Spread the love

மாநாடு 30 October 2026

ரூ.5,000 கோடி அளவுக்கு நிதி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.பிரேம்குமாரை கேரள போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.

அதிக வருமானம் தருவதாக ஆசை காட்டி முதலீட்டாளர்களிடம் பணம் வசூலித்ததாக இந்த கூட்டுறவு சங்கத்தின் மீது புகார்கள் எழுந்தன. முதலீட்டு காலம் முடிந்த பிறகும் பலருக்கு பணம் திரும்ப கிடைக்காமல் அவர்கள் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பணம், தனிப்பட்ட வங்கிக் கணக்குகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வேறு தொழில் நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அந்த பணத்தை வைத்து ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள் போன்ற சொத்துகள் வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புகார்கள் தொடர்பாக அமலாக்கத் துறையும் பண மோசடி மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோடு குற்றப்பிரிவின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சென்னை விருகம்பாக்கத்தில் வைத்து பிரேம்குமாரை நேற்று கைது செய்தனர். ரூ.5,000 கோடி வரையிலான நிதி மோசடி குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டபோது பிரேம்குமார் திடீரென 2 முறை மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை சீராக உள்ளதை உறுதி செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனுமதி பெற்ற பிறகு, போலீசார் அவரை கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த பிரேம்குமார், சென்னையில் வளர்ந்தவர். அவரது தந்தை சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் பணியாற்றியுள்ளார். கூட்டுறவு வங்கியில் கடன் பெறுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, சாதாரண மக்களுக்கு நிதியுதவி வழங்கும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், நண்பர்களின் ஆதரவுடன் 2006-ம் ஆண்டு பிஎல்எம் அமைப்பை அவர் தொடங்கியுள்ளார். பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் கீழ் சென்னையில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, வீட்டு வசதி மற்றும் நில மேம்பாட்டை தாண்டி பல்வேறு தொழில்களில் விரிவடைந்தது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் இது செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்து, சிமெண்டு உற்பத்தி, நகை விற்பனை, ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், உயிரிவாயு உற்பத்தி மற்றும் கல்வி, மருத்துவத் துறைகளிலும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரேம்குமார் கைது செய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு, திருவனந்தபுரத்தில் விசாரணை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து விசாரணையை தடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கண்காணித்த அதிகாரிகள் சென்னை வந்து கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சமரசம் செய்யக் கூடாது என்பதில் கேரள முதல்வர் வி.டி.சதீசன் உறுதியாக இருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

95320cookie-checkசென்னையில் ரூ.5,000 கோடி நிதி மோசடி – கூட்டுறவு சங்க தலைவர் அதிரடி கைது

Leave a Reply

error: Content is protected !!