மாநாடு 1 May 2022
நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று பாமகவின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார் அதில் குறிப்பிட்டிருப்பதாவது:
தமிழகத்தில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோடை வெயில் காலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் இயங்குகின்றன; பள்ளி இறுதித் தேர்வுகள் மே 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களைத் தவிர மற்ற வகுப்புகளுக்கு கொளுத்தும் வெயிலில் பள்ளிகளை நடத்துவது மனித உரிமை மீறல். கொரோனா வைரஸால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் இந்த காரணத்துக்காக குழந்தைகளுக்கான வகுப்புகளுக்கும் மே13ஆம் தேதி வரை வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குனரகம் வலியுறுத்துவது எந்த விதத்திலும் நியாயமில்லை. கொரோனா 4வது அலை மற்றும் கொளுத்தும் கோடை வெயிலின் இரட்டை ஆபத்துகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும்.
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மே 2ம் தேதி முதல் கோடை விடுமுறை துவங்க உள்ளது.அதேபோல் மாணவர்களின் நலன் கருதி 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். அவை அனைத்தும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதேபோல் கல்லூரிகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
