Spread the love

மாநாடு 28 May 2026

 

 

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்.ஆர். நகர் புதுக்கோட்டை சாலையில் ஸ்மார்ட் பஜார் எதிரில், இரண்டு பெரிய மருத்துவமனைகளுக்கு நடுவில் ஒரு மாடு செத்து மூன்று நாட்களாக உடல் வீங்கி, புழு வைத்து கிடந்தது. அழுகின உடலில் இருந்து வெளியேறிய குடலை பிடுங்கும் நாற்றத்தால் நோயாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு ஓடும் அவல நிலை ஏற்பட்டது. தினமும் அந்த விஷக்காற்றை சுவாசித்துக்கொண்டு மக்கள் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த இடம் நீலகிரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியாகும். அங்கே சுகாதாரத்தை பாதுகாக்க மாதம் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஒருவர் இருந்தும், அவர் தனது கடமையை செய்யவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். புகார் அளித்தால் “ஆள் இல்லை, வண்டி இல்லை” என்று காரணம் சொல்வதாகவும், “நாங்க செத்தா கூட நாளைக்கு வாங்க என்பாரு போல” என்றும் பொதுமக்கள் கொதிப்புடன் தெரிவித்தனர்.

இந்த அலட்சியம் குறித்து மாநாடு நியூஸ் மீடியா கடந்த ஏப்ரல் 27-ம் தேதி “அலட்சியம் காட்டும் சார் யார்?” என்று போட்டோவுடன் செய்தி கார்டு வெளியிட்டது. செய்தி வெளியான அடுத்த நான்கு மணி நேரத்தில், மூன்று நாட்களாக அசையாத வண்டியும், அசையாத அதிகாரிகளும் திடீரென ஓடி வந்து அந்த மாட்டை அப்புறப்படுத்தி சென்றனர். பத்திரிகை எழுதினால்தான் அதிகாரிகளின் கண்ணும் மூக்கும் வேலை செய்யுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த சம்பவத்தை சாதாரண அலட்சியம் என்று கடந்து போக முடியாது. தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன் படி இறந்த விலங்கை 24 மணி நேரத்தில் அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் இங்கு 96 மணி நேரம் வரை வைத்திருந்தது சட்டவிரோதம். மேலும், இந்திய தண்டனைச் சட்டம் 269-ன் படி தொற்றுநோய் பரப்பும் செயல் செய்தால் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இரண்டு மருத்துவமனைகளுக்கு நடுவில் செத்த மாட்டை வைத்திருந்தது நோய் பரப்பும் செயலே ஆகும். மக்கள் கட்டும் வரிப்பணத்தில் சம்பளம், வண்டி, பெட்ரோல் என அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொண்டு வேலை செய்யாமல் இருப்பது மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்கு சமம் என சமூக ஆர்வலர்கள் சாடுகின்றனர்.செத்த மாட்டை அப்புறப்படுத்தாதது மட்டுமல்லாமல், நீலகிரி பஞ்சாயத்து பகுதிகளில் குப்பைகளை முறையாக அகற்றாமல் சுகாதாரப் பணியில் இருப்பவர்களே பொது இடங்களில் குப்பைகளை கொளுத்தும் அதிர்ச்சி வீடியோக்களும் வெளியாகியுள்ளன. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி குப்பையை எரிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்ட குற்றமாகும். இது காற்று மாசுபாட்டை ஏற்படுத்தி புற்றுநோய், ஆஸ்துமா போன்ற நோய்களை உருவாக்கும் அபாயம் உள்ளது. சுத்தம் செய்ய வேண்டியவர்களே சுற்றுச்சூழலை நாசம் செய்வது கண்டிக்கத்தக்கது. 

இதனால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நீலகிரி பஞ்சாயத்து ஹெல்த் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து விசாரிக்க வேண்டும் எனவும், அந்த நான்கு நாள் அலட்சியத்திற்கு அவர் சம்பளத்தை பிடித்தம் செய்து அப்பகுதியை சுத்தப்படுத்த செலவிட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் தஞ்சாவூர் முழுக்க இதுபோல எங்கெல்லாம் இறந்த கால்நடைகள் கிடக்கிறதோ, அதை 24 மணி நேரத்தில் அகற்ற “மிஷன் கிளீன்” ஆரம்பிக்க வேண்டும் எனவும், குப்பைகளை எரிக்கும் பணியாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து திடக்கழிவு மேலாண்மை விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்துகின்றனர். 

நாற்றம் அதிகாரிகளின் மூக்குக்கு எட்ட செய்தி போட வேண்டும் என்றால் தினமும் செய்தி வெளியிடுவோம் எனவும், மக்களின் உயிரை விட அதிகாரிகளின் பதவி முக்கியம் இல்லை எனவும் மாநாடு நியூஸ் மீடியா தெரிவித்துள்ளது.உங்கள் பகுதியில் இதுபோன்ற சுகாதார சீர்கேடு, செத்த விலங்குகள், குப்பை தேக்கம், குப்பை எரிப்பு இருந்தால் உடனடியாக புகார் செய்யுங்கள். மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டு அறை எண் 1077, பொது சுகாதாரத்துறை எண் 104, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எண் 1800-425-6750 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாட்டில் எங்கு இது போல இருந்தாலும் போட்டோ, வீடியோ எடுத்து 96297 09999 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பலாம். உங்களுக்காக கேள்வி கேட்க மாநாடு நியூஸ் மீடியா தயாராக உள்ளது.

91340cookie-checkசெத்த மாட்டுக்கு சட்டம் தெரியாது, சம்பளம் வாங்கும் உங்களுக்கு? நீலகிரி பஞ்சாயத்து அலட்சியம்

Leave a Reply

error: Content is protected !!