Spread the love

மாநாடு June 2026

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய பிரியங்கா பங்கஜம், தனது பணியிட மாறுதல் உத்தரவு வந்த பின், விடைபெறும் தருணத்தை மக்கள் சேவைக்காக அர்ப்பணித்த சம்பவம் மாவட்டம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரையில் அரசு புறம்போக்கு இடத்தில் சுகாதாரமற்ற சூழலில் வசித்து வந்த 36 நரிக்குறவ குடும்பங்களுக்கு நிரந்தர வீடு வேண்டும் என்ற கோரிக்கை ஆட்சியரிடம் வைக்கப்பட்டது. அந்த மக்கள் வசித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட ஆட்சியர், சில மாதங்களுக்கு முன்பு கொள்ளுக்காடு பகுதியில் அரசு நிலத்தில் 36 குடும்பங்களுக்கும் மனைப்பட்டா வழங்கினார். அதன்பின் அந்த இடத்தில் அனைவருக்கும் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டன.

 

இதற்கிடையில், பிரியங்கா பங்கஜம் பேரூராட்சிகளின் இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். விடைபெறும் தருணத்தில், கட்டி முடிக்கப்பட்ட 36 வீடுகளையும் நரிக்குறவ குடும்பங்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்தார். விழாவில் 36 பேருக்கான வீட்டுச் சாவிகளையும் தானே வழங்கிய ஆட்சியர், குத்து விளக்கேற்றி, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை வைத்தே புதிய குடியிருப்பின் திறப்பு விழாவை நடத்தினார். தங்கள் வாழ்வில் ஒளியேற்றிய ஆட்சியருக்கு நரிக்குறவர் மக்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து, நினைவுப் பரிசு வழங்கி பிரியாவிடை அளித்தனர். புதிதாக உருவான அந்தக் குடியிருப்புக்கு ‘வள்ளலார்புரம் நகர்’ எனப் பெயரிடப்பட்டிருந்தாலும், ‘கலெக்டர் பிரியங்கா நகர்’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என அம்மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்வில் பட்டுக்கோட்டை தாசில்தார் யுவராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலங்கால் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண் ஆட்சியர் என்ற பெருமைக்குரியவர். அதனாலேயே விவசாயிகளும், பொதுமக்களும் இவரை ‘டெல்டாவின் மகள்’ என அன்போடு அழைத்தனர். பதவியேற்ற முதல் நாளே, “விவசாயத்துக்கும், கிராமப்புற மக்கள் முன்னேற்றத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன். அனைத்து அதிகாரிகளும் சிரித்த முகத்துடன் பணி செய்ய வேண்டும். ஒவ்வொருவர் கொடுக்கும் மனுவுக்குப் பின்னால் ஆயிரம் கண்ணீர், கஷ்டங்கள் இருக்கும்” என அவர் கூறிய வார்த்தைகள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்தன.

 

ஆட்சியரின் நிர்வாகத்தில் கல்விக்கு எப்போதும் முதலிடம் இருந்தது. தேர்தல் பணிகளில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி, வாக்காளர் பங்களிப்பை அதிகரித்ததற்காக ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களிடம் இருந்து தேசிய விருது பெற்றார். “நகையை அடமானம் வைத்து எனது அம்மா என்னை படிக்க வைத்தார். ஐஏஎஸ் ஆன பிறகு பிரியங்கா பங்கஜம் ஐஏஎஸ் என்று போட்டுக்கொள்வதே அவருக்கு நான் செலுத்தும் நன்றிக்கடன்” என அவர் அடிக்கடி குறிப்பிடுவார். ஒருமுறை, பள்ளி சீருடையில் மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்ததைப் பார்த்த ஆட்சியர், அவர்களை அழைத்து வந்த கவுன்சிலரை அழைத்துக் கண்டித்தார். “அடுத்த முறை மாணவர்கள் படிப்பைக் கெடுத்து அழைத்து வந்தால் எப்ஃஐஆர் போட்டுவிடுவேன்” என எச்சரித்தார். படிப்பு எக்காரணம் கொண்டும் நிற்கக் கூடாது என்பதற்காக தாய், தந்தையை இழந்த குழந்தைகளின் கல்விக்காகச் சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டார். பத்து, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை நேரில் அழைத்துப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தினார். அரசு தொழில் பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு விடுத்து, இளைஞர்கள் தொழிற்கல்வி பெற ஊக்கப்படுத்தினார்.

 

மக்கள் பணியிலும் அவர் தனி முத்திரை பதித்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 6,063 பேர் வாக்களிக்க ஏதுவாக, “இல்லம் தேடிச் சென்று தபால் வாக்கு சேகரிக்கும்” திட்டத்தை 100 சிறப்புக் குழுக்கள் மூலம் செயல்படுத்தினார். 

 

மயிலாடுதுறை சார் ஆட்சியர், திருப்பத்தூர் சார் ஆட்சியர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் எனப் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றிய அனுபவத்துடன் தஞ்சைக்கு வந்த பிரியங்கா பங்கஜம், “தஞ்சை மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்ற அயராது உழைப்பேன். அரசின் நலத் திட்டங்கள் விவசாயப் பெருமக்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் சென்று சேர்வதை உறுதி செய்வேன்” என்ற வாக்குறுதியைக் காப்பாற்றினார். தன் பணிக்காலத்தின் கடைசி நிமிடம் வரை மக்களுக்காக உழைத்த அவரது செயல், அரசு நிர்வாகத்தில் மனிதநேயத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

92110cookie-check36 குடும்பங்களுக்கு விடியல் தந்த கலெக்டர் June 2026

Leave a Reply

error: Content is protected !!