மாநாடு 29 May 2026

டெல்டா வறளுது – அதிகாரம் தூங்குதா?
தஞ்சாவூர் மாவட்டம். காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, வெட்டாறு. இந்த ஆறுகளை இன்று யார் நேரில் சென்று பார்த்தாலும் ஒரே காட்சிதான் தெரியும். ஆறு எங்கே இருக்கிறது என்று தேட வேண்டியிருக்கிறது. ஏனென்றால் ஆற்றுப்படுகை முழுக்க 20 அடி, 30 அடி ஆழத்துக்கு பள்ளம் பள்ளமாக தோண்டப்பட்டு கிடக்கிறது. கரைகள் சரிந்து, மரங்கள் சாய்ந்து, ஊரே வெறிச்சோடி கிடக்கிறது. நிலத்தடி நீர் 300 அடிக்கு கீழே போய்விட்டதால் விவசாய கிணறுகள் எல்லாம் வறண்டு, சிமெண்ட் தொட்டிகளாக காட்சி தருகின்றன. இதுதான் இன்றைய தஞ்சை டெல்டாவின் நிஜ நிலைமை.
இதற்கு காரணம் என்ன? இதை தடுக்க வேண்டியவர்கள் யார்? இந்த கேள்விகளுக்கு பதில் தேடினால் சட்டத்தின் பக்கம்தான் போக வேண்டும். சட்டம் என்ன சொல்கிறது? மைன்ஸ் அண்ட் மினரல்ஸ் சட்டம் 1957, பிரிவு 4(1A) தெளிவாக சொல்கிறது. அரசு அனுமதி இல்லாமல் ஒரு பிடி மணல் கூட அள்ளக்கூடாது. மீறினால் 5 ஆண்டு சிறை, 5 லட்சம் அபராதம். தமிழ்நாடு மைனர் மினரல் கன்செஷன் விதிகள் 1959, விதி 36A இன்னும் கடுமையாக சொல்கிறது. ஆறுகளில் 3 மீட்டருக்கு மேல் தோண்டக்கூடாது. இயந்திரம் வைத்து அள்ளக்கூடாது.
இந்த இரண்டு சட்டத்தையும் தாண்டி உச்சநீதிமன்றம் 2012ஆம் ஆண்டு ஒரு வரலாற்று தீர்ப்பை கொடுத்தது. “ஆற்று மணலை இயந்திரம் வைத்து அள்ளுவதற்கு நாடு முழுவதும் தடை” என்று. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் 2022ஆம் ஆண்டு WP எண் 16888 வழக்கில் இன்னொரு உத்தரவு போட்டது. “மணல் ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு வாகனத்திலும் GPS கட்டாயம் பொருத்த வேண்டும். 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்” என்று சட்டம் இவ்வளவு தெளிவாக இருக்கிறது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டு வருடங்கள் ஆகிறது. ஆனால் களத்தில் என்ன நடக்கிறது? ஆறு இருந்த இடத்தில் இன்று பள்ளம் மட்டும்தான் இருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு? பொறுப்பு என்று வரும்போது முதல் கை நீள வேண்டியது காவல்துறைக்கு அல்ல. கனிம வளத்துறைக்கும் வருவாய்த்துறைக்கும்தான். மாவட்ட கனிம வள உதவி இயக்குநர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் இவர்கள் நான்கு பேர்தான் ஒரு மாவட்டத்தின் கனிம வளத்தை காக்க வேண்டியவர்கள். இவர்கள் கையெழுத்து இல்லாமல் ஒரு மணல் குவாரி கூட திறக்க முடியாது. இவர்கள் கண்ணை மூடிக்கொண்டால் ஆறே காணாமல் போய்விடும். இன்று தஞ்சை டெல்டாவில் நடப்பது அதுதான்.
இந்திய அரசியலமைப்பு சட்டம், ஆர்டிகிள் 21 சொல்கிறது. “வாழும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. சுத்தமான குடிநீர், நிலத்தடி நீர் இதில் அடங்கும்” என்று. ஆற்று மணல் அதிகமாக சுரண்டப்பட்டால் நிலத்தடி நீர் போய்விடும் என்பது 5ம் வகுப்பு பாடம். அந்த பாடம் தெரியாத அதிகாரிகளா மாவட்டத்தை ஆள்கிறார்கள்? ஆர்டிகிள் 48A இன்னும் ஒருபடி மேலே போய் சொல்கிறது. “சுற்றுச்சூழலை பாதுகாப்பது அரசின் கடமை” என்று. கடமை தவறினால் என்ன தண்டனை என்று மட்டும் அரசியலமைப்பு சட்டம் சொல்லவில்லை. அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
மக்கள் முடிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்பதற்கு சமீப காலமாக டெல்டா மாவட்டங்களில் நடக்கும் சம்பவங்களே சாட்சி. ஆற்றுப்படுகைகள் பாதிக்கப்படுவதை கண்டு பொறுக்க முடியாமல், பல கிராமங்களில் மக்களே ஒன்று திரண்டு ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வருவதாக கூறப்படும் வாகனங்களை தடுத்து நிறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் வருகின்றன. சட்டம் தன் கடமையை செய்யாதபோது மக்கள் வீதிக்கு வருவார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
மக்கள் ஏன் சட்டத்தை கையில் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்? நிர்வாகம் ஏன் மக்களின் நம்பிக்கையை இழக்கிறது? இந்த கேள்விக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்தான் பதில் சொல்ல வேண்டும். இதற்கு தீர்வு என்ன? மிக எளிது. சட்டத்தை அமல்படுத்தினால் போதும். புதிதாக ஒன்றும் கண்டுபிடிக்க வேண்டாம்.
முதல் வேலையாக மாவட்ட ஆட்சியர் RDO, AD Mines, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவை கொள்ளிடம், வெண்ணாறு, வெட்டாறு பகுதிக்கு அனுப்ப வேண்டும். இரண்டாவது, பாதிக்கப்பட்ட கிராமங்களில் கிராம சபையை கூட்டி மக்களிடம் நேரடியாக கருத்து கேட்க வேண்டும். மூன்றாவது, கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் எத்தனை மணல் குவாரிகளுக்கு முறையாக அனுமதி வழங்கப்பட்டது என்ற வெள்ளை அறிக்கையை மக்கள் முன் வைக்க வேண்டும். நான்காவது, உயர்நீதிமன்றம் சொன்னபடி அனைத்து மணல் வாகனங்களிலும் GPS பொருத்தி கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும். இந்த நான்கையும் செய்தாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.
ஆனால் இதையெல்லாம் செய்யாமல் இதே நிலை நீடித்தால் என்ன ஆகும்? தஞ்சை டெல்டா என்ற நெற்களஞ்சியம் பாலைவனமாக மாறும். இது வெறும் எச்சரிக்கை இல்லை. காவிரி, வெண்ணாறு, வெட்டாறு ஆகிய ஆறுகளை இன்று யார் நேரில் சென்று பார்த்தாலும் கண்ணீர் வரும். ஆறு என்ற அடையாளமே இல்லாமல் பள்ளம் பள்ளமாக கிடக்கிறது.
இந்த பேரழிவை தடுத்து நிறுத்த யாரும் முன்வரவில்லை என்றால், கடைசி ஆயுதமாக நீதிமன்றம்தான் இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்து, தமிழ்நாடு அரசுக்கு கடுமையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்பதே இன்று ஒட்டுமொத்த டெல்டா மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
ஏனென்றால் அரசியலமைப்பு ஆர்டிகிள் 48A படி இயற்கையை காப்பது அரசின் கடமை. ஆர்டிகிள் 51A(g) படி அதை கேள்வி கேட்பது மக்களின் கடமை. நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம். அரசு எப்போது செய்யப்போகிறது?
சட்டம் தூங்காது. ஆனால் சட்டத்தை காக்க வேண்டியவர்கள் தூங்கினால் என்ன செய்வது? இந்த கேள்விக்கு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. காவிரி வறண்டால் தஞ்சை வறளும். தஞ்சை வறண்டால் தமிழ்நாடு பட்டினி கிடக்கும். இது ஒரு மாவட்ட பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பு பிரச்சினை.
