மாநாடு 05 November 2026
திருவாரூரில் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அரசு நில ஆவணங்களை திருத்தி, கோயில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான நிலங்களை அபகரிக்க முயன்ற வழக்கில், முக்கிய குற்றவாளியை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் எண் 1 இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை சசிகுமார் என்பவர், அங்கு பணியாற்றும் ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேறு சில நபர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு அழித்து, அதில் திருத்தங்கள் செய்து முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி திருவாரூர் சி.பி.சி.ஐ.டி பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. விருத்தாசலம் குமாரதேவர் மடம், திருவாரூர் தெட்சிணாமூர்த்தி மடம், சில கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் அடியக்கமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் நிலங்களின் சர்வே எண்களை, அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளான புத்தகம் 1 மற்றும் புத்தகம் 3-ல் திருத்தம் செய்து, அந்த சொத்துக்களை தனதாக்கி விற்க முயன்றது தெரியவந்துள்ளது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட உண்மையான விவரங்களை அழித்துவிட்டு, போலி விவரங்களை புகுத்தி, குறிப்பிட்ட சர்வே எண்களுக்கு சட்டவிரோதமாக பட்டா வாங்கி, அந்த நிலங்களை விற்பனையும் செய்துள்ளனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த சசிகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், கடந்த 3-ம் தேதி அவரை கைது செய்தனர். திருவாரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்ய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தகவலை தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
