Spread the love

மாநாடு July 2026 News

கோயம்புத்தூரைப் பூர்வீகமாகக் கொண்ட மூத்த வழக்கறிஞர் வி.மோகனா, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு 2026 ஜூன் 1-ம் தேதி வெளியிட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படும் முதல் பெண் நீதிபதி என்ற வரலாற்றுச் சிறப்பை வி.மோகனா பெற்றுள்ளார். வழக்கறிஞர் பணியிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் இந்தியாவின் இரண்டாவது பெண்ணும் இவரே ஆவார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் கடந்த மே 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கொலிஜியம் கூட்டத்தில், ஐந்து புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது. வி.மோகனாவுடன், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பாலி ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ஐவரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக உயர் நீதிமன்ற நீதிபதிகளே உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்படுவார்கள். ஆனால் வழக்கறிஞர்களாக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவது மிகவும் அரிது. இந்திய வரலாற்றில் நீதிபதி எஸ்.எம்.சிக்ரி, நீதிபதி யு.யு.லலித், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி கே.வி.விஸ்வநாதன் உள்ளிட்ட 10 பேர் மட்டுமே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெண்களில் நீதிபதி இந்து மல்ஹோத்ராவிற்குப் பிறகு வி.மோகனா இரண்டாவது நபராவார். முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதியான நீதிபதி பாத்திமா பீவி 1989-ல் நியமிக்கப்பட்டார். அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட முதல் பெண் நீதிபதி வி.மோகனா ஆவார். தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதனுடன் ஒரே சட்டக் கல்லூரியில் வி.மோகனா பயின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோவையில் எளிய குடும்பத்தில் பிறந்த வி.மோகனா, 1983-ல் அறிமுகமான ஐந்தாண்டு சட்டப்படிப்பின் முதல் பேட்ச் மாணவி ஆவார்.

கோவை சட்டக் கல்லூரியில் 1988-ல் பட்டம் பெற்று அதே ஆண்டு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். பெண்கள் நீதிமன்றத்திற்கு வருவதே அரிதாக இருந்த காலத்தில், முதல் தலைமுறை வழக்கறிஞராக பல சமூக, தொழில் தடைகளைக் கடந்து முன்னேறினார். 1992-ல் டெல்லிக்கு இடம்பெயர்ந்து, பின்னாளில் உச்ச நீதிமன்ற நீதிபதியான இந்து மல்ஹோத்ராவிடம் பயிற்சி பெற்றார்.

வி.மோகனாவின் 30 ஆண்டு கால வழக்கறிஞர் பணியில் மிக முக்கியமானது இந்திய ராணுவ பெண் அதிகாரிகளுக்கான வழக்கு. ஆண் அதிகாரிகளுக்கு மட்டுமே நிரந்தர பணி வழங்கப்பட்டு வந்த நிலையில், பெண் அதிகாரிகளுக்கு 10 அல்லது 14 ஆண்டுகள் மட்டுமே பணி நியமனம் இருந்தது. இதை எதிர்த்து வி.மோகனா வாதாடியதில், 2020-ல் உச்ச நீதிமன்றம் பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர பணி வழங்க வேண்டும் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இது ராணுவத்தில் பாலின சமத்துவத்திற்கான மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. அரசியலமைப்பு, குற்றவியல், வணிகம், நிர்வாகம் என பல துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வி.மோகனாவுக்கு, 2015-ல் உச்ச நீதிமன்றம் ‘மூத்த வழக்கறிஞர்’ அந்தஸ்து வழங்கியது.

ஒருமுறை நீதிமன்றத்தில் “பெண்கள் குரலை உயர்த்தக்கூடாது, வீட்டுக்குள் இருக்க வேண்டும்” என மூத்த வழக்கறிஞர் விமர்சித்தபோது, “வழக்கின் சட்ட நுணுக்கங்களைப் பேசுங்கள்” என நிதானமாக பதிலளித்து, வாதத்திறமையால் வழக்கில் வென்றார். “நீங்கள் முழுமையாகத் தயாராக இருந்தால், நீதிமன்றத்தின் மரியாதையைத் தானாகவே பெறலாம்” என்பது இளம் பெண் வழக்கறிஞர்களுக்கு வி.மோகனா தொடர்ந்து கூறும் அறிவுரையாக உள்ளது.

இந்த 5 புதிய நீதிபதிகள் நியமனத்துக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் 32 நீதிபதிகள் மட்டுமே பணியில் இருந்தனர். இப்போது மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு சட்டப்படி அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-ல் இருந்து 38 ஆக உயர்த்தியது. அதன்படி இன்னும் 1 நீதிபதி இடம் காலியாக உள்ளது. பணிச்சுமை அதிகமாக இருக்கும் இந்தச் சூழலில், இந்த நியமனங்கள் நீதித்துறைக்கு கூடுதல் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கறிஞர் தரப்பிலிருந்து நேரடியாக நீதிபதிகள் நியமிக்கப்படும்போது, வழக்காடும் முறை பற்றிய நேரடி அனுபவமும், சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்த ஆழமான புரிதலும் நீதிபீடத்திற்கு கிடைக்கும் என்பது சட்ட வல்லுநர்களின் கருத்தாகும். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் வழக்கறிஞர் இந்த உயரிய பொறுப்புக்கு வந்திருப்பது, மாநிலத்திற்கும், குறிப்பாக சட்டம் பயிலும் மாணவிகளுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள வி.மோகனாவுக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், சட்ட வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

93290cookie-checkதமிழ்நாட்டிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண்

Leave a Reply

error: Content is protected !!