மாநாடு 14 April 2026
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குத்தகை விவசாயிகள் நிலம் பறிபோகும்
பி ஆர் பாண்டியன் எச்சரிக்கை…
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட ஒன்றிய முன்னணி நிர்வாகிகள் விவசாயிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் சீர்காழியில் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர்
பி ஆர் பாண்டியன் பங்கேற்று விவசாயிகள் கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கான பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்த பின்னர் செய்தியாளர்
களிடம் தெரிவித்ததாவது:
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து நான்காண்டு காலம் இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படவில்லை.காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தரவில்லை. மாறாக போராடுகிற விவசாயிகளை சிறையில் அடைத்து திமுக அரசு கொடுமைப்படுத்துகிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்த கொடுமை நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ்ந்து வருகிறது.
கொள்ளிடம் ஆற்றில் ஆதனூர் தடுப்பணை அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
அதற்காக தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டது.அதற்கான தொகை விடுவிக்கப்பட்டும் இதுவரையிலும் விவசாயிகளுக்கு வழங்கப்படாததால் தெற்கு ராஜன் வாய்க்கால் பாசனம் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது
ஆயிரம் இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று திமுக 2021 தேர்தல் அறிக்கையில் உறுதி கொடுத்தது ஆனால் கொள்ளிடம் ஆற்றில் கடல் முகத்துவாரத்தில் இருந்து ஆதனூர் அனைவரையிலும் கடல் நீர் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் உட்பகுந்து வருவதால் ஒட்டுமொத்தமாக சீர்காழி, கொள்ளிடம் தாலுக்கா பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி உள்ளது. தடுப்பணைகள் கட்ட வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தினாலும் இதுவரையிலும் நிறைவேற்றப்படவில்லை.
விவசாயிகளுக்குஇழப்பீட்டை வழங்கி விட்டு வாய்க்காலில் தடையின்றி பாசனத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வதற்கு ஐந்தாண்டு காலமாக நடவடிக்கை எடுக்காமல் முடக்கி வைத்துள்ளனர். இதனால் சீர்காழி தாலுக்கா பகுதி முற்றிலும் பாசன நீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளது
மயிலாடுதுறை மாவட்டத்தில் 80 சதவீத நிலங்கள் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத கோவில் சாமி கோவில்,சீர்காழி சட்டநாதர் கோவில், தருமபுரம் ஆதீனங்களுக்கு சொந்தமானதாக உள்ளது.
இந்நிலங்களில் சாகுபடி செய்யும் உரிமை அபகரிக்கப்பட்டுள்ளது.குத்தகை உரிமை பறிகொடுத்த விவசாயிகளால் அடையாள அட்டை கூட பெற முடியாத நிலையில் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சி தமிழகத்தில் ஏற்படுமேயானால் ஒட்டுமொத்தமாக குத்தகை விவசாயிகள் நில உரிமை பறிபோகும். நிலங்கள் அபகரித்து கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கும் நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன் என்றார்.
கூட்டத்திற்கு தஞ்சை மண்டல செயலாளர் வேட்டங்குடி சீனிவாசன் தலைமையற்றார்
மதுரை மண்டல தலைவர்
எல். ஆதிமூலம் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் கொள்ளிடம் விஸ்வநாதன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் கொள்ளிடம் பன்னீர்செல்வம் நன்றி கூறினார். மாவட்ட கௌரவத் தலைவர் நடராஜன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விவசாயிகள் பங்கேற்றனர்.
