Spread the love

மாநாடு July 2026 News

பல்லாயிரம்பேர் கூடியிருந்த அந்த பிரம்மாண்ட விளையாட்டு அடரங்கத்தில் கரகோசம் விண்ணை பிளந்தது.

ஓடும் தளத்தில் கம்பீரமாக நின்றிருந்தான் அந்த இளைஞன். அவனுடைய புஜங்களும், உருண்டு திரண்டிருந்த தசைகளும் அவன் நன்கு பயிற்சிபெற்ற வீரன் என்பதை உணர்த்திற்று. தன்னுடன் ஓடப்போகும் வீரன் யார் என்று இளைஞன் ஆவலோடு காத்துக்கொண்டிருக்க மத்திய வயதை கடந்த அந்த மனிதர் ஓடும் தளத்தை நெருங்கி வந்தார்.

“இந்த பெரியவருடனா முதல்கட்ட போட்டி ஆச்சரியமாக இருந்தது இளைஞனுக்கு.

நடுவர் விசில் ஊத, ஓட்டப்பந்தயம் துவங்கியது. அதிவேகத்தில் ஓடிய இளைஞனுக்கு அற்புதமாக ஈடுகொடுத்தார் பெரியவர் என்றாலும், வெற்றிக்கோட்டை தாண்டும் நேரம் நொடிப்பொழுதில் மின்னலாய் ஓடிக்கடந்து வெற்றிபெற்றான் இளைஞன். அரங்கமே கைதட்டி ஆராவாரம் செய்தது.

இளைஞனும் மகிழ்ச்சியின் உச்சத்தில் அரங்கத்தை வலம் வந்தான் பெரியவரோ எந்த சலமும் இல்லாமல் அமைதியாக இருந்தார்.

இரண்டாம் கட்ட போட்டிக்கு இரண்டு இளைஞர்கள் தளத்தை நெருங்க நம் இளைஞனும் ஓட்டத்துக்கு தயாரானான். இம்முறையும் போட்டியில் அபாரமாக ஓடி அநாயாசமாக வென்றான் நம் இளைஞன், மீண்டும் கரகோசம், மீண்டும் வெற்றி நடை பெரியவர் இப்போதும் அமைதியாக தின்றிருந்தார்.

மூன்றாம் கட்ட போட்டிக்கு தயாராகையில் பெருமிதத்தோடும் செருக்கோடும் கேட்டான் இளைஞன், “என்னோடு பந்தயத்தில் போட்டியிட யார் இருக்கிறார்…?”

பெரியவர் சொன்னார், நான் இரண்டு போடியாளர்களை அழைத்து வந்திருக்கிறேன், ஓடுகிறாயா..? தான் தோற்றுவிட்ட ஏமாற்றத்தில் தான் பயிற்சியளித்த மாணவர்களை போட்டியிட வைக்கப்போகிறார் என்று நினைத்துக்கொண்ட இளைஞன்,நான் தயார் என்றான்.

கண்பார்வையற்ற ஒரு ஆணையும் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டியையும் ஓடுகளத்திற்கு அழைத்து வந்தார் பெரியவர்.

“இது என்ன கேலிக்கூத்து” என்று சிரித்தான் இளைஞன். “ஓடிப்பார்.” என்றார் பெரியவர் அமைதியாக.

விசில் ஊதப்பட்டது. குருடர் நின்ற இடத்திலேயே திக்கு தெரியாமல் நிற்க, மூதாட்டி தள்ளாடியபடி நடக்க முயல, இளைஞன் சிறுத்தைபோல் ஓடி எல்லைக்கோட்டை கடந்தான்.

அரங்கம் அமைதியாக இருந்தது. கையொலிகள் இல்லை, கரகோசம் இல்லை, மயான அமைதி நிலவியது. இளைஞன் குழம்பிப்போனான். சரி இது ஒத்த திறமையுடைவர்களுக்கு இடையேயான போட்டி இல்லைதான். ஆனால் நான் தேர்ந்தெடுக்கவில்லையே போட்டியாளர்களை பெரியவர்தானே தேர்ந்தெடுத்தார். நான் என்ன செய்யமுடியும். நான் ஓடினேன், நான் வென்றேன். இதில் என் தவறு என்ன இருக்கிறது என்று புரியாமல் தவித்தான். பெரியவரிடம் வந்து காரணம் கேட்டான்.

பெரியவர் சொன்னார், “மீண்டுமொருமுறை இதே இருவருடனும் ஓடு. ஆனால் இம்முறை அவர்கள் இருவரையும் உன் இரு கரங்களால் பற்றியபடி ஓடு.”குழப்பமாக இருந்தாலும் “சரி” என்றான் இளைஞன்.

பார்வையற்றவரையும், மூதாட்டியையும் கரம் பற்றியபடி ஓடவா முடியும்..? மெல்ல நடந்து அவர்களோடு சேர்ந்து எல்லைக்கோட்டை கடந்தான் இளைஞன்.என்ன ஆச்சரியம்..! விண்ணே அதிரும்படி அரங்கம் கரகோசம் எழுப்பியது.

புரியவில்லை இளைஞனுக்கு. “இந்த கைத்தட்டல்களும் வாழ்த்துக்களும் யாருக்கு..? எனக்கா, கண் பார்வையற்றவருக்கா , மூதாட்டிக்கா..? கேட்டான் பெரியவரிடம்.

பெரியவர் சொன்னார், “மகனே… இதுதான் வாழ்க்கையின் தத்துவம், வெற்றி, குறிக்கோள் எல்லாமே” நீ இதுவரை உன் தனிப்பட்ட வெற்றிக்கு வேண்டி மட்டுமே உழைத்தாய், பாடுபட்டாய், போராடினாய், ஒடினாய், வெல்லவும் செய்தாய். பார்வையாளர்களும் அதை ரசித்து உன்னை பாராட்டினர். ஆனால் இந்த சமுதாயம் உன்போன்றவர்களால் மட்டுமே ஆனதல்ல. உன் திறமை, உன் ஆரோக்கியம், உன் கல்வி, உன் செல்வம்.. எதுவுமே உன் ஒருவனின் உழைப்பால் மட்டுமே உருவானதும் அல்ல, உன் ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானதும் அல்ல. நாம் ஒவ்வொருவரும் நம் மனித சமூகத்தின் கூட்டுமுயற்சியின் தயாரிப்புகள்”

“ஒருவருக்கு தகுதியோ, திறமையோ, செல்வமோ, அறிவோ. அதிகாரமோ அதிகமாக அமைந்திருப்பது அதை அவர் மட்டும் அனுபவிக்க அல்ல. அவை குறைவாக இருக்கும் பிறரையும் கைதூக்கி விட, ஆதரிக்க, அரவணைக்க. கடைசி ஓட்டத்தில் நீ அதைத்தான் செய்தாய். அதற்குத்தான் இந்த பலத்த கரகோசம்”

“இந்த போட்டியில் கற்றதை உன் வாழ்வின் எல்லா செயல்பாடுகளிலும் வெளிப்படுத்து, உன்னைக்கண்டு பிறரும் அப்படியே நடக்க முயல்வர். அனைவரையும் உள்ளடக்கிய inclusive growth என்பது அப்போதுதான் சாத்தியமாகும்”

இதைத்தான் வள்ளுவர்…

“தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு” என்கிறார்.

அதாவது.. “முயன்று சம்பாதித்தவை எல்லாம், உழைக்க முடியாமலும் தேவைப்படுவோர்க்கும் உதவுவதற்கே.

வாழ்க்கை என்பது பிறரை வெல்லும் போட்டி என்று நினைத்து வந்த வீரன், வீரம் என்பது பிறரை வீழ்த்துவதில் இல்லை வாழவைப்பதில் என்று உணர்ந்து, கண்கள் தழும்ப இருகரம் கூப்பி பெரியவரை வணங்கியபடி சென்றான்.

– முனைவர் ஃபாசில் ஃப்ரிமேன் அலி

93330cookie-checkபந்தயம்

Leave a Reply

error: Content is protected !!