங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், பெரும்பாலான நேரங்களில் அதற்கு செவி சாய்க்கப்படவில்லை. ஒரு தலைவர் வயதை பொருட்படுத்தாமல், நேரம் காலம் பார்க்காமல் ஓடோடி உழைத்தாலும், அவரை சுற்றியிருப்பவர்கள் கள நிலவரத்தை முழுமையாக, உண்மையாக எடுத்துச் சொல்லவில்லை என்றால், “நெல்லுக்கு இறைக்க வேண்டிய நீரை புல்லுக்கு இறைத்தது” போல ஆகிவிடும். 

இது தூர்வாரும் பணியில் மட்டும் நடக்கவில்லை. பல துறைகளிலும், பல திட்டங்களிலும் அதிகாரிகள் தரும் அறிக்கையை மட்டுமே நம்பி முடிவெடுக்கும் போக்கு இருந்ததாகவும், அதனால் அரசின் நல்ல திட்டங்கள் கூட மக்களை முழுமையாக சென்றடையவில்லை என்றும் கட்சிக்குள்ளேயே பேச்சு இருந்தது.

மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவுத் திட்டம், இலவச பேருந்து திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் பாராட்டை பெற்றாலும், அடிமட்ட நிர்வாகத்தில் இருந்த சுணக்கம் 2026 தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. கொளத்தூர் தொகுதியிலேயே மு.க.ஸ்டாலின், முதல்வராக இருந்தபோதே தற்போது தோல்வி அடைந்துள்ளார்.

இதற்கு சில அதிகாரிகளின் தவறான வழிகாட்டலும், அந்த அமைச்சரின் செயல்பாடும் ஒரு காரணம் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. 459 கோடி என்பது சாதாரண தொகை அல்ல. அது டெல்டா விவசாயியின் ஒரு போக வாழ்க்கை. ஒதுக்கப்பட்ட நிதி ஒவ்வொரு பைசாவும் கடைமடை விவசாயிக்கு தண்ணீராக போய் சேர்ந்து இருக்க வேண்டும் .

ஒரு அரசின் வெற்றி என்பது எவ்வளவு நிதி ஒதுக்கினோம் என்பதில் இல்லை. ஒதுக்கிய நிதி கடைக்கோடி மக்களுக்கு போய் சேர்ந்ததா என்பதை உறுதி செய்வதில் தான் இருக்கிறது.

“கட்சிக்காரர்களின் பேச்சை கேட்டு கள நிலவரத்தை சரி செய்வாரா முதல்வர்? பதில் காலத்தின் கையில்” என 2023இல் நாம் கேட்ட கேள்விக்கு, காலம் இன்று பதில் சொல்லிவிட்டது.

தவறான தகவல் கொடுத்து திசை திருப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, களத்துக்கு போய் உண்மையை பார்த்து, தொண்டர்கள் சொல்வதையும் மாநாடு போன்ற ஊடகங்கள் சுட்டிக்காட்டுவதையும் கேட்டிருந்தால், இன்று கதை வேறு மாதிரி இருந்திருக்கும். இது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டை ஆளும் எந்த தலைவருக்கும் பாடம்.

91290cookie-checkநெல்லுக்கு இறைக்காத 459 கோடி புல்லுக்கு போனது யாரால்?

Leave a Reply

error: Content is protected !!