Spread the love

மாநாடு July 2026

தஞ்சாவூர் மாநகராட்சியில் அலுவல் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்ட வாக்கி டாக்கி கருவிகள் சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு, அடிதட்டு மக்களின் வரிப்பணம் முறைகேடாக கையாடப்பட்டு, முதற்கட்ட பில்கள் அவசரமாக பாஸ் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அடுத்த 100 கருவிகள் வாங்க கோப்பு நகர்ந்தபோது புதிய ஆணையர் அதீத விலை நிர்ணயத்தை கண்டறிந்து “பொது நிதியை வாரி வழங்க முடியாது” என கோப்பை அதிரடியாக நிராகரித்துள்ளார். இப்படி பொதுப் பணத்தை வீணடிப்பது புதிய பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத பெருங்குற்றம்.

அரசு ஊழியர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொதுப் பணத்தை கையாடல் செய்தால் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 13(1)(a), 13(1)(b) படி ‘அதிகாரப்பூர்வ குற்ற நடத்தை’ என 4 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உண்டு. மேலும் கூட்டுச் சதிக்கு BNS பிரிவு 61-ன் படியும், பொதுச் சொத்துக்கு பாதகம் விளைவித்து மக்கள் நம்பிக்கையை துரோகம் செய்ததற்கு BNS பிரிவு 316, 318-ன் கீழும் கடும் நடவடிக்கை பாயும். இந்த வாக்கி டாக்கி முறைகேடு பனிப்பாறையின் நுனி மட்டுமே. ஸ்மார்ட் சிட்டி திட்டம் உட்பட பல கோடி மதிப்பிலான கொள்முதல்களில் நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

எழில் மிகு நகரம் என்ற பெயரில் நிதி திட்டமிடலின்றி வீணடிக்கப்பட்டதற்கு சாட்சியாக அகலமற்ற நெருக்கடி சாலைகள், பழைய பேருந்து நிலையம் சுற்றுப்புறம், நடை மேடையில் கடைகள், சாலையில் ஓடும் சாக்கடை, புதர் மண்டி கிடக்கும் பூங்காக்கள், தரமற்ற கட்டடங்கள், முடங்கிய கழிவுநீர் திட்டங்கள், பயன்படுத்த முடியாத தூய்மைப் பணி வாகனங்கள் என மக்கள் பணம் தண்ணீராக இறைக்கப்பட்டு திட்டங்கள் அரைகுறையாக கிடக்கின்றன. ஏற்கனவே சில முறைகேடுகள் தொடர்பாக DVAC விசாரிக்கும் நிலையில், பூங்காக்கள், கழிவுநீர் கால்வாய்கள், வாகனக் கொள்முதல் உள்ளிட்ட அனைத்து மோசடிகளையும் வெளிக்கொணர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. அரசுப் பணம் அடிதட்டு மக்களின் வியர்வை வரிப்பணம். அனைத்து கொள்முதல்களும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். இதில் தெரியவரும் முறைகேடுகளை ஆதாரங்களுடன் தொடர்ந்து வெளியிட உள்ளோம்.

அதேநேரம் மாநகராட்சி முறையான ஆவணங்களுடன் விளக்கம் தந்தால் அதையும் வெளியிட தயார். வாக்கி டாக்கி விவகாரத்தில் உண்மை நிலையை அறிய RTI மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் விளக்கம் மற்றும் RTI ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த இதழில் முழுப் பின்னணியையும் சான்றுகளுடன் வெளியிடுகிறோம்.

93170cookie-checkவாக்கி டாக்கி பிளாப்பி

Leave a Reply

error: Content is protected !!