Spread the love

மாநாடு July 2026 News

“குறைந்த முதலீடு, ஒரே மாதத்தில் இரட்டிப்பு லாபம்” என்ற ஆசை வார்த்தையை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சேமிப்பை இழந்து நிற்கும் அவலம் தமிழ்நாட்டில் மீண்டும் அரங்கேறியுள்ளது. 17.06.2026 அன்று அமலாக்கத்துறை ED, சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 8 இடங்களில் சோதனை நடத்தி Unique Exports நிறுவனம் நடத்திய ரூ.400 கோடி பொன்சி மோசடியை அம்பலப்படுத்தியது. இதன் மூளையாக S நவீன் குமாரும், ஜீவலதா, K பிரபு, K மதன் குமார், முத்துச்செல்வம், J பிராங்க்ளின் ஆகியோரும் செயல்பட்டுள்ளனர். வெங்காயம், உருளைக்கிழங்கு ஏற்றுமதி என்று கூறி 200% க்கும் மேல் லாபம் தருவதாகவும், ஆள் சேர்த்தால் கமிஷன் என்றும் சொல்லி சங்கிலி தொடர் போல ஆட்களை சேர்த்துள்ளனர்.

புதியவர்களின் பணத்தை பழையவர்களுக்கு ‘லாபம்’ என கொடுத்து நம்ப வைப்பதே பொன்சி திட்டம். ஆட்கள் சேர்வது நின்றதும் 90% மக்களின் பணம் காணாமல் போனது. வசூலித்த ரூ.400 கோடியை மறைக்க East Valley Agro Farms, Indo Russian Rare Earth Metals, Sara Exports உட்பட 7 போலி நிறுவனங்களை உருவாக்கி, அசையா சொத்து, வங்கி FD, வெளிநாட்டு பரிவர்த்தனை என மாற்றியுள்ளனர். இது பண மோசடி தடுப்பு சட்டம் 2002 படி 3 முதல் 7 ஆண்டுகள் சிறை, முழு சொத்தும் பறிமுதல் செய்யப்படும் கடும் குற்றம். ED சோதனையில் லேப்டாப், பென் டிரைவ், மொபைல்கள், ஆவணங்கள், 2 சொகுசு கார்கள் சிக்கின.

தமிழ்நாடு, கர்நாடகா காவல்துறை FIR அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோல ஏமாறாமல் இருக்க: மாதம் 10%க்கு மேல் உத்தரவாத லாபம் என்றால் அது பகல் கொள்ளை. ‘ஆள் சேர்த்தால் கமிஷன்’ என்றால் அது பொன்சி, உடனே விலகுங்கள். SEBI / RBI அங்கீகாரம், பதிவு எண், தணிக்கை அறிக்கை இல்லை என்றால் 100% மோசடி. ‘இன்று மட்டும் சலுகை’ என அவசரப்படுத்துவது மோசடி உத்தி. ரசீது, ஒப்பந்தம் இல்லாமல் ஒரு ரூபாய் கூட முதலீடு செய்யாதீர்கள். முதலீடு செய்யும் முன் குடும்பத்தினர், வங்கி அதிகாரி, CAவிடம் ஆலோசியுங்கள். சிக்கி விட்டால் உடனே பொருளாதார குற்றப்பிரிவை அணுகுங்கள். மத்திய உதவி எண் 1930 அழைக்கலாம். www.cybercrime.gov.in தளத்தில் புகார் தரலாம். IPC 420, IT சட்டம், PMLA சட்டம் மோசடி பேர்வழிகளுக்கு காத்திருக்கிறது. உழைத்த பணம் உங்கள் வியர்வை. ஆசை வார்த்தைக்கு மயங்கி இழக்காதீர்கள். உங்கள் ஒரு விழிப்புணர்வு ஒரு பெரிய மோசடியை தடுக்கும். நம் பணத்தை நாமே காப்போம், குடும்ப நிம்மதி காப்போம்.

93250cookie-check200% லாப ஆசை காட்டி 400 கோடி சுருட்டல் – உஷார் மக்களே!

Leave a Reply

error: Content is protected !!