மாநாடு 6 December 2026
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கர்மவீரர் காமராஜரால் மக்கள் பயன்பெற கொண்டுவரப்பட்டு தஞ்சாவூர் சுற்றியுள்ள பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு நோய்வாய்ப்பட்டவர்களை கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்க்கிறார்கள்.

இங்கும் சேவை மனப்பான்மையுள்ள மருத்துவர்களால் அர்ப்பணிப்போடு, அக்கறையோடு கவனிக்கப்பட்டு குணம் பெற்று போகிறார்கள் என்பது எந்த அளவு உண்மையோ அதே சமநிகராக மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு மக்களுக்காக மக்கள் பயன்பெற பல திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கில் நிதிகள் ஒதுக்கப்பட்டு செயல்படுத்தும் திட்டங்களை மக்களுக்கு போய் சேராத விதத்தில் தடுக்கும் சோரம் போன சில ஊழியர்களும் சில மருத்துவர்களும் இருப்பதால் ஏழை மக்கள் பல நேரங்களில் அவதியுறுகிறார்கள் என்பதும் உண்மை.

இதற்கு யார் சான்று என்றால் நானே சான்று நான் சிகிச்சைக்காக போய் சேர்ந்த நேரத்தில் கூட எனது பெட்டில் இரண்டு பேர் படுத்திருந்தார்கள் என்னோடு சேர்த்து மூன்று பேர் என்பது தான் உண்மை.
அதேபோல இன்று ஒரு வீடியோ வெளியாகி உண்மையிலேயே மக்கள் மீது அக்கறையுள்ள என்னைப் போன்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நோயாளிகள் குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்து வைத்துக் கொண்டு நிற்கிறார்கள். மருத்துவமனை ஊழியர் அவர்களிடம் மருத்துவம் பார்க்க முடியாது போங்கள் என்று கடுகடுவென பேசி ஏதோ அடியாளை கூப்பிட போவது போல் பாருங்க சார் இவர் இப்படி பேசுறார் என்று ஒரு அறைக்குள் போகிறார்.
அந்த அறையில் இருந்தது யார் என்பது தெரியவில்லை இருந்தாலும் இவர்கள் எல்லாம் சட்டம் தெரிந்து தான் செய்கிறார்களா? அல்லது இஷ்டத்துக்கு செய்கிறார்களா ? இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது ஒரே ஒரு குடிமகனுக்கு கூட மருத்துவம் மறுக்கப்படக் கூடாது அது மாபெரும் குற்றம் என்கிறது. உண்மை அப்படி இருக்க இவர்கள் கொட்டம் அடித்துக் கொண்டு குற்றம் செய்ய காரணம் என்னவாக இருக்கும் கேட்க வேண்டியவர்கள் சரியாக முறையாக கேட்காததும், பார்க்க வேண்டியவர்கள் பணிகள் எப்படி நடக்கிறது என்பதை பார்க்காமல் அறையிலேயே அமர்ந்து இருப்பதும் தானே… அதிலும் ஒரு படி மேலே சென்று அந்த ஊழியர் சொல்கிறார் உங்களுக்கு மருத்துவம் பார்க்க முடியாது நான் பார்க்க மாட்டேன் போங்கள் என்கிறார் என்றால்

இவர் போன்றோர்களை மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் , கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் ஏழை எளிய மக்கள் நொந்து போகிறார்கள். இப்படியே தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் ஏழைகள் எங்காவது கடன் வாங்கியாவது தனியார் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய அவல நிலை ஏற்படும் தானே .. இதற்கெல்லாம் காரணம் மருத்துவமனை நிர்வாக சீர்கேடு தான் என்பது சமூக ஆர்வலர்களின் கூற்றாக இருக்கிறது. இங்கு நோயாளிகள் ஏதேனும் குறைகளை எடுத்துச் சொன்னால் அவர்கள் நோய் வாய் பட்டவர்கள் என்று கூட பார்க்காமல் நாயை விரட்டுவது போல் விரட்டுவதை நாம் அனைவருமே சிறிது முயற்சி எடுத்தால் அங்கு நின்று பார்த்தால் உணரலாம். பல நேரங்களில் மக்கள் மன்னர்களிடம் யாசகம் பெற வந்தது போல நடத்தும் போக்கும் அதிகமாக இங்கு இருப்பதை உணரலாம். கட்டடங்கள் கட்டிய அளவிற்கு அங்கு போதுமான படுக்கைகள் அதாவது பெட்டுகள் மற்றும் குளுக்கோஸ் ஸ்டாண்டுகள் இல்லை என்று கூறப்படுகிறது. பல வார்டுகளில் அதை நாம் பார்க்க முடிகிறது. தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொறுத்தவரையில் எப்போதுமே கட்டடங்கள் கட்டுவதற்கும், மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கும் முன்னுரிமை கொடுப்பது போல மற்ற தரமான சாலைகள் அமைப்பு, தேவையான மின்விளக்குகள் , தூய்மையான குடிநீர், சுகாதாரமான கழிவறை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்களாம். அதனைத் தெரிந்து கொள்ள பொதுமக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டால் கூட மழுப்பலாக தான் தருவார்களாம்.
கட்டடங்கள் கட்டுவதில் முறைகேடுகளை கண்டுக்காமல் இருந்து கொண்டு பொதுப்பணித்துறையில் ஆதாயம் பலரும் அடைகிறார்களாம். அதேபோல ஒவ்வொன்றிலும் கமிஷன் பெறப்படுவதால் அதை பார்க்கவே நேரம் போதாததால் மக்களுக்காக பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த மருத்துவமனை இன்று பெரிய நிலப்பரப்பு இருந்தும், அரசுகள் பல வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தும், அவலங்கள் மக்களுக்கு தொடர்கதையாகி வருகிறது என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொடர் கரையாகிறது என்பதை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிந்துகொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் பயனுற வேண்டும் என்பதே நோக்கம். மேலும் பல முறைகேடுகளை ஒவ்வொரு முறையும் ஆதாரங்களோடு மாநாடு செய்தி குழுமம் வெளியிட்டு இருக்கிறது அதில் சென்று பார்த்துக் கொள்ளலாம். வாக்கிங் போகும் அமைச்சர் ஜோக்கிங் செய்யும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா? மக்களைக் காப்பாரா?
