மாநாடு 20 July 2026
தஞ்சை மாநகரில் கடந்த ஒரு மாதமாக காலமாக ஆவின் பால் கடைகளில் கிடைப்பது அரிதாக உள்ளது இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஆவின் பொது மேலாளரை சந்தித்து மக்கள் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது மனுவில் தெரிவித்துள்ளதாவது,

தாய்ப்பாலுக்கு நிகராக ஆவின் பால் நாடு முழுவதும் பயன்படுத்தப் படுகிறது. தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள், ஆயிரக் கணக்கான மருத்துவமனை நோயாளிகள், மற்றும் அன்றாடம் உழைக்கின்ற ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தின் லட்சக் கணக்கான மக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில், நிறைந்த சத்தில் அன்றாட தேவைகளில் ஒன்றாக பயன்படுத்தப் பட்டு வந்தது. தற்பொழுது தமிழ்நாடு வெற்றி கழக அரசு அமைந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு என்பது செய்தியாக வருகிறது.

தஞ்சை மாநகரத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடைகளில் ஊதா நிற பாக்கெட், கிரீன் கலர் பாக்கெட் ,பிரவுன் கலர் பாக்கெட் ஆகிய மூன்று வகைகளில் விற்கப்பட்டு வந்த ஆவின் பால் என்பது தற்போது கிடைக்க வில்லை. கடைக்காரர் களிடம் கேட்டால் ஆவின் பால் தற்பொழுது சப்ளை செய்வது நிறுத்தப் பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர். சாதாரணமாக கால் லிட்டர் பால் 12 ரூபாய்க்கு வாங்கி குடும்பத்தினர் பயன்படுத்துவது என்பதற்கு பதிலாக அதிக விலை கொடுத்து தனியார் பாலை வாங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு மக்கள் தள்ளப் பட்டுள்ளனர்.

அனைத்து துறைகளிலும் நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு அரசு தற்போது ஆவின் பால் தட்டுப்பாடு காரணமாக தனியார் பால் நிறுவனங்களுக்கு துணை போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே ஆவின் நிர்வாகம் முன்பு போல் தங்கு தடையின்றி அனைத்து வகைகளிலும் கிடைத்த ஆவின் பாலை மறுபடியும் தாராளமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
ஆவின் பால் தட்டுப்பாடு தொடர்ந்தால் மக்களை திரட்டி ஆவின் நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என்று மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மனு அளிக்கும் நிகழ்விற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா தலைமையில் ஒருங்கிணைப் பாளர் துரை. மதிவாணன், விசிக மாவட்ட துணை செயலாளர் க.தமிழ் முதல்வன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் அழகு தியாகராஜன், என் டி எல் எப் மாவட்ட செயலாளர் ஆர்.லட்சுமணன், , மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, தமிழர் தேசிய முன்னணி மாவட்ட நிர்வாகி சதா.முத்துக் கிருஷ்ணன், சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் ஆவின் பொது மேலாளர் சரவணகுமாரை சந்தித்து மனு அளித்து வந்தனர். பொது மேலாளரும் ஜூலை மாதத்திற்குள் ஆவின் பால் தட்டுப்பாடு போக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
