மாநாடு June 2026
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த விதம் குறித்து டிடிவி தினகரன் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் “குதிரை பேரம்” என்று தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஆனால் இந்த விமர்சனங்களுக்கு இடையே, கடந்த காலங்களில் தமிழக தேர்தல் களத்தில் அரங்கேறிய ‘ஆட்டுக்குட்டி பேரம்’, டோக்கன் கலாச்சாரம், பட்டி அடைப்பு போன்ற நிகழ்வுகள் குறித்த விவாதமும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் என்றாலே, “அன்றைக்கு சந்தையில ஆட்டுக்குட்டி என்ன விலையோ, அதே விலை தான் ஒரு ஓட்டுக்கும்” என்ற பேச்சு கிராமங்கள் தோறும் உண்டு. 90-களில் ரூ.200 ஆக இருந்த ஆட்டுக்குட்டி விலை, இன்று ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை சென்றுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது என்பது சட்டம். ஆனால் இந்த விதி எந்த அளவுக்கு கடைபிடிக்கப்பட்டது என்பது ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் நாம் அனைவருமே பார்த்திருப்போம். ஓட்டுக்கு பணம் கொடுத்து பிடிபட்டாலும், கொடுத்தவர்களோ அல்லது கொடுக்கச் சொன்னவர்களோ தண்டிக்கப்பட்டதாகவோ, அந்தக் கட்சிக்கும் அந்த நபருக்கும் ஏதாவது பெரிய அளவில் தண்டனை கிடைத்த வரலாறு உண்டா.
திருமங்கலம் இடைத்தேர்தல் ‘ஃபார்முலா’ என்ற பெயரில் பரவலாக என்னென்னமோ எவ்வளவோ பேசப்பட்டது. வாக்காளர்களை குறிவைத்து முறைகேடான வழிமுறைகள் கையாளப்பட்டதாக அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதன்பின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ‘20 ரூபாய் டோக்கன்’ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தேர்தலில் கூட வேட்பாளராக போட்டியிட்டு எதிர்த்து நின்ற அனைவரையும் தோற்கடித்து வெற்றி பெற்றவர் டிடிவி தினகரன். அப்போது அவருடன் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் தற்போது திமுகவில் இருக்கிறார். வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டதாகவும், அதை வைத்து பின்னர் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் அப்போது பரவலாக பேசப்பட்டதே..
அதேபோல, சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களை பட்டியில் ஆடுகளை அடைப்பது போல திருமண மண்டபங்களிலும், தங்கும் விடுதிகளிலும் பல இடங்களிலும் அடைத்து வைத்ததாக எத்தனையோ செய்திகள் அப்போதே வந்தது . மேலும் வாக்காளர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பரிசுப் பொருட்கள், உணவு ஆகியவற்றை வழங்கி ஒரே இடத்தில் தங்க வைத்ததாகவும், “வெளியாட்கள் யாரும் ஊருக்குள்ளே வந்தால் ஊரில் வாக்காளர்கள் பெரும்பாலும் இல்லை என்று அப்போது பரவலாக பல தரப்பினராலும் சொல்லிய வரலாறும் இங்கு உண்டு தானே.
இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் பல ‘சித்து வேலைகள்’ நடந்ததாக குற்றச்சாட்டுகள் உண்டு. திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை மாறி மாறி ஆட்சியில் இருந்த காலங்களில் இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்ததாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த பின்னணியில், தற்போது “குதிரை பேரம்” என்ற விமர்சனம் மட்டும் முன்வைக்கப்படுவது குறித்து விவாதம் எழுந்துள்ளது. குதிரை பேரம் என்பது 234 எம்எல்ஏக்கள் சம்பந்தப்பட்டது. ஆனால் ‘ஆட்டுக்குட்டி பேரம்’ என்பது 6 கோடி வாக்காளர்கள் சம்பந்தப்பட்டது. எம்எல்ஏக்களுக்கு ஆசை காட்டுவது தவறு என்றால், ஒட்டுமொத்த வாக்காளர்களுக்கும் ஆசை காட்டி டோக்கன் கொடுப்பதும் விமர்சனத்துக்குரியதே. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த விதம் குறித்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் தான் ஆராய வேண்டும். ஆனால் “பூத் கமிட்டி அமைத்து, ஓட்டுக்கு விலை பேசி, வீடு வீடாக பட்டுவாடா செய்த கலாச்சாரத்தை தொடங்கியது யார்?” என்ற கேள்வியை யாரெல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதையும் சேர்த்து சொல்ல வேண்டும் அதுதான் நேர்மையாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் பலருக்கும் பதவி வழங்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. அப்பா அர்ச்சகராகவும், அம்மா சமையல் வேலை செய்பவராகவும் இருக்கும் குடும்பத்தில் இருந்து வந்த ஒருவருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி கிடைத்திருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளிலும் சாதாரண பின்னணி கொண்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த கட்சியிலும் சீட்டு கிடைத்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பில்லாத பலரை தேர்ந்தெடுத்து வெற்றி பெற வைத்து, அமைச்சர்களாகவும் ஆக்கியிருப்பது சமூக நீதி என்று அக்கட்சியினர் கூறுகின்றனர். தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பம் மட்டும் ஆட்சியையும் கட்சியையும் வைத்திருந்த கலாச்சாரத்திற்கு மாற்றாக இது அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை பலரும் பாராட்டி வருகின்றனர்.
“குதிரை பேரம்” என்று குற்றம் சாட்டும் முன், “ஆட்டுக்குட்டி பேரம், டோக்கன் கலாச்சாரம், திருமங்கலம் ஃபார்முலா, ஈரோடு பட்டி அடைப்பு” போன்ற வரலாற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் வலுப்பெற்றுள்ளது. இல்லையெனில், ஒருதலைப்பட்சமான விமர்சனமாக மட்டுமே அது பார்க்கப்படும் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
